யானை முகத்தான் பட விமர்சனம்

ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ் திலக், தீவிர விநாயகர் பக்தர். தனது பணியில் தீவிரம் காட்டாமல் மற்றவர்களை ஏமாற்றுவதில் தீவிரம் காட்டுபவர், தனது வாழ்க்கை குறித்து அவ்வப்போது விநாயகர் சிலை முன்பு புலம்புகிறார். இதற்கிடையே, திடீரென்று ரமேஷ் திலக்கை மனித வடிவில் சந்திக்கும் வினாயகர், நான் தான் நீ வணங்கும் வினாயகர் என்று சொல்ல…
முதலில் நம்பாமல் அடுத்தடுத்து தன் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களால் நம்பத் தொடங்கும் ரமேஷ்திலக்கின் அடுத்த கட்ட மாற்றம் எத்தகையது என்பது கிளைமாக்ஸ்.
கதையின் நாயகனாக நடித்திருந்தாலும் கதாபாத்திரம் போலவே படம் முழுவதும் வலம் வரும் ரமேஷ் திலக், வழக்கமான பாணியில் குறையில்லாமல் நடித்திருக்கிறார். குறிப்பாக அவரது ராஜஸ்தான் பயணமும் அதில் அவர் பெறும் மாற்றமும் ஒரு குணசித்ர நடிகனை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
விநாயகராக நடித்திருக்கும் யோகிபாபுவுக்கு நடிக்கும் காட்சிகளை விட நொறுக்குத் தீனி சாப்பிடும் நேரமே அதிகம். என்றாலும் கிளைமாக்சில் ரமேஷ்திலக்கை சந்திக்கும் இடம் நெகிழ்ச்சி மயம்.
ரமேஷ் திலக்கின் நண்பராக வரும் கருணாகரன், தன் இருப்பை நிரூபிக்கிறார்.
வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் ஊர்வசியின் கதாபாத்திரம், ‘இந்த காலத்திலும் இப்படி ஒருவரா!’ என்று எண்ண வைக்கிறது. தன் குடும்பத்தின் திடீர் மரணம் குறித்து அவர் விநாயகரிடம் கேள்வி எழுப்பும் இடத்தில் கண்களில் நீர்ப்பெயர்ச்சி.
கார்த்திக் எஸ்.நாயரின் ஒளிப்பதிவும் பரத் சங்கரின் இசையும் ஓ.கே. குறிப்பாக பின்னணி இசையில் மாயாஜாலமே நிகழ்த்துகிறார், இசையமைப்பாளர்.
நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் என்ற கருவை முன்வைத்து இயக்கிய ரெஜிஷ் மிதிலா, கதையை நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், பலமில்லாத திரைக்கதை வேகக்குறைவுக்கு வழி வகுத்து விடுகிறது.
