திரை விமர்சனம்

‘ரெய்டு விமர்சனம்..; அருவா போலீஸ் போலீசுக்கும் ரவுடி கும்பலுக்கும் நடக்கும் வழக்கமான மோதல் தான் ‘ரெய்டு’.

 


போலீசுக்கும் ரவுடி கும்பலுக்கும் நடக்கும் வழக்கமான மோதல் தான் ‘ரெய்டு’.

நேர்மையான போலீஸ் அதிகாரி விக்ரம் பிரபு. காசு கொடுத்துதான் டீ கூட குடிப்பவர் இவர்.. இவரின் காதலி பல் மருத்துவர் ஸ்ரீதிவ்யா. இவரின் தங்கை அனந்திகா.

வேலு பிரபாகரன் மெயின் ரவுடி. அதன் பிறகு ரிஷி மற்றும் சௌந்தரராஜா டேனியல் இவர்கள் மூவரும் கேங்ஸ்டர் கும்பல். இவர்களை சுற்றி நடக்கும் போர்க்களம் தான் இப்படத்தின் கதை.

தன் காதலி ஸ்ரீதிவ்யாவை கொன்றவர்களை ரெய்டு செய்து என்கவுண்டர் செய்யும் போலீஸ் அதிகாரி விக்ரம் பிரபு.

காதலி ஏன் கொல்லப்பட்டார்.? விக்ரம் பிரபுவுக்கும் ரவுடி கும்பலுக்கும் என்ன என்ன பிரச்சனை? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

விக்ரம் பிரபு போலீஸ் அதிகாரியாக அருவாள் வெட்டு.. என்கவுண்டர்.. என மிரட்டி இருக்கிறார். தெருவில் குடிகாரன் அவன் மனைவியை அடித்தாலும் தட்டிக் கேட்கும் குணம் கொண்டவராக கவர்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்திருப்பது பாராட்டுக்குரியது.

இந்தப் படத்தில் ஸ்ரீதிவ்யா தான் நாயகியா அவரை காணாமே எனத் தேடிக் கொண்டிருக்கும்போது இடைவேளை முடிந்த பிறகு வருகிறார். அப்போது தியேட்டரில் சில கைத்தட்டல்களை கேட்க முடிந்தது. கொஞ்ச நேரமே என்றாலும் நம் மனதை திவ்யமாக கவர்கிறார்.

நாயகி தங்கையாக தமிழில் அறிமுகம் ஆகிறார் அனந்திகா. துறுதுறு பெண்ணாக கொஞ்சும் குமரியாக ஆனந்தப்படுத்தி இருக்கிறார்.

ரவுடியாக சவுந்தரராஜா.. இவர் கவிதை எழுதி காதல் செய்யும் ரவுடியாக வித்தியாசம் காட்டி இருக்கிறார். படத்துக்கு படம் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடிப்பது தானே நடிகனுக்கு அழகு.. சபாஷ் சௌந்தரராஜா.

இவரின் நண்பராக ரிஷி.. அவரும் இதுவரை ஏற்காத ரவுடிசத்தை காட்டி வில்லத்தனம் செய்திருக்கிறார். பல படங்களில் காமெடியனாக வந்த டேனியும் இதில் வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.

படத்திற்கு வாய்ஸ் அவர் கொடுத்து பாசம் மிக்க மாமாவாக செல்வா நடித்திருக்கிறார். இவருடன் வேலு பிரபாகரன் & ஜீவா ரவி உள்ளிட்டோரும் உண்டு.

கதிரவனின் ஒளிப்பதிவில் அனந்திகாவின் டூயட்டும்.. ஆக்சன் காட்சிகளும் அருமை.

சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார். ஸ்ரீதிவ்யாவின் டூயட் பாடல் காட்சிகள் சிறப்பு. எப்போதும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்யும் சாம் இந்த படத்தில் காட்டுக் கத்தல் போட்டு இரைச்சலை ஏற்படுத்தியிருக்கிறார்.

மேலும் படத்தை எடிட் செய்த மணிமாறன் என்ன நினைத்தாரோ ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு பிளாஷ் பேக் கொடுத்து அதனை குழப்பமாகவே விட்டுள்ளார். மேலும் விக்ரம் பிரபு – அனந்திக்கா விபத்து சீன் முழுமையாக இல்லை என்பது வருத்தமே.

எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் ரெய்டு படத்தை தயாரித்துள்ளது. இயக்குனர் முத்தையாவின் தங்கை மகன் கார்த்தி என்பவர் ரெய்டு படத்தை இயக்கியிருக்கிறார்.

இயக்குனர் முத்தையாவின் ஒத்துழைப்போடு இந்த படத்தை கார்த்தி இயக்கியிருக்கிறார். முத்தையாவின் படத்தில் இருக்கும் உணர்வுபூர்வமான காட்சிகள் இதில் மிஸ்ஸிங்.

பொதுவாக போலீஸ் கையில் துப்பாக்கி இருக்கும்.. இதில் துப்பாக்கி ஒரு கையில் அருவா ஒரு கையில் என விளாசி இருக்கிறார் விக்ரம் பிரபு.. என்னதான் சட்டம் கையில் இருந்தாலும் ரவுடிகளை ஒழிக்க அருவாளும் தேவை என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்தி.

ஒரு காட்சியில் விக்ரம் பிரபு கையில் துப்பாக்கி இருக்கும்போது எதிரே நிற்கும் வில்லன் என் கையில் அருவா இருக்குது என்கிறார்.. இது தேவையற்ற காட்சி.? துப்பாக்கி இருக்கும்போது அருவா என்ன செய்துவிட போகிறது.? இதை கூடவா வசனகர்த்தா கவனிக்கவில்லை.

ஆக.. ரவுடியிசத்தை ரெய்டு செய்யும் போலீஸ் பிரபாகரன் இவன்.