காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரை விமர்சனம்

நாயகி சித்தி இதானியின் சொத்தை அபகரிப்பதற்காக அவரது உறவினர்கள் திட்டமிடுகிறார்கள். அதற்காக அவரை பெண் கேட்டு யார் வந்தாலும் அவர்களை விரட்டியடிக்கிறார்கள். இப்படி பெண் கேட்டு வந்த ஒரு போலீஸ் அதிகாரி கூட உயிரை பறி கொடுக்கிறார். இந்நிலையில் சித்தி இதானிக்கு துணையாக நிற்கும் உறவுக்கார ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார், சித்தி இதானி.
இதனால் சித்தி இதானியின் உறவினர்கள் ஆர்யாவை கொல்ல முயற்சிக்க, வேறு ஒரு கும்பலும் அவரை கொலை செய்ய முயற்சிக்கிறது. அந்த கும்பல் யார்? அவர்களுக்கும் ஆர்யாவுக்கும் இடையே என்ன பகை? இரண்டு தரப்பு எதிரிகளையும் ஆர்யா என்ன செய்தார்? என்பது அதிரடி கதைக்களம்.
அறிமுகமாகும் காட்சியிலேயே நாலுபேரை தூக்கிப் போட்டு பந்தாடுகிறார், ஆர்யா. படம் முழுக்க அவரது ஆக்ரோஷ சண்டைக் காட்சிகள் பின்னணியில் தான் திரைக்கதையையே அமைத்திருக்கிறார்கள்.
நாயகியாக நடித்திருக்கும் சித்தி இதானி தைரியமிக்க கிராமத்துப் பெண் தமிழ்ச்செல்வி கேரக்டரில் அம்சமாக பொருந்துகிறார். ஊர்ப் பஞ்சாயத்து தன்னை ஒதுக்கி வைக்கும் இடத்தில் அந்த அலட்சிய ரியாக்–ஷன் அடடா ரகம். பிரபு, கே.பாக்யராஜ், விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், ரேணுகா, சிங்கம்புலி, தமிழ் என்று நட்சத்திரக்கூட்டங்கள் அதிகம். இவர்களில் காதர்பாட்சாவாக வரும் பிரபுவின் பாந்தமான நடிப்பில் எடை அதிகம். போலீஸ் ஏட்டையா சிங்கம்புலி சிரிக்க வைக்கிறார்.
வேல்ராஜின் ஒளிப்பதிவும் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையும் பாட்சாவின் பக்க பலம். மண்ணுக்கும் பெண்ணுக்கும் ஆசைப்படும் கிராமத்து மாந்தர்களை கதைக்களமாக்கிய முத்தையா, வழக்கம்போல அவரது அடிதடி ஆக்ரோஷ காட்சிகள் மூலம் தனக்கான ரசிகர்களுக்கு தந்திருப்பது அதிரடி கரம் மசாலா.
