பொம்மை பட விமர்சனம்

உயிரற்ற பொம்மையின் வழியே உயிருள்ள தன் காதலை சொல்லும் மனப்பிறழ்வு இளைஞன் கதையே இந்த பொம்மை.
பொம்மைகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார் ராஜ்குமார். அவரது வடிவமைப்பில் உருவான பொம்மை ஒன்று அச்சு அசப்பில் காணாமல் போன அவரது சிறுவயது தோழி நந்தினி போலவே அவர் பார்வைக்குத் தெரிய வர…
ஏற்கெனவே தாயின் மறைவு, சிநேகிதியின் இழப்பு மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் ராஜ்குமார் அந்த பொம்மையை தனது காதலியாக நினைத்து உருகுகிறார். அந்த பொம்மை அவரிடம் மட்டும் பேசும். அன்பை பகிர்ந்து கொள்ளும். காதலாகி கசிந்துருகும். இப்படியான அந்த அவரது பொம்மை ஒரு நாள் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட, துடித்துப்போகும் அவர், தனது பொம்மைக் காதலியை கண்டு பிடித்தாரா? மனரீதியான அவரது பாதிப்புக்கு என்ன காரணம்? அவரது காதல் இறுதியில் என்ன ஆனது என்பது நெஞ்சை நெகிழ்த்தும் கிளைமாக்ஸ்.
தொலைத்த பொம்மையை திரும்ப கண்டெடுக்கும் குழந்தை, அதை எக்காரணம் கொண்டும் மீண்டும் தொலைத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்குமே, அப்படியான கேரக்டரில் ராஜ்குமாராக வரும் எஸ்.ஜே.சூர்யா, நடிப்பில் வாழ்ந்திருக்கிறார். பதற்றம், பயம், விரக்தி, இயலாமை என ஒவ்வொன்றுக்கும் அவரது முகபாவனைகள் காட்டும் உணர்ச்சிகள் விருதுக்கானவை. குறிப்பாக காவல் நிலையத்தில் அவரது அந்நியன் நடிப்பு ‘அடடா’ ரகம்.
நண்பனாக டவுட் செந்தில், அந்த மலையாள சூப்பர்வைசர் இருவரும் கதைக்குள் அழகாக பொருந்திப் போகிறார்கள்.
பொம்மையாக வரும் பிரியா பவானி சங்கர் தனது நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். அதிகம் இல்லைனெ்றாலும் வரும் கொஞ்ச நேரத்திலும் சாந்தினி தன் இருப்பை நிரூபித்து விடுகிறார். தனக்கு லிப்ட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யாவிடம், ‘போறப்பவாச்சும் சீட்ல உட்கார்ந்து பைக்கை ஓட்டுங்க என்று சொல்லும் இடத்தில் வீசுகிறது ஒரு அழகான காதல் பூங்காற்று.
அன்பின் வலிமையை அது தரும் வலியை மனப்பிறழ்வு நாயகன் பார்வையில் சொன்ன விதத்தில் ராதாமோகனின் இயக்கம் இந்த காதல் திரில்லரை மிரட்சியுடன் ரசிக்க வைக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வரும் இரண்டு பாடல்கள் சுகராகம். அதோடு அவரது அப்பா இளையராஜாவின் ‘தெய்வீக ராகம்’ பாடலும் இந்த காதல் கதையில் இணைந்து கொண்டு சுகராகம் மீட்டுகிறது.
