பர்ஹானா திரை விமர்சனம்

நடுத்தர குடும்பத்து இஸ்லாமிய பெண் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது கணவர் நடத்தி வரும் செருப்பு வியாபாரம் சரியாக போகாததால் குடும்ப வறுமையை போக்க வேலைக்கு செல்ல முடிவு செய்கிறார். அதன்படி கால் சென்டர் ஒன்றில் வேலைக்கு சேர்வதைத் தொடர்ந்து குடும்ப பொருளாதார நிலை சீராகிறது. இதற்கிடையே சோதனையாக அவருடைய குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட, அதற்காக தான் பணியாற்றும் நிறுவனத்தில் மூன்று மடங்கு ஊக்கத்தொகை கிடைக்கும் மற்றொரு பிரிவில் இணைகிறார். அந்த பிரிவில் பணியாற்றும் போது, தன்னையும் அறியாமல் ஒரு சிக்கலில் சிக்கிக் கொள்ள அதில் இருந்து அவர் மீண்டு வர முடிந்ததா? என்பது கதைக்களம்.
‘ஒருநாள் கூத்து, மான்ஸ்டர்’ படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இம்முறை இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் வழியாக முகமறியாதவர்களுடனான இணையவெளித் தொடர்பு உரையாடல்களில் இருக்கும் ஆபத்துகளை படைப்பாக்கியிருக்கிறார். திரைக்கு புதுசு என்பதோடு நல்லதொரு எச்சரிக்கை மணியும் கூட.
பர்ஹானாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் புதிய அத்தியாயம் படைத்்திருக்கிறார். பிரச்சினையை எதிர்கொள்ள போராடுவது, தனியொரு பெண்ணாக குடும்ப பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது என படம் முழுக்க பர்ஹானாவாகவே அவரை உணர முடிகிறது.
அதிகம் பேசாமல் மௌனத்தாலேயே உணர்வைக் கடத்தும் அவரது கணவராக ஜித்தன் ரமேஷ் நடிப்பில் தனிக்கொடி கட்டியிருக்கிறார். நாயகியின் அப்பாவாக கிட்டி நெஞ்சுக்குள் பதிகிறார்.
புதுமையான பாத்திரத்தில் செல்வராகவன் கன கச்சிதம். ஐஸ்வர்யா ராஜேஷின் அலுவலக தோழிகளாக அனுமோள், ஐஸ்வர்யா தத்தா பொருத்தமான தேர்வு.
மனைவியை வேலைக்கு அனுப்பும் அளவிற்கான புரிதல் கொண்ட ஜித்தன் ரமேஷ் கதாபாத்திரம் மனைவியை வீட்டு போனை தொட அனுமதிக்காமலிருப்பதும், ஐந்துவேளை தொழும் அளவிற்கான இறைபக்தி கொண்ட ஃபர்ஹானா கதாபாத்திரம் பணத்திற்காக தேர்ந்தெடுக்கும் தொழிலில் உள்ள ஆபத்துகளை அறிந்தும் அதில் தொடர்வதும் முரண்.
முதல் பாதியில் நீளமும் இரண்டாம் பாகத்தில் நெகிழ்ச்சியும் அதிகம். ஜஸ்டின் பிரபாகர் இசையில் பின்னணி இசை முன்னணி.
பிரச்சினை முடிவுக்கு வந்தபிறகு இனி பர்ஹானா வேலைக்கு போவாரா என்ற கேள்வி நம்முள். அதற்கு விடையாக அப்பா கிட்டி மகளிடம் கேட்கம் அந்த ஒருகேள்வி நம் மனதுக்குள் சந்தோஷப் புறாக்களை பறக்க விட்டு விடுகிறது.
பர்ஹானா, மனதில் பதிந்த திரைச்சிற்பம்.
