திரை விமர்சனம்

தண்டட்டி பட விமர்சனம்

தேனி மாவட்டத்தில் உள்ள கிடாரிப்பட்டி கிராமம் என்றாலே காவல்துறைக்கு அப்படியொரு அலர்ஜி. வில்லங்கம் பிடித்த அந்த ஊரில் ஏதாவது பிரச்சினை என்று தெரிய வந்தால் கூட போகத் தயங்குவார்கள்.
அப்படிப்பட்ட அந்த வில்லங்க கிராமத்தில் வாழ்ந்த பாம்படப் பாட்டி ரோகிணி திடுமென தொலைந்து போக, அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பு டிரான்ஸ்பரில் வந்திருக்கும் காவலர் சுப்பிரமணியிடம் வந்து சேருகிறது. அவரும் அந்த ஊர் பற்றித் தெரியாமல் விசாரணையில் இறங்குகிறார். காணாமல் போன பாட்டி
கண்டு பிடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இறந்து விட, அவரது உடலை கிடாரிப்பட்டிக்கு காவலர் சுப்பிரமணி எடுத்துச் செல்கிறார். இறந்த தாயின் காதில் இருக்கும் தண்டட்டியை கைப்பற்ற அவரது பிள்ளைகள் திட்டம் போட, அதேநேரம் தண்டட்டி காணாமல் போய் விடுகிறது.
‘தெரியாமல் மாட்டிக்கொண்டோமோ’ என்று இந்த நேரத்தில் சுதாரிக்கும் சுப்பிரமணி அங்கிருந்து கிளம்ப… “தண்டட்டியை கண்டு பிடித்து கொடுத்தால் தான் வாசல்படி தாண்டலாம்..!” என்று பாம்படப் பாட்டியின் மகன் அரிவாளுடன் வந்து எச்சரிக்க… கிழவி அடக்கம் முடியும் வரை அவர் அங்கேயே இருக்க நேர்கிறது.
தண்டட்டி கிடைத்ததா… தகராறு தீர்ந்ததா… பாம்படத் திருடன் யார் என்பது எதிர்பாராத
கிளைமாக்ஸ்.
தங்கப்பொண்ணு என்ற கதாபாத்திரத்தில் பாம்படப் பாட்டியாக ரோகிணி, தனது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். உயிருடன் இருக்கும் போதும், உயிரிழந்த போதும் மனதில் நிற்கிற நடிப்பு இவருடையது.
காவலர் சுப்பிரமணி வேடத்தில் வரும் பசுபதி, காட்சிக்கு காட்சி நடிப்பில் வியப்பை கூட்டுகிறார். ரோகிணியின் இறுதிச் சடங்கு வரை உடனிருக்க வேண்டிய சூழலில், அந்த கோபம் அந்த தவிப்பு அலாதியானது. கிடாரிப்பட்டி ஊர் மக்களின் வில்லங்க வேலைகளில் இவர் செய்வதறியாது திகைக்கும் காட்சியில் திரையரங்கை தாண்டுகிறது ரசிகர்கள் சிரிப்பலை. கிழவியின் உடலை எடுக்க விடாமல் ரகளை பண்ணும் ஆறடி உயர வில்லனையும் அவன் அடியாட்களையும் ஆவேசம் வந்து அடித்து உதைக்கும் இடத்தில் பசுபதி, பிடிங்க உங்க நடிப்புக்கு வெகுமதி. (விருது தான். வேறென்ன…)
இளம் வயது ரோகிணியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி, வரும் கொஞ்ச நேரத்திலும் மனதை கனமாக்கி விட்டுப் போகிறார்.
ரோகிணியின் குடிகார மகனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, அந்த நடிப்பில் ‘புல்.’ பசுபதியை கலாய்க்கும் அந்த ‘கோளாறு பாட்டி’ தனி ரகம்.
ரோகிணியின் மகள்களாக வரும் தீபா சங்கர், பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம் இயல்பான கிராமத்து வார்ப்பாக ஜொலிக்கிறார்கள்.
மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவும் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையும் தண்ட்டியோடு இணைந்த காதுகள்.
தண்டட்டிக் கிழவிகளின் ஒப்பாரியும் லந்துகளும் தேனிக்குள் நம்மையும் இழுத்துக் கொள்கிறது. அதிலும்

தண்டட்டியை மையமாக வைத்து கதையை நகைச்சுவையாக நகர்த்தி சென்றாலும், அதனுள் உணர்ச்சிகரமான இரண்டு காதல் கதைகளையும் சொன்ன விதத்தில் இயக்குநர் ராம் சங்கையா தமிழ் சினிமாவின் நல்வரவாக, நம்பிக்கை வரவாக நம்பிக்கை அளிக்கிறார்.

பளபளக்கும் கலப்பில்லாத் தங்கம்.