தலைமைச்செயலகம் – இணையத் தொடர் விமர்சனம்
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் கிஷோர், ஷ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சித்தார்த் விபின், ஒ ஜி எம் , சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் இணையத் தொடர் ‘தலைமைச் செயலகம்.’

ஜிப்ரான் இந்த தொடருக்கு இசையமைக்க, வொய்டு ஆங்கிள் ரவிஷங்கர் ஒளிப்பதிவு. ரவிக்குமார் படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த தொடரை ராதிகா சரத்குமார் தயாரித்திருக்கிறார். 8 எபிசோட்களை கொண்ட இந்த தொடர், இம்மாதம் 17-ந் தேதி ஜீ5 இணையத்தில் வெளியாக இருக்கிறது.
தொடரில் தமிழக முதல்வராக வருகிறார் அருணாச்சலம் (கிஷோர்). இவர் மீது ஊழல் வழக்கு ஒன்று ஆந்திர கோர்ட்டில் நடந்து வருகிறது. சாட்சிகள் அனைத்தும் முதல்வருக்கு எதிராக திரும்பவே தீர்ப்பு முதல்வருக்கு பாதகமாக வரும் சூழ்நிலை. கிஷோர் சிறைக்குச் சென்று விட்டால், முதல்வர் நாற்காலியை பிடிப்பதற்காக திரைமறைவு திட்டங்கள் நடக்கின்றன. குறிப்பாக கிஷோரின் மூத்த மகளும் அமைச்சருமான ரம்யா நம்பீசன், கிஷோரின் இரண்டாவது மருமகனான நிரூப் நந்தகுமார் இருவருக்குமே முதல்வர் பதவி மீது கண். இன்னொரு பக்கம் கிஷோரின் நெருங்கிய நண்பரும் கட்சி ஆலோசகருமான ஸ்ரேயா ரெட்டியும் அப்பதவிக்கு குறி வைக்கிறார்.
பதவி ஆசை ஒருபக்கம் மனசோடு ஒட்டிக் கொண்டாலும் அப்பாவை காப்பாற்ற வேண்டும் என்றும் ஓடிக் கொண்டிருக்கிறார் ரம்யா. ஸ்ரேயா ரெட்டி மீது இருக்கும் நட்பால், அவர் சொல்வதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் முதல்வர் கிஷோர்.
அதேசமயம், ஜார்கண்ட் மாநிலத்தில் பல கொலைகளை செய்து தப்பி வந்த துர்காவை சிபிஐ போலீஸ் வலை வீசி தேடுகிறது. ஆனால் காக்கிகளிடம் சிக்காமலே தொடர்ச்சியாக முன்னாள் எம்.பி.க்களை தேடிப்பிடித்து கொன்று வருகிறார், துர்கா.
இந்நிலையில் தமிழகத்தில் நடக்கும் கொலை ஒன்றை விசாரிக்கிறார் போலீஸ் அதிகாரி பரத். இந்த வழக்கானது ஒருபுள்ளியில் வந்து இணைகிறது.
அந்த புள்ளி யார் மீது வந்து நிற்கிறது.? துர்கா யார்.? முதல்வர் கிஷோருக்கு தண்டனை வழங்கப்பட்டதா.? அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்.? போன்ற பல கேள்விகளுக்கு விடை, எதிர்பார்த்திராத கிளைமாக்ஸ்.
முதல்வர் கேரக்டரில் அசத்தல் நடிப்பை வழங்கியிருக்கிறார், கிஷோர். தனக்குப் பின்னால் கட்சியின் நிலைமை என்னாகும்என கலங்கி நிற்கிற இடத்தில் அந்த கேரக்டருக்கான நியாயம் செய்து விடுகிறார்,
கதையின் முக்கிய தூணாக நடிப்பில் பிரகாசிக்கிறார், ஸ்ரேயா ரெட்டி. கிளைமாக்ஸ்சில் அந்த திமிரும் படோடோபமும் தனிரகம். போலீஸ் அதிகாரியாக பரத், அந்த கேரக்டரின் கம்பீரத்துக்கு பெருமை சேர்க்கிறார். சிபிஐ அதிகாரியாக வரும் ஆதித்யா மேனனின் விசாரணைக் கோணங்கள் ரசிப்புக்குரியவை.
ரம்யா நம்பீசனுக்கு இந்த கேரக்டர் அவர் நடிப்பின் உச்சம். கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சந்தான பாரதி, கவிதா பாரதி அளவெடுத்த சட்டையாய் கேரக்டர்களுக்குள் பொருந்திக் கொள்கிறார்கள்..
இதுவரை பார்த்திராக அரசியலை மையமாக்கி மத்திய, மாநில அரசியலுக்குள் புகுந்து ஒரு சதுரங்க ஆட்டமே ஆடியிருக்கிறார், இயக்கிய வசந்தபாலன்.
தலைமைச்செயலகம், கத்தியும் யுக்தியுமான உணர்ச்சிப் பிழம்பு.
