சினி நிகழ்வுகள்திரை விமர்சனம்

நேற்று இந்த நேரம் பட விமர்சனம் 3.25/5

நண்பர்கள் ஏழு எட்டு பேர் சுற்றுலா செல்கின்றனர். அங்கே இருக்கும் ஒரு காட்டு பங்களாவில் தங்கி உல்லாசமாக இருக்கின்றனர். இவர்களில் மூன்று காதல் ஜோடிகளும் உள்ளனர்.

இதில் நாயகன் ஷாரிக்ஹாசன் தன் காதலிக்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார். உன்னை எனக்கு பிடிக்கும்.. ஆனால் கல்யாணம் பிடிக்காது. வேண்டுமென்றால் லிவிங் டுகதர் முறையில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழலாம் என்கிறார். ஆனால் இதற்கு நாயகி ஒத்து வர மறுக்கிறார்.

இவர்களின் காதல் முறிவை அறிந்த மற்றொரு நண்பர் நாயகிக்கு காதல் வலை வீசுகிறார்.. இதனால் நாயகனுக்கும் நண்பனுக்கும் மோதல் வருகிறது. இந்த சூழ்நிலையில் நாயகனை அடுத்த நாள் முதல் காணவில்லை.. நண்பன் தான் அவனைக் கொன்று இருப்பான் அல்லது ஏதாவது செய்திருப்பான் என அனைவரும் சந்தேகிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் நண்பனே போலீஸ்க்கு போன் செய்து தங்கள் நண்பனை (நாயகனை) காணவில்லை என்கிறார்.

போலீஸ் விசாரணைக்கு வருகிறது.. ஒருவர் ஒவ்வொருவராக விசாரணையை தொடங்குகிறது. அப்போது பல திருப்பங்கள் விசாரணையில் தெரிய வருகிறது.

அப்படி என்றால் நாயகன் எங்கே? இறந்தது உண்மையா? இவர்கள் என்ன செய்தனர்?என்பது தான் படத்தின் மீதிக்கதை.

நாயகன் சாரிக் ஹாசன் என்றாலும் அவரை ஒரு ஆன்டி ஹீரோவாகவே காட்டி இருக்கின்றனர்.. அவரும் ஒவ்வொரு பெண்களுடனும் உல்லாசமாக இருந்து கழட்டி விடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். பாடல்களிலும் நடனத்திலும் அசத்தியிருக்கிறார்.

ஹரிதா மோனிகா காவ்யா என மூன்று நாயகிகளும் இளமைத்துள்ளலுடன் காணப்படுகின்றனர்.

ஸ்ரேயா கேரக்டரில் நடித்துள்ள நடிகை அதிகமாக கவருகிறார்.. மற்ற நாயகிகளுக்கு நடிப்பில் முதிர்ச்சி தேவை. நாயகனின் நண்பர்களாக வருபவர்கள் தங்களுக்கு கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கின்றனர்.

போலீஸ் விசாரிக்கும் போது திரும்பத் திரும்ப அதே காட்சிகளை வருவதால் நமக்கு எரிச்சல் ஏற்படுகிறது. ஒரு காட்சியில் போலீஸ் கூட போதும்பா திரும்பத் திரும்ப அதையே சொல்லாதீங்க என்கின்றார்.. அவரே வெறுக்கும் அளவிற்கு காட்சிகள் இடம் பெற்று இருப்பதை இயக்குனர் தவிர்த்து இருக்கலாம்.

சாய் ரோஷன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. நேற்று இந்த நேரம்’ என்ன நடைபெற்றது என்பது கதைக்களமாக கொண்டு அடுத்த காட்சிகளை நகர்த்தி இருக்கிறார்.

ஒவ்வொரு காட்சி இடம்பெறும் போது நேற்று இன்று நாளை என்பது போல அதன் நேரத்தை ஒப்பிட்டு காட்சிகளை நகர்த்தி இருப்பது புத்திசாலித்தனம் காட்டுகிறது.

ஒளிப்பதிவாளர் விசாரணை காட்சிகளில் கேமராவை ஒரே இடத்தில் வைத்து சென்று விட்டார் என்னவோ அது ரிப்பீட் ஆவது நமக்கு போர் அடிக்கிறது.. பொறுமையை சோதிக்கிறது.

பாடல்களும் பின்னணி இசையும் கவர்கிறது.. ஊட்டி போன்ற ஒரு அழகான மலைப் பிரதேசத்தை காட்டும் போது அழகான இடங்களை காட்டாமல் ஒரு அறைக்குள் ஒட்டுமொத்த படத்தை நகர்த்தி இருப்பது ஏன் என்பது புரியவில்லை..?

இது போன்ற திரில்லர் கதைகளை கொடுக்கும்போது கொஞ்சம் விறுவிறுப்பாக கொடுத்து இருந்தால் நேற்று இந்த நேரம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *