மீண்டுமொரு காதல் காவியம்..; ஜோ விமர்சனம் 4.5/5
நாம் பார்த்து ரசித்த 96.. ஆட்டோகிராப்.. போன்றதொரு நல்ல ஒரு பீல் குட் மூவி இந்த ஜோ.
படத்தின் ஆரம்பத்தில் நாயகனின் ஸ்கூல் லைப் சீன்கள் உள்ளன.. அது ஏதோ வந்து போகும் பத்து நிமிடத்தில் முடிவடைந்தாலும் அதுதான் படத்திற்கான திருப்புமுனை.
அதன் பிறகு கல்லூரியில் சேருகிறார் நாயகன் ஜோ (ரியோ ராஜ்) அதே வகுப்பில் படிக்கும் மாணவி மாளவிகா மனோஜ். ஒரு மலையாளி பெண். மாளவிகாவை பார்த்தவுடன் காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் நாயகியும் காதல் கொள்கிறார்.
படிப்பு முடிந்ததும் இருவரும் அவரவர் வீட்டுக்கு பிரிந்து செல்கின்றனர். ஆனாலும் காதல் தொடர்கிறது.. போன் செய்தால் இவர் பிஸி அவர் போன் செய்தார் இவர் பிஸியாக இருப்பதால் இருவருக்கும் விரிசல் ஏற்படுகிறது.
இந்த சூழ்நிலையில் மற்றொரு நாயகி பவ்யா ரியோ ராஜ் வாழ்வில் எப்படி வந்தார்? முதல் காதலி என்ன ஆனார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
இதற்கு முன்பு ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ உள்ளிட்ட சில படங்களில் பார்த்து இருந்தாலும் இதில் முற்றிலும் மாறுபட்ட ரொமான்டிக் ஹீரோவாக உருவெடுத்துள்ளார் ரியோ ராஜ்.
காதலை தயங்கி தயங்கி சொல்லும் இடத்தில் இதயம் பட நாயகன் முரளியை நினைவுபடுத்துகிறார். ஒரு கட்டத்தில் பவ்யாவை மனமுடித்து இல்லற வாழ்க்கையில் பிரச்சனை சிக்கும் போது பண்பட்ட நடிப்பை கொடுத்துள்ளார்.
முதல் பாதி முழுவதும் ரொமான்டிக்காக சென்ற கதையில் இரண்டாம் பாதியில் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கொஞ்ச நேரமே செக்யூரிட்டியாக சார்லி வந்தாலும் சபாஷ் போட வைக்கிறார். நாயகனின் நண்பர்களாக வருபவர்களில் அன்பு தாசனும் உயரமான கருப்பாக இருப்பவரும் கலகலப்புக்கும் நட்புக்கும் வலிமை கொடுத்துள்ளனர்.
நாயகி மாளவிகா மனோஜ்க்கு தமிழில் இதுதான் முதல் படம். நிஜத்திலும் மலையாளியான இவர் காதலை உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
பெண்களுக்கே உரித்தான திடீர் மனமாற்றத்தை கண்களில் சொல்லி இருக்கிறார். இரண்டாம் நாயகி பவ்யா.. பவ்யமாக வந்து பட்டையை கிளப்பி இருக்கிறார்.
சொல்லப்போனால் இரண்டு நாயகிகளும் நடிப்பில் போட்டி போட்டு ஸ்கோர் செய்திருக்கின்றனர்.
நாயகனின் அம்மாவும் யதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார். முக்கியமாக அந்த பெண் உன் மீது வைத்த காதலை நினைத்து கவலைப்படுகிறாயே எங்களை நினைத்து கவலைப்படுகிறாயா? ஃபர்ஸ்ட் சைட் ஃபர்ஸ்ட் லவ் என்ற வசனங்கள் பளிச்சிடுகின்றன.
ஹரிஹரன் ராம் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இவர் அறிமுக இயக்குனர் என்று அவரே சொன்னாலும் நம்மால் நம்ப முடியாது. அப்படி ஒரு அழகான திரைக்கதையை அமைத்து காதல் காவியத்தை கொடுத்திருக்கிறார்.
படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருப்பது சிந்துக்குமாரின் இசையுப் பாடல்களும்.. நம் மனதை விட்டு அகல மறுக்கிறது.
படத்தின் ஒளிப்பதிவும் படத்தொகுப்பு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாம் ஏதோ ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் செய்த ஒரு உதவி நமக்கு உதவி செய்யும் என்ற கருத்தை வலியுறுத்தி காதலுக்கு வெற்றி கொடி காட்டி இருக்கிறார் இந்த ஹரிஹரன்.