திரை விமர்சனம்

பானி பூரி இணையத்தொடர் விமர்சனம்

ஷார்ட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் தமிழ் இணையத் தொடர் ‘பானி பூரி’. 8 பாகங்களை கொண்ட இந்த தொடர் எப்படி இருக்கிறது, பார்க்கலாம்.
நாயகன் லிங்காவும், நாயகி சம்பிகாவும் காதலிக்கிறார்கள். திருமணம் செய்து கொண்டு வாழ நாயகன் விரும்ப, நாயகியோ தன் தோழியின் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்ததால், காதலிக்கும் ஆண்களின் அன்பு போலியானது என்ற எண்ணத்தில் காதலை முறித்துக் கொள்கிறார்.
சம்பிகாவின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் கேட்டு அவரது வீட்டுக்கு லிங்கா செல்ல, விஷயம் சம்பிகாவின் தந்தை இளங்கோ குமரவேலுக்கு தெரிய வர…. ‘திருமணம் செய்து கொள்ளாமல், கணவன்-மனைவி போல் வாழும், லிவிங் டூ கெதர் முறையில் இருவரும் ஒரே வீட்டில் 7 நாட்கள் வாழ வேண்டும், இந்த 7 நாட்களில் உங்கள் காதல் உண்மையாக இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம். இல்லையெனில் காதலை முறித்துக் கொள்ளுங்கள்’ என்று யோசனை சொல்கிறார், இளங்கோ.

அதன்படி, லிங்காவுடன் சேர்ந்து 7 நாட்கள் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்வதற்கு, சில நிபந்தனைகளுடன் சம்மதிக்கும் சம்பிகா, 7 நாட்களுக்குப் பிறகு லிங்காவை விட்டு பிரிந்தாரா? அல்லது மணந்தாரா? என்பது தான் சூடும் சுவையுமான இந் ‘பானி பூரி’ நாயகன்-நாயகியின் கேரக்டர்கள் பெயரான சாரங்கபாணி-பூர்ணிமாவை சுருக்கி ‘பானி பூரி’ தலைப்பு தந்திருக்கிறார்கள். இதில் பாணி இன்னும் சுருங்கி ‘பானி’யாகி இருக்கிறது.
ஒரு ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கை முறையை மையப்படுத்திய கதையை கண்ணியமாகவும், குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க கூடிய ஒரு தொடராகவும் கொடுக்க முடிந்ததற்காகவே இயக்குனர் பாலாஜி வேணுகோபாலை உச்சி முகரலாம்.
காதலனாக லிங்கா, இன்றைய இளைஞர் பிரதிநிதியாக வாழ்ந்திருக்கிறார். காதலிக்கும் போது எதற்கும் கவலைப்படாத ஜாலியான இளைஞராக வந்து நேசமும் காதலுமான நடிப்பில் இதயம் பதிந்து போகிறார். தனது அப்பாவும் தன்னோடு இருக்க வேண்டும் என்று காதலி கட்டாயப்படுத்தும் இடத்தில் இவரது நடிப்பு வேறு லெவல்.
ரோபோக்களை உருவாக்கும் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி சம்பிகா இன்றைய இளைஞர்களின் சந்தேக காதலி கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

சம்பிகாவும் தந்தையாக நடித்திருக்கும் இளங்கோ குமரவேல், அந்த கனிவும் கண்டிப்புமான அப்பா கேரக்டரில் நின்று நிலைக்கிறார். மகளின் தோழியை ஆதரிக்கும் இடத்திலும், மகளின் காதலனை போகப்போக பிடித்து போகும் இடத்திலும் இவரது முகபாவனைகள் பிரமிக்க வைக்கிறது.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் வினோத் சாகர், வரும் ஆரம்பத்தில் சிரிக்கவைத்து போகப்போக அழுத்தமான நடிப்பால் ஆச்சரியப்படுத்தி விடுகிறார்.
நாயகனின் அண்ணனாக ஸ்ரீகிருஷ்ண தயாள், அண்ணியாக கனிகா பொருத்தமான ஜோடியாக திரைவலம் வருகிறார்கள்.

அடுக்குமாடி குடியிருப்புவாசிகளாக நடித்திருக்கும் கோபால் மற்றும் அவருடைய சகாக்கள் வரும் காட்சிகள் அனைத்தும் கலகலப்பானவை. அதிலும் எதற்கெடுத்தாலும் இரண்டு நிமிடம் அவகாசம் கேட்கிற அந்த குடித்தனக்காரர் இன்னும் ஸ்பெஷல்.
ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு, இசையமைப்பாளர் நவ்னீத் சுந்தர் கதையோடு இணைந்து பயணித்து இருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கும் பாலாஜி வேணுகோபால், இன்றைய லிவிங் டூ கெதர் வாழ்க்கை பற்றிய கதைக்களத்தை கையில் எடுத்து அதை சேதம் இல்லாமல் கண்ணியத்துக்கு குறைவில்லாமல் படைத்திருக்கிறார். இளங்கோ குமரவேலின் மனைவி சம்பந்தப்பட்ட காட்சி, நாயகியின் தோழி பிரச்சினை என திடீர் திருப்பங்கள் பார்வையாளனுக்கு சஸ்பென்சுடன் கூடிய போனஸ்.

இந்த பானிபூரி வயிற்றுக்குள் போகாமல் நெஞ்சுக்குள்ளேயே நின்று விடுகிறது.