திரை விமர்சனம்

சிங்கப் பெண்ணே விமர்சனம்

அதிகாரம் கொண்டவர்களை எதிர்த்துப் போராடும் ஒரு சாமானியனின் கதை தான் இந்த சிங்கப் பெண்ணே..

ஏழை சிறுமி தேன்மொழி பூப்பெய்துகிறாள்.. அன்று அவளுக்கு சிறப்பு செய்யும் குடிகார முறை மாமன் இவளை கட்டிக் கொள்வேன் என அடம் பிடிக்கிறார்.

தேன்மொழியிடம் இருக்கும் நீச்சல் திறமையை கண்டறியும் நீச்சல் பயிற்சியாளர் ஷாலினி அவளை பெரும் சாதனையாளராக மாற்ற போராடுகிறார்.

இவர்களுக்கு இடையில் நடக்கும் போராட்டம் தான் இந்த படம் ‘சிங்கப் பெண்ணே’.

இதனிடையில் தேன்மொழியை சாதனையாளர் ஆக்க ஷாலினியின் விருப்பம் ஏன்? அவளது பின்னணி என்ன? என்பதும் படத்தின் மீதிக்கதை.

நீச்சல் பயிற்சியாளர் ஷாலினியாக சில்பா மஞ்சுநாத்.. அவரது நடிப்பும் இளமை துடிப்பும் நிச்சயம் நம்மை ஈர்க்கும்.. தன் கேரக்டர் மூலம் சிலிர்க்க வைக்கிறார் ஷில்பா.

தேன்மொழியாக ஆர்த்தி. அவரது முகத் தோற்றம் முகத்தில் கூட உயிரோட்டம் தருகிறது… நீச்சலில் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தாலும் நீச்சல் உடை அணியும் போதும் அவர் முகத்தில் வெட்கம்.. அவமானங்களால் ஏற்பட்ட வேதனை என அனைத்தையும் நன்றாகவே பிரதிபலிக்கிறார்.. இவர் நிஜ வாழ்க்கையிலும் நீச்சலில் சாதித்த பெண் என்பது குறிப்பிடத்தக்கது..

சமுத்திரக்கனி ஒரே ஒரு காட்சியும் வந்தாலும் நம் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்தி செல்கிறார்.. அவர் அறிமுகப்படுத்தும் மாற்றுத்திறனாளி மாதவி லதா பலருக்கு சாதனைப் பெண்மணியாக திகழ்வார்..

ஐஏஎஸ் அதிகாரியாக பிரேம் நடித்திருக்கிறார்.. தன் மகளுக்காக நீச்சல் போட்டியில் அவர் செய்யும் வில்லத்தனம் செம..

இவர்களுடன் சென்ராயன் & வெங்கடேஷ் ஆகியோரும் உண்டு.. இதில் குடிகார சென்ராயன் செய்யும் அலப்பறை சிறப்பு தன் மகளின் நீச்சல் உடைய எரிக்கும் அப்பா வெங்கடேசன் கேரக்டர் எரிச்சல் அடைய வைக்கிறது..

ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் படத்திற்கு பெரும்பலமாக அமைந்திருக்கிறது.. நீச்சல் போட்டி காட்சிகள் கண்களுக்கு குளிர்ச்சி.

டிரம்ஸ் சிவமணியின் வாரிசான குமரேசன் சிவமணி தான் இசையமைத்திருக்கிறார். இவரது இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு உறுதுணை.

ஒரு பெண் நினைத்தால் எதையும் செய்து முடிப்பார் என்ற கருத்தை வலியுறுத்தும் படமாக இது அமைந்திருக்கிறது.

முக்கியமாக பெண்கள் பல துறைகளில் சிறந்து விளங்கினாலும் நீச்சலில் ஒரு சிலரே உள்ளனர்.. அதிலும் இந்த தேன்மொழி கேரக்டர் நடித்துள்ள நிஜ வீராங்கனை ஆர்த்தி நம்மை வியக்க வைக்கிறார்.

சிங்க பெண்ணே என்ற தலைப்பில் வைத்து இது பெண்களுக்கான கதை என்றாலும் அதை ஒரு ஆண் இயக்குநர் ஜெ எஸ் பி சதீஷ் இயக்கியிருப்பது சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *