திரை விமர்சனம்

ஜப்பான் விமர்சனம்… ஜாலி தீபாவளி

ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘ஜப்பான்’.

இதில் அனு இமானுவேல், ஜித்தன் ரமேஷ், சுனில், கே.எஸ்.ரவிகுமார், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர், பவா செல்லதுரை உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படத்தை எஸ்.ஆர்.பிரபுவின்
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்
தயாரித்துள்ளது.

ஒரு நகைக்கடையில் 200 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடிக்கிறார் ஜப்பான் (கார்த்தி). இதனால் அரசியல்வாதி கேஎஸ் ரவிக்குமார் காவல்துறைக்கு கட்டளையிட்டு பிடிக்க கட்டளை இடுகிறார்.

ஜப்பானை நெருங்கும் போலீஸ் அதிகாரி மற்ற வழக்குகளையும் இவர் மேல் குற்றம் சொல்ல அதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறார் கார்த்தி.

அப்படி என்றால் அதை செய்தவர் யார்? என தேடுதல் வேட்டை இறங்குகிறார் கார்த்தி?

அதன் பிறகு என்ன நடந்தது? போலீஸிடம் மாட்டிக் கொண்டாரா கார்த்தி? மற்றொரு திருடன் யார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

எதைப்பற்றியும் கவலைப்படாத ஒரு திருடன் அதே சமயம் தாய் பாசத்திற்காக ஏங்கும் கேரக்டர் என தன்னுடைய கேரக்டரை வித்தியாசப்படுத்தி இருக்கிறார் கார்த்தி. படம் முழுக்க தன்னுடைய குரலை மாற்றி நடித்திருப்பது வித்தியாசமான முயற்சி.

பெரிய நடிகர் படத்தில் நாயகிக்கு வேலை இருக்காது என்பது இந்த படத்தில் உண்மையாகி விட்டது. அனு இம்மானுவேல் அணு அளவுக்குத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளார்.

அரசியல்வாதி கே.எஸ்.ரவிக்குமார் போலீஸ் அதிகாரி.. சுனில், பவா செல்லத்துரை மற்றும் விஜய் மில்டன் ஆகியோரும் நடித்துள்ளனர். அவர்களின் பங்களிப்பு கதை ஓட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

வித்யாசமான வேடத்தில் ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். சில இடங்களில் மட்டும் ஸ்கோர் செய்து நம்மை கவர்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு வாகை சந்திரசேகர் நடித்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்ய ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் பின்னணி இசையில் ஸ்கோர் செய்துள்ளார்.. ஆனால் பாடல்களை கோட்டை விட்டு உள்ளார்.

படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் எடிட்டருக்கு கை கொடுத்து பாராட்டி இருக்கலாம். ஆனால் ஒளிப்பதிவாளர் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

வழக்கமாக நாம் எதிர்பார்க்கும் ராஜூமுருகன் படம் இது கிடையாது. ஒரு எழுத்தாளராக நம்மை கவர்ந்த ராஜமுருகன் இதில் கமர்சியல் பாதைக்கு தாவியுள்ளார். ஆனாலும் அவருக்கே உரித்தான அரசியல் நையாண்டி டயலாக்குகளை வைத்து அரசாங்கத்தையும் காவல்துறையும் கலாய்த்து இருக்கிறார்.

வாட்ஸ் அப்பில் வரும் அனைத்தையும் நம்பும் முட்டாள் பொது ஜனங்கள்.. அதுபோல எந்த ஒரு மெசேஜ் என்றாலும் ஒரு நிமிடத்தில் ஆயிரம் பேர் பார்த்து விடுவார்கள்.. வதந்திகளை நம்பும் கூட்டம் அது என்ற வசனங்கள் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன..

தென்இந்தியாவே தேடும் ஒரு திருடன் சினிமாவில் நடிப்பதும் யூட்யூபில் வீடியோக்களை பதிவிடும் என்பதெல்லாம் ஓவர் லாஜிக் மீறல்கள்.. அதனை டைரக்டர் சரி செய்திருக்கலாம்.

மற்றபடி ஜப்பான், ஜாலியாக கொண்டாடும் தீபாவளியாக உள்ளது. நிறைய லாஜிக் ஓட்டைகளை மறந்தால் இந்த படத்தை ஜாலியாக பார்த்து ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *