நந்திவர்மன் விமர்சனம்.. கோயில் புதையல்
கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த கதையை திரைக்கதை ஆக்கியிருக்கிறார் இயக்குனர்.
செஞ்சி பகுதியில் நந்திவர்மன் கட்டிய சிவன்கோவில் ஒன்று மண்ணுக்குள் புதைந்து விட்டதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது.
அந்த கோய்லில் புதையல் இருப்பதும் தொல்லியல் துறைக்கு தெரிய வருகிறது.
எனவே தொல்லியல் துறை பேராசிரியர் நிழல்கள் ரவி, அதிகாரி போஸ் வெங்கட் ஆகியோர் தலைமையில் சில மாணவர்களுடன் அந்த இடத்திற்கு செல்கின்றனர்.
இவர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ளும் போது அடுத்தடுத்து சில மர்மக் கொலைகள் நடக்கின்றன. இதனால் அந்த ஊர் மக்கள் ஆராய்ச்சி செய்ய விடாமல் தடுக்கின்றனர்.
மீசை ராஜேந்திரன் & சுரேஷ் ரவி ஆகியோர் தலைமையிலான போலீஸ் விசாரணையில் இறங்குகிறது.
அங்கு நடக்கும் அமானுஷ்ய வேலை என்ன? இதன் பின்னணியில் இருப்பவர் யார்? என்பதே படத்தின் மீதி கதை
நாயகனாக சுரேஷ் ரவி மிடுக்கான தோற்றம்.. போலீஸ் கேரக்டருக்கு செம ஃபிட்டாக இருக்கிறார்.
நாயகியாக ஆஷா வெங்கடேஷ்.. முதலில் சின்னப் பெண் போல தெரியும் அவர் கதை நகர நகர கதைக்கு ஏற்ப நாயகனுக்கு ஏற்ப தன்னுடைய உடல் மொழியை மாற்றி நடித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் போஸ் வெங்கட். அவரது அனுபவ நடிப்பு படத்திற்கு பெரிய பிளஸ்.
நிழல்கள் ரவி & கஜராஜ் ஆகியோரின் கதாபாத்திரம் திருப்புமுனையை உண்டாக்குகிறது. எதிர்பாராத ட்விஸ்ட்..
மீசை ராஜேந்தர், ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர், கோதண்டம், ஜே.எஸ்.கே.கோபி என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்கள் சிறிய வேடங்களில் நடித்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சேயோன் முத்து.. தொல்லியல் துறை ஆராய்ச்சிக்கு ஏற்ப தன்னுடைய கேமராவையும் ஆராய்ச்சி செய்து இருப்பார் போல.. நுணுக்கமாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
அறிமுக இயக்குநர் ஜி.வி.பெருமாள் வரதன்… மறைந்து போன புதைந்து போன தமிழக வரலாற்றை மக்களுக்கும் ரசிகர்களுக்கும் எடுத்துச் சொல்ல இந்த நந்திவர்மனை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். திரைக்கதை அமைத்த விதத்தில் பெரிய முயற்சி எடுத்த இயக்குனர் நடிகர்கள் தேர்விலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். அல்லது நடிகர்களிடம் இன்னும் கூடுதல் வேலையை மெனக்கெட்டு வாங்கி இருக்கலாம்.
ஜெரால்டு ஃபிலிக்ஸ் இசையில் கேட்கும் படியாக உள்ளது. ஆக்சன் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருப்பது தெரிகிறது.
ஸ்டண்ட் மாஸ்டர் சுகேஷின் சண்டைக்காட்சிகள் படத்திற்கு பலம் முக்கியமாக இரவு நேர சண்டைக் காட்சி சின்னதாக இருந்தாலும் ரசிக்கும்படியாக உள்ளது.
நந்திவர்மனின் மாய வாள், கிராபிக்ஸ் காட்சியாக இருந்தாலும் ரசிக்கும் படியும் வகையில் கொடுத்திருக்கிறார் கலை இயக்குனர்.