தீராக்காதல் படவிமர்சனம்

கல்லூரிக் கால காதலர்களான கவுதம் (ஜெய்), ஆரண்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) இருவரும் ஒரு ரயில் பயணத்தில் தற்செயலாக சந்தித்துக் கொள்கிறார்கள். கவுதமுக்கு அன்பான மனைவியும் (ஷிவதா), அழகான பெண் மகவும் இருக்க, ஆரண்யாவுக்கோ கொடுமைக்காரக் கணவர் (அம்ஜத் கான்) அமைகிறார்.
மங்களூருவில் பணி நிமித்தமாக சில நாள்கள் தங்கியிருக்கும் கவுதமும் ஆரண்யாவும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதால் அவர்களுக்கிடையிலான பழைய காதல் உயிர் பெற, அது எல்லை தாண்டுவதற்குள் சுதாரிக்கும் இருவரும் இந்த பயணத்தோடு சரி, இனி எதற்காகவும் சந்திக்கக்கூடாது என்று உறுதி மொழி பூண்டு பிரிகிறார்கள்.
ஆனால் ஊர் திரும்பியதும் தன்னை அடித்துத் துன்புறுத்தும் கணவரை விட்டு விலகி மீண்டும் கவுதமின் வாழ்க்கையில் நுழைகிறார் ஆரண்யா.
குடும்பத்தை பிரிய விரும்பாத கவுதம் அதேநேரம் காதலியின் எதிர்காலம் குறித்தும் கவலைப்படுகிறான். இந்த தடுமாற்றத்தால் கவுதமின் குடும்ப வாழ்க்கை என்னாகிறது? காதலி ஆரண்யா என்னவாகிறாள் என்பது காதலின் எல்லைக்குள் சொல்லப்படும் மீதிக் கதை.
கவுதமாக ஜெய். அழகான மனைவி அன்பான குழந்தை என மகிழ்ச்சி வாழ்வு வாழ்ந்து வரும் கணவனை ஆரம்ப கட்டத்தில் அற்புதமாக நடிப்பில் பிரதிபலித்திருக்கிறார். முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராஜேஷை சந்தித்த பிறகான அவரது அந்த தடுமாற்றம் கலந்த நடிப்பு நிச்சயம் ‘ஜெய் ஸ்பெஷல்.’ எதிர்வீட்டுக்கே முன்னாள் காதலி குடி வந்த நேரத்தில்அவரது பதட்டமும் பரிதவிப்பும் நடிப்பின் உச்சம். கிளைமாக்சில் போலீசிடம் காதலியை விட்டுக் கொடுக்காத அந்த கவுதமை காதலர்களின் கண்ணியத் திலகமாக கொண்டாடலாம்.
அந்த ஹைகிளாஸ் குடும்பத் தலைவி கேரக்டரில் அற்புதமாக வெளிப்படுகிறார், ஷிவதா. பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்தில் கணவரையும் குழந்தையையும் அதே வேகத்தில் எதிர்கொள்ளும் அத்தனை இடங்களிலும் இன்றைய ஹைடெக் மனைவியை கண்முன் நிறுத்தி விடுகிறார். கணவன் மீதான சந்தேகம் வந்தபிறகு அவரது அடுத்தடுத்த அணுகுமுறைகள் அத்தனையும் ‘அடடா’ ரகம். ஆண்கள் தப்பு செய்து விட்டு மன்னிப்பு கேட்டு விட்டால், அனைத்தும் சரியாகி விடுமா? என்ற அவரது கேள்வி, தவறு செய்யும் அத்தனை ஆண்கள் மீதும் விழுந்த சாட்டையடி.
கணவனின் கொடுமைகளை எதிர்கொள்ளும் போதும் காதலனைப் புரிந்து கொள்ளும் போதும் பிற்பாதியில் தனிமையின் வலியிலிருந்து விடுபடப் போராடும்போதும் சிறந்த நடிப்பு ஐஸ்வர்யா ராஜேஷிடம். அடிக்க கைஓங்கிய கணவனை தனது பெற்றோர் முன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறாரே… கரகோஷத்தில்் குலுங்குகிறது தியேட்டர்.
ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக நடித்திருக்கும் அம்ஜன் கான், ஜெய்யின் நண்பராக நடித்திருக்கும் அப்துல் லீ, பேபி வரித்தி விஷால் என படத்தில் குறைவான கதாபாத்திரங்கள் வந்தாலும் நிறைவான நடிப்பில் நெஞ்சில் நின்று விடுகிறார்கள்.
ரவிவர்மன் நீலமேகத்தின் கேமரா கதையோடு இணைந்து காட்சிகளை நமக்குள் கடத்தி விடுகிறது. குறிப்பாக ஆரம்பத்திலும் முடிவிலுமான அந்த மழைக்காட்சிகள் கேமராக் கவிதை.
சித்துகுமாரின் இசையில் பாடல்கள் ரசனை. பின்னணி இசை காட்சிகளை உயிரோட்டமாய் வைத்திருக்கிறது.
ஒரு முன்ளாள் காதல் இந்நாள் குடும்பத்துக்குள் ஏற்படுத்தும் ரசவாத வித்தையை ரோகின் வெங்கடேஷன் கவனமாக கையாண்டு இயக்கத்தில் ஜெயித்திருக்கிறார். எந்த இடத்திலும் படத்தின் மீது எதிர்மறை கருத்து ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார். முன்னாள் காதலனை அவன் குடும்பத்தை பிரிந்து பிரிந்து தன்னை ஏற்றுக்கொள்ளச் சொல்லி காதலி வற்புறுத்தும்போது அந்த ஆரண்யா கதாபாத்திரத்தின் மதிப்பு சரிந்து விடுவது கேரக்டர் பிழை.
இந்த தீராக்காதல், மனசுக்குள் மாறாக் காதல்.
