மதிமாறன் விமர்சனம்.. 4/5.. குள்ளம் குறையில்லை
பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் உருவான படம் ‘மதிமாறன்’.
ஒரு கிராமத்தில் தபால்காரராக பணிபுரிகிறார் எம் எஸ் பாஸ்கர். இவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கிறது. ஒருவர் இவானா. மற்றொருவர் வெங்கட் செங்குட்டுவன்.
வருடங்கள் வளர்ந்தாலும் வெங்கட் வளரவில்லை. இவரது உயரம் 3.5 அடி மட்டுமே. இதனால் இவரை பள்ளியிலும் கல்லூரியிலும் கேலி செய்கின்றனர்.
ஆனால் தன்னுடைய அறிவாலும் தன்னுடைய திறமையாலும் மற்றவர்களை அசத்தி வருகிறார்.
ஒரு கட்டத்தில் கல்லூரியில் படிக்கும் இவானா திடீரென காதலுடன் ஓடி விடுகிறார். இதனால் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுகிறது. பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
உடன் பிறந்தவளையும் தொலைத்து பெற்றோர்களையும் இழந்து தவிக்கும் வெங்கட் அதன் பிறகு என்ன செய்தார் என்பதுதான் படத்தின் மீதி கதை.
இவானா நாயகியாக நடிக்க வெங்கட் செங்குட்டுவன் நாயகனாக நடித்துள்ளார். இவர்கள் அக்கா தம்பியாக ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளாக நடித்துள்ளனர்.
பெரும்பாலும் இது போன்ற குள்ளர்கள் நடிக்கும் படத்தில் காமெடி அதிகமாக இருக்கும். அவர்களை கிண்டல் செய்யும் காட்சிகளை அதிகமாக இருக்கும் ஆனால் இதில் இந்த குள்ளமான மனிதருக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை படம் போட்டு காட்டி இருக்கிறார் இயக்குனர்.
அதுபோல வெங்கட் செங்கட்டுவனும் வேற லெவல் பெர்ஃபார்மன்ஸ் செய்து இருக்கிறார் இவர் தான் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் ஏலியனாக நடித்திருக்கிறார்.
கிளைமாக்ஸ் காட்சியில் வசனங்கள் கைத்தட்டல் பெறும். முக்கியமாக சச்சின் அண்ணாதுரை குள்ளமானவர்கள்.. ஆனால் இவர்கள் சாதனையாளர்கள் என்ற டயலாக் வரும. சாதித்தால் மட்டும்தான் எங்களை சாதாரண மனிதனாக ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் என்ன சாதித்து விட்டீர்கள் என ஒரு சராசரி உயர மனிதனைப் பார்த்து கேட்கும் போது அதற்கு பதில் சொல்லாமல் முழிப்பார்.
நாங்களும் ஒரு சராசரி மனிதன் தான் என வெங்கட் சொல்லும்போது நிச்சயம் நீங்கள் வெல்டன் என சொல்வீர்கள்.
மேலும், ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பாவா செல்லதுரை, E.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
அழகிலும் அருமையான நடிப்பிலும் நம்மை கவர்கிறார் இவானா. மதி என்ற கேரக்டருக்கு மகுடம் சூட்டி இருக்கிறார்.
போலீசாக வேண்டும் என இவர் பள்ளியில் சொல்லி அதுபோல போலீஸ் ஆன பின்னர் அவர் உடுத்தும் உடையும் அந்த மிடுக்கும் நம்மை நிச்சயம் கவரும்.
எம் எஸ் பாஸ்கருக்கு நடிக்கவா சொல்லிக் கொடுக்க வேண்டும்? பல காட்சிகள் வந்தாலும் ஒரு குட்டி கதை சொல்லி நம்ம நிச்சயம் அழ வைத்து விடுவார்.
ஆடுகளம் நரேன்.. அவரின் மகன் போலீஸ் ஆபீஸர் ஆகியோர் கேரக்டர்களும் கச்சிதம்.
ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ளது
இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்க பர்வேஸ் கே ஒளிப்பதிவு செய்ய சதீஷ் சூர்யா படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
கார்த்திக் ராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் நம் மனதை விட்டு நிச்சயம் அகலாது.. நீண்ட நாள்களுக்குப் பிறகு அருமையான பாடல்கள்.. முக்கியமாக இளையராஜா குரலில் ஒலிப்பது போன்ற பாடல்களைக் கேட்க முடிந்தது.
குள்ளம் என்பது குறையில்லை அதை மதியால் வெல்லலாம் என அழகாக சொல்லி இருக்கிறார் மந்த்ரா வீரபாண்டியன். மேக்கிங் கில் ஒரு சில குறைகள் இருந்தாலும் தங்கள் உள்ளத்தால் உயரமானவர்கள் அவர்களால் நம்மால் சாதிக்க முடியாததையும் சாதிக்க முடியும் என நெற்றியில் அடித்தார் போல் சொல்லி இருக்கிறார்.
ஆக மதிமாறன்.. குள்ளம் குறையில்லை