திரை விமர்சனம்

விட்னெஸ் பட விமர்சனம்

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக குப்பை அள்ளும் தொழில் செய்து வருகிறார் ரோகிணி. இவரது ஒரே உலகம் மகன் பார்த்திபன் தான். பார்த்திபனும் தனது தாயின் மீது உயிராக இருக்கிறார்.
நீச்சல் போட்டியில் திறமையானவனாக இருக்கிறார் பார்த்திபன். இதனால் மகன் அந்த துறையில் சாதிப்பான் என்ற கனவோடு இருக்கும் அந்த தாயின் எண்ணத்தில் மண் போடுகிறது, அந்த எதிர்பாராத சம்பவம். அப்பார்ட்மெண்ட் ஒன்றின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தி அழைக்கப்படும் பார்த்திபன், உள்ளே இறங்கும்போது மூச்சுத் திணறி மரணித்த செய்தி அந்த தாயை அதிர்ச்சியில் புரட்டிப் போடுகிறது. உறைந்து போகிறார் ரோகிணி.
தனது மகனுக்கு நடந்தது போல் இனி எவர்க்கும் நடக்கக் கூடாது என்று எண்ணும் ரோகிணி, தொழிற்சங்கத் தலைவரோடு சேர்ந்து நீதிமன்றத்தின் படியேறுகிறார். பார்த்திபனை அந்த பணிக்கு நிர்ப்பந்தித்த நபர், அப்பார்ட்மெண்ட் நிர்வாக தலைவர், ஒப்பந்தக்காரர், மாநகராட்சி பொறியாளர் என இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை பெற்றுத் தர வழக்கறிஞர் சண்முகராஜா உதவியுடன் நீதிக்காக போராடுகிறார் ரோகிணி.
இதில் ரோகிணிக்கு துணையாக பார்த்திபனின் தோழியான ஷ்ரதா ஸ்ரீநாத்தும் கைகோர்க்க,. இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
பார்த்திபன் வேடத்தில் நடித்த இளைஞர், அவரது அம்மாவாக நடித்திருக்கும் ரோகிணி, ஷரத்தா ஸ்ரீகாந்த் ஆகியோர் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள். மகனின் இழப்புக்கு நீதி கேட்டு போராடும் இடங்களில் ரோகிணி சிறப்பு நட்சத்திரமாக மின்னுகிறார்.
ஆண் வர்க்கத்தின் எதிர்ப்பை தனி ஒருவராக எதிர்கொள்ளும் தைரியமான பெண்ணாக நடித்திருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அந்த கேரக்டருக்கு தனித்துவம் சேர்க்கிறார். அப்பார்ட்மெண்ட்வாசிகளை ஆசேவத்துடன் எதிர்கொள்ளும் காட்சியில் புலியின் சீற்றம்.
வழக்கறிஞராக சண்முக ராஜா பிற்பகுதி படத்தை தனது இயல்பான நடிப்பால் தூணாக தாங்குகிறார்.
அழகம்பெருமாள், ஜி.செல்வா, ராஜீவ் ஆனந்த், தமிழரசன், ஸ்ரீநாத், சுபத்ரா ராபெர்ட் தங்கள் கேரக்டர்களை நடிப்பால் மெருகேற்றி ரசிக்க வைக்கிறார்கள்.

எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் தீபக், சாமானிய மக்களின் வாழ்க்கையை சினிமாத்தனம் இல்லாமல் தந்திருப்பது தனிச்சிறப்பு.
சொகுசு வாழ்க்கைக்காக பல கோடிகளை செலவு செய்யும் கூட்டம், தங்களது கழிவுகளை அகற்றுவதற்கு செலவு செய்ய தயங்குவதால் எற்படும் விபரீதங்களை காட்சிப்படுத்திய விதத்திலேயே சமூக அவலத்துக்கு இயக்குனர் தீபக் கொடுத்திருப்பது சாட்டையடி. வித்தியாசமான கிளைமாக்சிலும் தேர்ந்த இயக்குனராக தன்னை நிரூபித்து இருக்கிறார்.

ரமேஷ் தமிழ்மணியில் இசை படத்தின் இன்னொரு ஜீவன்.