திரை விமர்சனம்

நாயாட்டி திரை விமர்சனம்

பல நூற்றாண்டுகளுக்கு முன் சூனியம் மூலம் மக்களை பயமுறுத்திய நாயாட்டி சமூகத்தை சேர்ந்த தம்பதியை ஊர் மக்கள் எரித்து கொன்று விடுகிறார்கள். காலங்கள் கடந்தாலும் இப்போதும் அந்த இடத்தில் நாயாட்டி தம்பதியின் ஆவி உலவுவதாக சொல்லப்பட… அந்த இடத்தை வீடியோ எடுப்பதற்காக யூடியுப் சேனல் குழுவினர் அங்கு செல்ல, அவர்களுக்கு நேரும் அமானுஷ்ய அனுபவங்களும், அதில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா? என்பதும் ‘திக் திக்’ திகில் கதை.

நாயகனாக ஆதர்ஷ் மதிகாந்தன் நேர்த்தியான நடிப்பில் முதல் படத்ிலேயே நடிப்பில் டிஸ்டிங்ஷன் வாங்கி விடுகிறார். இயக்குனரும் இவர்தான். அதிலும் முதல் படம் போலல்லாமல் கதைக்குள் தொடக்கம் முதல நம்மை இழுத்துப் போய் விடுகிறார். இத்தனைக்கும் இவர் யாரிடமும் உதவி இயக்குனராக இருந்ததில்லை என்பது ஆச்சரியம்.
நாயகியாக நடித்திருக்கும் காதம்பரி, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருப்பதோடு, இறுதிக் காட்சியில் எதிர்பார்க்காத வேடத்தில் மிரட்டவும் செய்திருக்கிறார்.

பெபியன், சரவணன், அரவிந்த், ரவிச்சந்திரன், கீதா லக்‌ஷ்மி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்கள் என்றாலும், இ்ந்த திகில் கதையின் தித்திப்பாகி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மோசஸ் டேனியல், இசையமைத்த அருண் இருவருமே இந்த திகில் கதைக்குள் பயமுறுத்தும் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். கிளைமாக்சில் இயக்குனரின் பங்கு மகத்தானது.