திரை விமர்சனம்

வீரன் பட விமர்சனம்

கிராமத்து சூப்பர் ஹீரோவான குமரன் தனது ஊரை காப்பாற்றும் பொருட்டு எடுக்கம் எல்லைச்சாமி அவதாரமே இந்த வீரன்.
பொள்ளாச்சி அருகில் உள்ள வீரனூரைச் சேர்ந்த சிறுவன் குமரன் மீது இடி விழ, மருத்துவ சிகிச்சையில் உயிர் பிழைப்பவன், மின்னல் தாக்கியதால் தனக்கு சில ‘சூப்பர் பவர்கள்’ கிடைத்திருப்பதை உணர்கிறான்.
இந்நிலையில், கார்ப்பரேட் முதலாளி வினய், லேசர் மூலம் மின்சக்தியை உருவாக்கும் தனது திட்டத்துக்காக சுற்று வட்டாரத்தில் உள்ள 24 கிராமங்களை பணத்தால் வளைத்துப் போடுகிறார். ஆனால் அந்த மின்சக்தியால் கிராமங்கள் அழிந்து போகும் ஆபத்தை உணரும் நாயகன், தனது நண்பர்களுடன் இணைந்து அதை எதிர்க்க முயல…

அப்பாவி கிராம மக்களோ விபரீதம் புரியாமல் கார்ப்பரேட் நிறுவனம் தங்கள் நிலத்துக்காக கொடுத்த டபுள் விலையில் மயங்கி அமைதி காக்க…
இந்நிலையில் இந்த திட்டத்திற்கான பாதையில் இருக்கும் வீரனூரின் எல்லை காவல் தெய்வமான `வீரன்’ கோயிலை இடிக்க முடிவெடுக்கிறார் கார்ப்பரேட் முதலாளி வினய். இதற்குப்பிறகு குமரன் வீரன் கோயிலையும், வீரனூரையும் காப்பாற்ற தன் சூப்பர் பவரை பயன்படுத்தும் கிளைமாக்ஸ் விறுவிறு திகுதிகு.
நாயகனாக வரும் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி தனது கலகலப்பான நடிப்பின் மூலம் கவர்கிறார். அவர் சூப்பர் ஹீரோவாக மாறும் காட்சிகளை குழந்தைகளை மிகவும் கவரும் விதத்தில் உருவாக்கியிருப்பது சிறப்பு. அதோடு சூப்பர்பவரை பயன்படுத்தி அவர் போடும் சண்டைக்காட்சிகள் குழந்தைகளின் குதூகலத்துக்குரியவை.

ஊராட்சித் தலைவராக இருக்கும் சின்னி ஜெயந்தை தன் மின்சார சக்தி மூலம் ஆதி ஆட்டி வைப்பதும் அவர் வெங்காய சாம்பார் வைக்க உதவியாளரை உசுப்பியெடுப்பதும் அரங்கம் அதிரும் காமெடி.
நாயகி ஆதிரா ராஜு அழகாக இருக்கிறார். நடிப்பும் இயல்பாக வருகிறது. நன்றாக நடனமும் ஆடுகிறார். நாயகனுக்கும் இவருக்குமான நட்பு காதலாக உருவெடுக்கும் இடம் அழகான கவிதை.

ஆதியின் நண்பனாக வரும் சசி, அவரது அப்பா கோவில் பூசாரி சக்திவேல் அசல் அக்மார்க் கிராமத்து வார்ப்புகள்.
ஆதிராவை திருமணம் செய்து கொள்ள வரும் மாப்பிள்ளை முருகானந்தம் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிரிப்பில் திரையரங்கை குலுங்க வைக்கின்றன. நிச்சயதார்த்த நேரத்தில் அந்த ஊர் பாட்டி மாப்பிள்ளையின் பூர்வீகத்தை கிளறி அவரை தலைதெறிக்க ஒடவைக்கும் இடம் அரங்கம் சிரிப்பில் அதிரும் இ்ன்னொரு இடம்.
வினய்யின் வில்லத் தம்பி கோவிலை இடிக்க வரும் போதெல்லாம் ஆதி தன் மின் பவரால் அவனை சாமியாடச் செய்யும் இடம் கலகலப்புக்கு உத்தரவாதம்.
முனீஸ்காந்த்-காளி வெங்கட் தொடர்பான காமெடிக் காட்சிகளில் வில்லனை சந்திக்கிற அந்த கிளைமாக்சில் மட்டும் காமெடி வேலை செய்கிறது. கார்ப்பரேட் வில்லனாக வரும் வினய் கிளைமாக்ஸ் பரபரப்புக்கு உதவுகிறார். இசையிலும் ஆதி புகுந்து விளையாடி இருக்கிறார்.
தீபக் டி.மேனனின் ஒளிப்பதிவு துல்லியம். குறிப்பாக ஆதியிடம் இருந்து மின்சாரம் பாயும் இடங்களில் எல்லாம் கேமரா ஒளிமயம்.
மரகத நாணயம் வெற்றிப்படம் தந்த ஏ.ஆர்.கே.சரவன் இயக்கி இருக்கிறார். குழந்தைகளை மனதில் வைத்து கதை தந்ததில் பெற்றோர்களின் படமாகவும் மாறியிருக்கிறது.