திரை விமர்சனம்

உன்னால் என்னால் திரை விமர்சனம்

சோனியா அகர்வால், டெல்லி கணேஷ், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ரவிமரியா, நெல்லை சிவா போன்ற முகம் தெரிந்த நடிப்புக் கலைஞர்களுடன் புதுமுகங்கள் ஜெகா , ஏ. ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ், மோனிகா, சஹானா, நிஹாரிகா, லுப்னா அமீர் நடித்துள்ள படம்.
ஏ .ஆர். ஜெயகிருஷ்ணா இயக்கியுள்ளார். ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரித்துள்ளார்.
பிரபல ஒளிப்பதிவாளர் கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிஸ்வான் இசையமைத்துள்ளார்.
கலை இயக்கம் விஜய் ராஜன், படத்தொகுப்பு எம்.ஆர்.ரஜீஷ்,
நடன இயக்குநர் கௌசல்யா,
சண்டை இயக்குநர் பில்லா ஜெகன்.
இப்படத்தின் கதை என்ன?
குடும்ப வறுமையின் காரணமாக ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று கிராமத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் சென்னை வருகிறார்கள். மூவருமே சம்பாதித்தாக வேண்டிய கட்டாயம். ஒருவருக்கு வீட்டில் கடன் பிரச்சினை. இ்னனொருவருக்கு தந்தைக்கு இதயஅறுவை சிகிச்சை செய்ய பணம் திரட்ட வேண்டும். மூன்றாமவருக்கோ காதலித்த பெண்ணை மணக்க பணம் சம்பாதித்தாக வேண்டிய நிர்ப்பந்தம்.
இப்படி மூன்று பேருக்கும் மூன்று கட்டாயங்கள். ஆனால் சோதனையாக பணம் திரட்டும் அளவுக்கு அடுத்தடுத்த முயற்சிகள் கைகூடாமல் போக, விரக்தியின் விளிம்பில் நிற்கும்போது ரியல் எஸ்டேட் தாதா சோனியா அகர்வாலின் உதவியாளர் ரவிமரியா மூலம் ஒரு வாய்ப்பு வருகிறது. அதாவது லட்சங்களில் கூலிக்குக் கொலை செய்யும் வேலை வருகிறது.
அந்த நபர் யார் என்று அறிகிறபோது அதிர்ச்சி. கொலை செய்யப்பட வேண்டிய அந்தப் பெரியவர் ராஜேஷ் அவர்களுடன் தான் தங்கி இருக்கிறார். அவரை கொலை செய்தால் தான் தங்கள் மூன்று பேருடைய பிரச்சினையும் தீரும் என்று ரவிமரியா சொல்வதை ஏற்றுக் கொள்கிறார்களா? இல்லையா என்பது படத்்தின் கிளைமாக்ஸ்.
கிராமத்தில் இருந்து வரும் ஜீவன், ராஜ், கணேஷ் என்ற அந்த மூன்று இளைஞர்களாக ஜெகா, இயக்குநர் கே. ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ் நடித்துள்ளார்கள். எல்லை தாண்டாத நடிப்பால் தங்கள் கேரக்டரை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.
ரியல் எஸ்டேட் மோசடிக் கும்பலின் தலைவியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். வில்லி அவதாரம் நன்றாகவே எடுபடுகிறது என்றாலும், அவரது பின்புலம் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை என்பது சிறுகுறை..
சோனியாஅகர்வாலின் உதவியாளர் சோடா கோபால் கேரக்டரில் ரவி மரியா வருகிறார்.
ராஜேஷ், டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், மோனிகா, நெல்லை சிவா சின்னக் கேரக்டர்கள் என்றாலும் பாத்திரச் சிறப்பில் அனுபவம் தெரிகிறது.
பணத்தைத் தேடி அலையும் இளைஞர்களின் பிரச்சினையே விறுவிறுப்பான கதைக்களம். இயக்குனர் அதையே முன்னிலைப் படுத்தி கதை சொல்லியிருக்கலாம். நண்பர்களின் காதல் பிளாஷ்பேக், அவர்களுக்கு பாடல்கள் என்று தனித்தனியாகக் காட்டியது நேர விரயம்.
படத்தின் பெரும்பலம் ஒளிப்பதிவும் இசையும் தான். அனுபவமிக்க ஒளிப்பதிவாளர் கிச்சாஸ்சின் கேமராக் கண்கள் காட்சிகளை அழகோவியமாக்கி விடுகின்றன.
இசையமைப்பாளர் ரிஸ்வான் இசையில் பாடல்கள் ரசனை.
மனித நேயத்தை மையமாகக் கொண்ட இந்த திரைக்கதையை இன்னும் கொஞ்சம் பட்டை தீட்டி இருந்தால் படத்தில் இன்னும் பளபளப்பு கூடியிருக்கும்.