செய்திகள்

சாரா – திரை விமர்சனம்

பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றும் சாக்க்ஷி அகர்வால், அதே நிறுவனத்தில் பணியாற்றும் விஜய் விஸ்வாவை காதலிக்கிறார். பெற்றோர் சம்மதத்தின் பேரில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணத்துக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் சாக்‌ஷி அகர்வால், அவரது காதலர், சாக்ஷி அகர்வாலின் தம்பி
ஆகியோர் கடத்தப்படுகிறார்கள் அந்த நிறுவனத்தில் கட்டுமான தொழிலாளியாக பணியாற்றும் செல்லக்குட்டி அவர்களை கடத்தி சிறை வைக்கிறார்.
இத்தனைக்கும் சாக்‌ஷி அகர்வாலும் செல்லக்குட்டியும் பள்ளிப் பருவ நண்பர்கள். இப்படி இருக்க அவர் அப்படி செய்தது ஏன்? கடத்தியவர் அவர்களை என்ன செய்தார்? கேள்விக்கான விடையை எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்வதே இந்த ‘சாரா’.
கதையின் நாயகியாக சாரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாக்‌ஷி அகர்வால், அந்த கேரக்டரில் தேர்ந்த நடிப்பில் பிரகாசிக்கிறார். தன் சிறு வயது நண்பனை, தொழிலாளியாக பார்த்த நிலையிலும் அவர் காட்டும் அன்பு நிஜமான நட்புக்கு அடையாளம். அதே நண்பன் சைக்கோவாக மாறி தன்னை, தன் காதலனை, தன் தம்பியை கடத்திய காரணம் அறிந்து அதிருமிடத்தில் அவரது முகத்தின் அதிர்ச்சி ரேகைகள் நடிப்பின் சிகரமாக அவரை உணர வைக்கின்றன.
சாக்‌ஷி அகர்வாலின் காதலராக நடித்திருக்கும் விஜய் விஸ்வா தான் படத்தின் ஹீரோ. ஆனால் படத்தில் இவரது பங்களிப்பு குறைந்தபட்ச நேரமே. இவரது கேரக்டரை இன்னும் கூட விரிவு படுத்தி இருக்கலாம்.
கோமாளி தோற்றத்தில் தன்னை காட்டிக்கொண்டு அறிமுகமாகும் இயக்குநர் செல்லக் குட்டி, தமிழ் சினிமாவில் இயக்குனராக பிரகாசிக்கிறாரோ இல்லையோ, நடிப்பில் நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடப்படும் இடத்துக்கு வருவார். கடத்தலுக்கு பின் அடுத்தடுத்த காட்சிகளில் அவர் எடுக்கும் விஸ்வரூபம் திரையரங்கை அதிர மட்டுமல்ல…அலறவும் வைக்கிறது. படத்தின் ஹீரோயின், ஹீரோ, வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களையும் ஓரம் கட்டிவிட்டு, அவர் நடத்தியிருக்கும் ராஜபாட்டை நிச்சயம் வேறு லெவல்.
யோகி பாபு வரும் காட்சிகள் சிரிக்கவைக்கிறது. ரோபோ சங்கர், தங்கதுரை கேரக்டர்கள் காமெடியா குரூரமா என்பதை புரிந்து கொள்ள நேரம் எடுக்கிறது.

செல்லக்குட்டியின் அம்மாவாக வரும் அம்பிகா, வில்லனாக நடித்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா கொடுத்த கேரக்டரில் நிறைவு காட்டுகிறார்கள்.
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம்.
ஒளிப்பதிவாளர் ஜெ.லக்‌ஷ்மன் குமாரின் கேமரா படத்தின் இன்னொரு நாயனாகவே உலா வருகிறது.

எழுதி இயக்கியிருக்கும் செல்லக்குட்டி, எல்லை மீறிய நட்பு பின்னணியில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் கதையை கொடுத்திருக்கிறார். செல்லக்குட்டி – சாக்ஷி தொடர்பான அந்த பள்ளிப்பருவ பிளாஷ்பேக் நட்புக்கான உச்சபட்ச அடையாளம்.
இந்த சாரா மூலம் செல்லக்குட்டி என்ற அற்புதமான நடிகர் வெளிப்பட்டு இருக்கிறார்.
அந்த வகையில் இது ஒன் மேன் ஷோ.