சினிமா செய்திகள்

மியூசிக் ஸ்கூல் திரை விமர்சனம்

பள்ளி ஒன்றில் இசைப்பயிற்சி ஆசிரியையாக பணியில் சேரும் ஸ்ரேயா, அதே பள்ளியில் நாடக ஆசிரியராக பணியாற்றும் சர்மன் ஜோஷியுடன் சேர்ந்து இசைப்பள்ளி ஒன்றை தொடங்குகிறார். மாணவ, மாணவிகளுக்கு இசை மற்றும் நாடக பயிற்சி அளித்து ‘சவுண்ட் ஆஃப் மியூசிக்’ நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்யும் ஸ்ரேயா, மாணவ, மாணவிகளை பயிற்சிக்காக கோவா அழைத்து செல்கிறார்கள்.

கோவாவில் பயிற்சியை முடித்துக்கொண்டு அனைவரும் ஐதராபாத் திரும்பும் நேரத்தில், ஒரு மாணவி மாயமாகி விடுகிறார். அந்த மாணவி போலீஸ் கமிஷனர் பிரகாஷ்ராஜின் மகள். இந்த தகவல் பிரகாஷ்ராஜுக்கு தெரிய வர, தனது மகளை தேடுவதோடு, ஐதராபாத்தில் அரங்கேற இருக்கும் நாடக நிகழ்ச்சியை நிறுத்தி ஸ்ரேயா மற்றும் சர்மன் ஜோஷியை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்கிறார்.

மாயமான பெண் கிடைத்தாரா? ஸ்ரேயா – சர்மன் ஜோஷியின் நாடகம் அரங்கேறியதா? என்பது படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகியாக இசைப்பயிற்சி ஆசிரியை கதாபாத்திரத்தில் ஸ்ரேயா ஒரு இனிய ஆச்சரியம். மாணவர்களுக்கு இணையாக துள்ளல் நடிப்பு மூலம் மனசை அள்ளிக்கொள்கிறார்.

ஸ்ரேயாவை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் ஷான் வருவது சில காட்சிகளே என்றாலும், தனது காதலை ஸ்ரேயாவிடம் வெளிப்படுத்தி விட்டு விடைபெறும் காட்சியில் அந்த சோகம் நம் மனதிலும் இறங்கி விடுகிறது.

போலீஸ் கமிஷனராகவும், கண்டிப்பான அப்பாவாகவும் பிரகாஷ்ராஜ், அவருக்கே உரிய முத்திரையை பதித்து விட்டுப் போகிறார்.

கிரண் டியோஹன்ஸ்சின் கேமராவில் கோவா காட்சிகள் அத்தனை அழகு.
இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் கேட்கும் ரகம்.
எழுதி இயக்கியிருக்கும் பாப்பா ராவ் பிய்யாலா, வசனத்தை கூட பாடல்களாகவே கொடுத்திருப்பது கொஞ்சம் ஓவர்.
சவுண்ட் ஆஃப் மியூசிக்’ என்ற நாடகத்தை அரங்கேற்றுவதற்கான முயற்சி தான் கிளைமாக்ஸ் என்பதால், அந்த நாடகத்தில் மாணவர்கள் எப்படி நடிக்கப் போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு அதிகமாகிறது. ஆனால், அந்த நாடகம் அரங்கேறும் போது அதை முழுமையாக காட்டாமல், இளம் ஜோடியின் ஆட்டம், பாட்டத்துடன் முடித்திருப்பது ஏமாற்றம்.

இசை வெள்ளத்தில் கிடைத்த இன்னிசை கீதம்.