திரை விமர்சனம்

அஸ்வின்ஸ் படவிமர்சனம்

வசந்த் ரவி, சரஸ் மேனன், முரளிதரன் , உதயாதீப் உள்ளிட்ட யு டியூப் குழு லண்டனில் தனித் தீவில் உள்ள அமானுஷ்ய மாளிகைக்குப் பயணிக்கிறது. அங்கே தங்கி இருந்து அமானுஷ்யங்கள் பற்றி ஆராய்ந்த ஆர்த்தி என்பவரும் அவருடன் இருந்த 15 பேரும் அகால மரணம் அடைய, ஆர்த்தியும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிய வர…

அந்த இடத்துக்கு இவர்கள் ஏன் பயணிக்க வேண்டும்..? இப்படி அமானுஷ்யங்கள் நடந்ததாகச் சொல்லப்படும் இடங்களைப் பார்வையிடுவதற்கு என்றே சில சுற்றுலா விரும்பிகள் வருகின்றனர். இது பிளாக் டூரிசம் எனப்படுகிறது..

அப்படி இந்த இடத்தைப் படம் பிடிக்க வந்த இந்த யூடியூப் பார்ட்டிகளுக்கு அசைன்மென்ட்டும் பெரிய தொகையும் கிடைக்க, ஆனால் வந்த இடத்தில் அமானுஷ்யத்தில் அவர்களும் சிக்கிக் கொள்கிறார்கள். அப்புறம் என்ன நடந்தது என்பது திகிலும் திருப்பமும் கொண்ட மீதிக் கதை.

நாயகனாக நடித்திருக்கும் வசந்த் ரவி, அமானுஷ்ய பங்களாவில் நடக்கும் பயங்கரமான சம்பவங்களை தனது நடிப்பு மூலம் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறார். திகில் பங்களாவுக்குள் அவரது ஒவ்வொரு அசைவும், பயத்தில் உறைந்த கண்களும் ரசிகன் வரை ஊடுருவி பதற வைக்கிறது. கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் வசந்த் ரவிக்கு இந்த இடத்தில் ஒரு ஹார்ட்ஸ் ஆப்.

 

சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் கேரக்டர் தேர்வில் கதைக்கு நியாயம் செய்கிறார்கள். பங்களாவுக்குள் மாட்டிக்கொண்டு சிக்கி தவிக்கும் அவர்களது அலறல் குரல், இப்போது வரை காதுகளுக்குள்.

 

தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வேடத்தில் வரும் விமலா ராமன், தனது கதாபாத்திரத்தை கையாண்டிருக்கும் விதத்துக்காகவே பாராட்டை அள்ளிக்கொள்கிறார். கறுப்பாக வந்து இருட்டில் மிரட்டுவது, தீய சக்தியின் கட்டுப்பாட்டில் ஆக்ரோஷம் காட்டுவது என இதயத்துடிப்பு எகிறும்வரை மிரட்டி விடுகிறார்.

 

ஒளிப்பதிவாளர் ஏ.எம்.எட்வின் சகே, படம் முழுவதையும் இருட்டில் படமாக்கினாலும், மிக நேர்த்தியான படமாக்கல் மூலம் விருது வரை நெருங்கி இருக்கிறார்..

இசையமைப்பாளர் விஜய் சித்தார்த்தின் பின்னணி இசையும், சச்சின்-ஹரி ஒலிக்கலவையும் திரையில் திகிலோடு நம்மை நெருக்கமாக்குகிறது

எழுதி இயக்கியிருக்கும் தருண் தேஜா, தலைப்புக்கான அஸ்வினர்கள் கதையை வடிவமைத்த விதத்துக்காகவே கொண்டாடப்பட வேண்டியவர். படம் ஒடிய இரண்டு மணி நேரமும், நாம் நாமாக இல்லாமல் அவரது கட்டுப்பாட்டில் இருந்தோம் என்பது தான் இந்த படத்தின் வெற்றி. இயக்குனரின் வெற்றி.