திரை விமர்சனம்

துரிதம் திரை விமர்சனம்

கால் டாக்சி டிரைவர் ஜெகன், தனது காரில் அடிக்கடி பயணப்படும் ஐடி நிறுவன அழகுப்பெண் ஈடனை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், ஈடனோ ஜெகனை டிரைவர் கோணத்தில் மட்டுமே பார்க்கிறார். இப்படியான சூழலில் காலமே ஈடனை ஜெகனுடன் ஸ்கூட்டர் பயணத்தில் இணைக்கிறது. தவிர்க்க முடியாத ஒரு சூழலில் தனது ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் ஜெகனுடன் பயணப்படுகிறார், ஈடன். காதல் கனவில் தொடங்கும் ஜெகனின் இந்த பயணத்தில் சோதனை யாக ஈடன் கடத்தப்படுகிறார். அவர் எதற்காக கடத்தப்பட்டார்? கடத்தப்பட்ட ஈடனை ஜெகன் காப்பாற்றினாரா? இல்லையா? அவரது ஒருதலைக் காதல் என்னாயிற்று? என்பது படத்தின் மீதிக்கதை.
‘சண்டியர்’ படம் மூலம் அதிரடி ஆக்‌ஷன் நாயகனாக தடம் பதித்த ஜெகன், இந்த படத்தில் பக்கத்து வீட்டு பையனாக நம் மனசில் ஒட்டிக் கொள்கிறார். நாயகியிடம் தனது காதலை வெளிப்படுத்த முயற்சிக்கும் காட்சிகளில் அந்த தடுமாற்ற நடிப்பு தடையின்றி வெளிப்படுகிறது. நாயகியின் பின்புலம் தெரிந்த பிறகு அவரிடம் இருந்து விலகும் காட்சியிலும் தெளிந்த நீரோடை நடிப்பு.
நாயகியாக ஈடன். கண்டிப்பான அப்பாவுக்கு பயம். அதே நேரம் சுதந்திர சிந்தனையில் உறுதி என இருவேறுபட்ட நடிப்பிலும் அம்மணி அட்டகாசப் படுத்தி விடுகிறார்.
நாயகனின் நண்பனாக வரும் பாலசரவணன் சிரிப்புக்கு உத்தரவாதம். கண்டிப்பும் கறாருமான அந்த கிராமத்து அப்பா கேரக்டர் ஏ.வெங்கடேஷின் நடிப்பில் தனித்துவமாக வெளிப்படுகிறது.
‘பூ’ ராம், ராம்ஸ் கேரக்டர்கள் படத்தின் சுவாரசியத்துக்கு உதவுகின்றன.
ஒளிப்பதிவாளர்கள் வாசன்-அன்பு டென்னிஸ் இருவரது கேமராவும் நெடுஞ்சாலை பயணத்தை கச்சிதமாக கண்களுக்குள் சேர்த்து விடுகிறது.
நரேஷின் இசை ரசிக்கலாம் ரகம்.
ஒருபரபரப்பான பயணக்கதையை எடுத்துக் கொண்டு அதை வேகம் குறையாமல் சுவாரசியமாக தந்த விதத்தில் தனி கவனம் பெறுகிறார், இயக்கிய சீனிவாசன்.