ரகுமான் பரத் நடித்த சமாரா விமர்சனம் 3/5

மலையாளம் & தமிழில் உருவான திரில்லர் படம் ‘சமாரா’. பரத் மற்றும் ரஹ்மான் நடித்துள்ள இப்படத்தை சார்லஸ் ஜோசப் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க காஷ்மீரில் இதனை படம் பிடித்துள்ளார்.
இரண்டு கதைகளை தொடங்கி அதனை ஒரு இடத்தில் முடிச்சு போடுகிறார் இயக்குனர்.
ஒரு பக்கம் போலீஸ் அதிகாரி ரகுமான் தீவிரவாதியை தேடி அலைகிறார். அதேசமயம் ஒரு வைரஸ் பரவி உள்ள நிலையில் அது தொடர்பான மரணம் அடைந்தவர்களை பிணவறையில் தேடுகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம்… முன்னாள் இராணுவ அதிகாரி பினோஜ் வில்யா தீவிரவாதிகள் மோதலில் விஷ வாயு தாக்கி வைரஸ் நோய் ஒன்றால் பாதிக்கப்படுகிறார்.
அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் முகம் முழுவதும் உடல் முழுவதும் வெந்து அகோரமாக காணப்படுகிறார். இதனால் அவரது மனைவி மகளை அழைத்துக் கொண்டு பிரிந்து சென்று விடுகிறார்.
ஆனாலும் தந்தை மீது பாசம் கொண்ட மகள் சஞ்ஜனா தந்தையைக் காண துடிக்கிறார். மகளுக்கு ஒரு காதலனும் இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் ஒரு நாள் பனி படர்ந்த சூழலில் படம் பிடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென கால் தடுமாறி கீழே விழுகிறார். அங்கே கிடக்கும் ஒரு சடலத்துடன் இவரது உடல் மேலே படும்போது அந்த பிணத்தின் வைரஸ் இவர் மீதும் தொற்றிக் கொள்கிறது.
அங்கே விரைந்து வரும் காவல்துறை அடுத்தது என்ன செய்தனர்? இந்த விஷ வைரஸ் இந்தியாவில் எப்படி பரவியது? இதற்கெல்லாம் யார் காரணம்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
காவல்துறை அதிகாரியாக கம்பீரத்துடன் ரகுமான் வருகிறார். ஆக்சனிலும் அதிரடி காட்டுகிறார். இவரது இன்னொரு செம பில்டப்.
வித்தியாசமான கேரக்டரில் நடிகர் பரத். திடீரென வருகிறார் திடீரென காணாமல் போகிறார். இவரது டாக்டர் கேரக்டர் முக்கியமானது என்றாலும் இன்னும் காட்சிகள் கொடுத்து கதையை நகர்த்தி இருக்கலாம்.
வித்தியாசமான கோர முகத்தில் பினோஜ். இது போன்ற முகத்துடன் நடிப்பதற்கே தைரியம் வேண்டும். இவரது கேரக்டரும் க்ளைமாக்ஸ் சீனும் திருப்புமுனையும் பாராட்டுக்குரியது.
இவரின் மகளாக நடித்துள்ள சஞ்சனா கொள்ளை அழகில் கவர்கிறார். பனி படர்ந்த காட்டில் பனித்துளியாய் இவரும் கண்களுக்கு விருந்தளிக்கிறார்.
இவர்களுடன் ராகுல் மாதவ், பினோஜ் வில்லியா, கோவிந்த் கிருஷ்ணா, டினிஜ் வில்லியா, வீர் ஆர்யன், மீர் சர்வார், தினேஷ் லம்பா, சோனாலி சுதன், நீட் சௌத்ரி, ஷபரீஷ் வர்மா மற்றும் விவியா சாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தீபக் வாரியர் இசையமைக்க, கோபி சுந்தரின் பின்னணி இசையமைத்துள்ளார். சினு சித்தார்த்த் ஒளிப்பதிவு செய்ய அயூப் கான் படத்தொகுப்பு செய்துள்ளார்.
எம்.கே.சுபாகரன் மற்றும் அனுஜ் வர்கீஸ் வில்லியதத் தயாரித்துள்ளனர்.
நூறு ரூபாய் டிக்கெட்டில் காஷ்மீருக்கு நம்மை கொண்டு சென்று இருக்கிறார்கள் சமரா படக்குழுவினர். அழகழகான இடங்கள்.. கொள்ளை கொள்ளும் கேமரா ஆங்கிள்கள் என ரசிக்க வைக்கிறது. படத்திற்கு மாஸான பின்னணி இசை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் கோபி சுந்தர்.
1961இல் ஜெர்மனியில் நடைபெற்ற ஒரு விபத்தில் வந்த வைரஸ் இன்று வரை தொடர்கிறது. அதனை முறியடிக்கும் சமரா என வித்தியாசமான கதைக்களத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சார்லஸ் ஜோசப்.
ஆனால் திரைக்கதை அமைத்த விதத்திலும் சொன்ன விதத்திலும் தடுமாறி இருக்கிறார். இதனிடையே பல கேரக்டர்களை நுழைத்து திசை திருப்பி நம்மை குழப்பி இருக்கிறார் இயக்குனர்.
