திரை விமர்சனம்

தெய்வ மச்சான் திரை விமர்சனம்

நாயகன் விமலின் கனவில் வரும் வேல.ராமமூர்த்தி, அவருக்கு நெருக்கமானவர்களின் மரணத்தை முன் கூட்டியே சொல்கிறார். அவர் சொல்வது அனைத்தும் அப்படியே நிஜத்திலும் நடக்கிறது.

இந்நிலையில் விமலின் தங்கை அனிதா சம்பத்துக்கு வரும்வரன்கள் எல்லாம் ஏதோ ஒரு தடையால் தட்டிப்போக, ஒருவழியாக மாப்பிள்ளையாக வத்சன் வீரமணி முடிவாகிறார். திருமணத்திற்கு முந்தைய நாள் விமலின் கனவில் வரும் வேல.ராமமூர்த்தி, ”உன் தங்கை கணவன் திருமணமாகி இரண்டு நாட்களுக்குள் இறந்து விடுவான்” என்று சொல்ல…

இதனால் தங்கையின் திருமணத்தை நிறுத்தி வத்சனின் மரணத்தை தடுக்க நினைக்கும் விமலின் முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை முழுநீள காமெடி படமாக தந்திருக்கிறார்கள்.

‘களவாணி’ படத்துக்குப் பிறகு விமலின் ‘கலகல’ நடிப்பில் மறுபடியும் ஒரு படம். மனிதர் பட்டையை கிளப்பி இருக்கிறார். தங்கை கணவரின் உயிர் போய் விடும் என்று முன்னரே தெரிந்த நிலையில் அவர் தனது மச்சானை பாதுகாப்பதற்காக செய்யும் வேலைகள் அனைத்தும் நகைச்சுவை இணைந்த பரபரப்பு.

விமலுக்கு ஜோடியாக நநேஹா ஜா வந்து போகிறார். தங்கையாக நடித்திருக்கும் அனிதா சம்பத், அந்த அழுத்தமான கேரக்டரில் பளபளக்கிறார். படத்தின் இன்னொரு ஹீரோவாக வரும் வத்சன் வீரமணி, காட்சிக்கு காட்சி தன் பொருத்தமான தேர்வை நிரூபிக்கிறார். படத்தின் உயிர்நாடியே நகைச்சுவை தான் என்பதை புரிந்து கொண்டு அவர் கொடுக்கும் ரியாக்–ஷன்கள் ஒவ்வொன்றும் சிரிப்பில் அடி வயிறு குலுங்கும் ரகம்.

காமெடி ஏரியாவில் பாலசரவணன். பாண்டியராஜன், தீபா சங்கர், ஆடுகளம் நரேன், கிச்சா ரவி என அனைவருமே தங்கள் நடிப்பால் சிரிக்க வைக்கிறார்கள்.

கமர்ஷியல் படம் என்றாலும் அதில் தேவையில்லான விஷயங்களை திணிக்காமல், தான் சொல்ல வந்ததை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் இயக்குநர் மார்டின், சிரிக்க சிரிக்க ஒரு படம் தந்த விதத்தில் தமிழ் சினிமாவின் நம்பிக்கை வரவாகி இருக்கிறார்.