திரை விமர்சனம்

லால் சலாம் விமர்சனம்

ரஜினி – நிரோஷா முஸ்லீம் தம்பதிகள்.. இவர்களின் மகன் விக்ராந்த்.

லிவிங்ஸ்டன் – ஜீவிதா ஹிந்து தம்பதிகள்.. இவர்களின் மகன் விஷ்ணு விஷால்..

வெவ்வேறு மதமாக இருந்தாலும் ரஜினியும் லிவிங்ஸ்டன்னும் நட்பாக பழகுகின்றனர்.. ஒரு கட்டத்தில் பிழைப்புக்காக தன் குடும்பத்துடன் மும்பை செல்கிறார் ரஜினி. அங்கு பெரிய பிசினஸ் மேனாகவும் வளர்ந்து நிற்கிறார்.

இந்த சூழ்நிலையில் தன் கிராமத்தில் நடக்கும் ஒரு கிரிக்கெட் போட்டியில் விஷ்ணு விஷாலுடன் மோத விக்ராந்த் வரவழைக்கப்படுகிறார். கிரிக்கெட் போட்டி என்றாலும் ஒரு கட்டத்தில் இது ஹிந்து முஸ்லிம் மோதல் போட்டியாகவே பார்க்கப்படுகிறது.

போட்டியில் ஏற்பட்ட தகராறு ஒன்றில் விக்ராந்தின் கையை முறித்து விடுகிறார் விஷ்ணு..

இதன் பிறகு என்ன ஆனது? தன் மகன் விக்ராந்தின் மீது பாசம் வைத்த ரஜினிகாந்த் என்ன செய்தார்? தன் மகனை காப்பாற்றினாரா? தன் நண்பன் மகனை காப்பாற்றினாரா? கிரிக்கெட் போட்டி மதக்கலவரமாக மாறியதா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

ரஜினியை சங்கி என்று அழைப்பதற்கு தன் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார் ஐஸ்வர்யா ரஜினி.. ஒரு சங்கியாக பார்க்கப்படுபவர் என்றால் நிச்சயமாக மொய்தீன் பாய் கேரக்டர் ஏற்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.. அதற்கு ஏற்ப மொய்தீன் பாய் கேரக்டரில் ரஜினியை ஜொலிக்க விட்டுள்ளார்.. அந்த கேரக்டர் வசனங்களும் அதற்கு ஏற்ப ஷார்ப்பாக அமைந்திருக்கிறது.

தன் மகனுடன் கற்பனையில் ரஜினி விளையாடும் கிரிக்கெட் வித்தியாசமான கற்பனை. அதற்கு ஏற்ப ரஜினியின் ஆக்டிங்கும் சிறப்பு..

கெஸ்ட் ரோலில் ரஜினி என சொல்லப்பட்டாலும் படம் முழுக்க வரும் வகையில் ரஜினியின் மொய்தீன் பாய் கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கிறது. தன் பங்கை சிறப்பாகவும் அதிரடியாகவும் செய்திருக்கிறார் ரஜினிகாந்த்.. ஆக்சன் எமோஷன் என இரண்டையும் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார்..

ரஜினியின் மனைவியாக நிரோஷா ரஜினியின் நண்பனாக லிவிங்ஸ்டன்.. நண்பனின் மனைவியாக ஜீவிதா.. இவர்களின் கேரக்டர்கள் படத்தின் கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கின்றன.. ஜீவிதா & நிரோஷாவின் கேரக்டர்கள் 80ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தவையாக இருக்கும்..

கிரிக்கெட் வீரராகவே தன் திருநாவுக்கரசர் கேரக்டரை தெறிக்க விட்டுள்ளார் விஷ்ணு விஷால்.. இவர் சொன்னது போல ரஜினி படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.. இவருக்கும் அனந்திக்காவுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனாலும் காட்சிகள் குறைவே..

ரஜினியின் மகனாக விக்ராந்த்.. ஒரு கையை இழந்த பின் இவரது எமோஷன் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.. தந்தைக்கும் மகனுக்குமான மோதல் காட்சிகள் சிந்திக்க வைக்கின்றன..

கெஸ்ட் ரோலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் நடித்திருக்கிறார்..

மூணார் ரமேஷ், விவேக் பிரசன்னா, தம்பி ராமையா மற்றும் செந்தில் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலம்..

விஷ்ணு ரங்கசாமி என்பவர் ஒளிப்பதிவு செய்ய இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். திரைக்கதை மற்றும் இயக்கத்தை ஐஸ்வர்யா ரஜினி செய்திருக்கிறார்.

இந்து முஸ்லிம் கதைக்களம் என்பதால் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்ற வகையில் பாடல்களை கொடுத்திருக்கிறார். ஜலாலி என்ற பாடல் முஸ்லிம்களுக்காகவும் தேர்த்திருவிழா என்ற பாடல் இந்துக்களுக்காகவும் மெட்டு அமைத்திருக்கிறார். ரஜினிக்கான அறிமுக மியூசிக் அதிர வைக்கிறது..

ஒளிப்பதிவாளர் விஷ்ணு 1990 காலகட்டங்களை போல அழகாக படம் பிடித்து ரசிகர்களுக்கு காட்சி விருந்து அளித்திருக்கிறார். படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம் எடிட்டர்.. முக்கியமாக ஆறு மாதத்திற்கு முன்பு என செல்லும் கதையில் திடீரென ஆறு மாதத்திற்கு பின்பு என சொல்லி அதற்குள் ஒரு பிளாஷ்பேக் வைத்து என திரைக்கதையை கொஞ்சம் குழப்பி இருக்கிறார்..

இன்றைய சூழ்நிலையில் மதத்திலும் விளையாட்டிலும் அதிகமாக பார்க்கப்படும் அரசியலை கதைக்களமாக அமைத்திருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினி..

மத நம்பிக்கையின் மேல் மனிதநேயத்தை வைக்க வேண்டும்.. விளையாட்டில் அரசியல் கூடாது என்ற வசனங்கள் கைதட்ட வைக்கின்றன.

ஹிந்து மதமும் முஸ்லிம் மதமும் எதுவாக இருந்தாலும் கடவுளை படைத்தவன் மனிதன் தான். தேர்த்திருவிழா என்பது கடவுளுக்காக அமைக்கப்பட்டது மட்டுமல்ல.. தன் உறவினர்கள் நண்பர்களும் ஒன்று கூட வேண்டும் சந்தோஷமாக அனைவரும் வாழ வேண்டும் என்பதற்காக மனிதன் அமைத்த ஒன்றுதான் என்ற செந்தில் வசனங்களும் ரசிக்க வைக்கின்றன..

பாபர் மசூதி இடிப்புக்கு பின் பேசப்பட்ட அரசியலையும் காட்சியாக வைத்திருக்கிறார். வெறுமனே அரசியல் பாடம் நடத்தாமல் மத நம்பிக்கை ஓகே மதவெறி கூடாது எனவும் அட்வைஸ் செய்திருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினி..

லால் சலாம் : 3.75/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *