The Goat Life ஆடு ஜீவிதம் விமர்சனம்
மலையாளத்தில் புகழ்பெற்ற பிளஸ்சி என்ற இயக்குனரால் இந்த படம் உருவாகியுள்ளது. நடிகர் பிரிதிவிராஜூக்காக 16 வருடங்கள் காத்திருந்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் பிளஸ்சி.
கேரளாவில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 29ஆம் தேதி தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தி கோட் லைஃப் என்ற இந்த படம் வெளியாகிறது.
பிரித்விராஜ் அமலாபால் ஜோடியாக நடிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற கதை என்றாலும் தமிழுக்காக கும்பகோணத்தில் நடைபெறுவதாக காண்பிக்கப்பட்டுள்ளது.
பிருத்விராஜ் மற்றும் அமலாபால் இருவரும் தம்பதியினர். தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக அரபு நாடு சென்று அங்கு கை நிறைய சம்பாதிக்க புறப்படுகிறார் நஜீப். (பிருத்விராஜ்).
இவரின் விசா ஏற்பாடுகளை கவனித்த ஏஜென்ட் இவரை ஏமாற்றி ஒரு வழியாக அரபு நாட்டுக்கு அனுப்பி வைக்கிறார். இதை தெரியாமல் பிருத்திவிராஜும் அவரது உறவினர் ஒரு பையனும் அங்கு செல்கின்றனர். இவர்களை அந்த அந்த அரபு நாட்டு ஷேக் பிரித்து விடுகிறார்.
பிருத்விராஜ் அரபு நாட்டுக்கு சென்று அரபி மொழி தெரியாமல் அங்கு ஒரு அடிமைத்தனமான வாழ்க்கையை வாழ்கிறார்.
அங்கு செம்மறி ஆடுகளை மேய்ப்பதும் ஒட்டகங்களை மேய்ப்பதும் குளிப்பாட்டுவதும் அதை பராமரிப்பதும் என்பது தான் இவரது வேலை. ஒரு மிகப்பெரிய பாலைவனத்தில் யாரும் ஆதரவு இன்றி இருக்கிறார்.
தனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை என்னை இந்தியாவிற்கு அனுப்பி வையுங்கள் என்று பல முறை கெஞ்சியும் எவரும் கேட்பார் இல்லை. எனவே அங்கேயே பிடிக்காத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் தன்னுடன் இந்தியாவில் இருந்து புறப்பட்ட உறவினர் பையனை சந்திக்கிறார். இவர்களுடன் ஒரு ஆப்பிரிக்க நண்பரும் இணைந்து கொள்கிறார்.
இவர்கள் மூவரு அங்கிருந்து தப்பிக்க என்ன செய்தனர் என்பது தான் படத்தின் மீதிக்கதை. அதன் பிறகு என்ன நடந்தது?
மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகர் பிரித்திவிராஜ் தமிழில் காவியத்தலைவன் மொழி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இந்த ஆடு ஜீவிதம் படத்தில் நஜீப் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.
தமிழில் கமல்ஹாசன் விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் உடலை எந்த அளவிற்கு வருத்த முடியுமோ அந்த அளவிற்கு உருகி நடித்திருப்பார்கள். அதுபோல ஒரு அர்ப்பணிப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் பிருத்விராஜ் கண்டிப்பாக இவருக்கு பல விருதுகள் கிடைக்கும்..
ஆப்பிரிக்க நபராக நடித்திருக்கும் ஹாலிவுட் நடிகர் ஜிம்மியும் மிகவும் யதார்த்தமான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார்.. நடக்க முடியாமல் தவிக்கும் பிரித்விராஜ் அவர் சுமந்து கொண்டு செல்வதும் மற்றொரு இந்திய சிறுவனுக்காக அவர் உருகி உதவுவதும் நம்மை கண்கலங்க வைக்கும். பிரித்விராஜ் உறவினர் பையன் நடிப்பும் அபாரம்.
வெளிநாட்டில் பாலைவனத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு இந்தியரின் கதை என எளிமையாக இந்த கதை சொல்லப்பட்டாலும் அங்கு அவர்கள் படும் ஒவ்வொரு வேதனைகளையும் ஒவ்வொரு துளிகளையும் அப்பட்டமாக படம் பிடித்திருக்கிறார் பிளஸ்சி.
அதற்கு ஏற்ப ஒளிப்பதிவாளரும் தன்னுடைய முழு ஒத்துழைப்பை கொடுத்திருக்கிறார்.. ஒவ்வொரு காட்சியிலும் நம்மை கலங்கடிக்கும் வகையில் காட்டி இருக்கின்றனர்.
அது போல கேரளா காட்சிகளை காட்டும் போது ஒரு கவிதைத்தனமான காதலையும் காட்டி இருக்கின்றனர்.. முக்கியமாக அமலா பாலுக்கு பிரிதிவிராஜ் நீச்சல் கற்றுக் கொடுக்கும் அந்த ஒரு காட்சியே போதும்.. அந்த அளவிற்கு அந்த பாடலும் அந்த உணர்வுபூர்வமான நடிப்புக்கும் பாராட்டலாம்.
பாலைவனத்தில் தன் நண்பனை இழந்து பிரித்திவிராஜ் தவிக்கும் அந்த தவிப்பு.. பல பாம்புகள் ஊர்ந்து செல்லும் காட்சி தண்ணீருக்காக அலையும் காட்சிகள் உணவின்றி தவிக்கும் தருணம், தனக்கு உதவிய ஆப்பிரிக்க நண்பன் எங்கே தொலைந்தான் எனத் தேடும் அந்த பரிதிவிப்பு என ஒவ்வொன்றையும் அழகாகவே படம் பிடித்து பிரித்திவிராஜை ஒரு சிறந்த நடிகனாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.
பாலைவனத்தில் வீசும் சூறாவளி காற்று நம்மை நிச்சயம் நடுநடுங்க வைக்கும் அதற்கு ஏற்ப ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை நம்மை சிலிர்க்க வைக்கிறது. முக்கியமாக அவரது பின்னணி இசை நம்மை உணர்வு பூர்வமாக கடத்திச் சென்று இருக்கிறது.
சவுண்ட் இன்ஜினியர் ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இந்த பட பணிகளை கவனித்து இருக்கிறார். மண் சரிவது முதல் செம்மறி ஆடு ஒட்டகம் கத்துவது முதல் என ஒவ்வொன்றையும் ஒலி குரலாக அழகாகவே காட்டியிருக்கிறார்..
குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காக மனைவிக்காக அவர்களை சந்தோஷமா வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளில் சென்று மரண விளிம்பில் இருக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த படம் சமர்ப்பணம் ஆகும்.