2019-ல் தெலுங்கில் ஹிட்டடித்த `ஏஜெண்ட் சாய்ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ படத்தை சில மாற்றங்களுடன் திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஊருக்குள் காணாமல் போன பூனைக்குட்டி வரை கண்டு பிடித்துக் கொடுத்து பெயர் வாங்கும் தனியார் துப்பறியும் நிறுவன கண்ணாயிரமாக சந்தானம். குற்றங்கள் நடக்கும் இடங்களுக்கெல்லாம் போலீஸ் வருவதற்கு முன்பாகவே சென்று ‘துப்பு துலக்குகிறேன்’ என்று போலீஸுக்குக் குடைச்சல் கொடுக்கிறார்ம். இதனால் கடுப்பாகும் உள்ளூர் போலீஸ் அவரை சந்தேக கேஸில் கைது செய்து லாக்-அப்பில் வைக்கிறது. அவர் வெளியில் வந்ததும் ரெயில் தண்டவாளம் ஓரம் பிணம் கிடப்பதாக ஒரு போன் வர, போலீசை முந்திக் கொண்டு ஸ்பாட்டுக்குப் போகிறார். மீண்டும் சந்தேகத்தின் பேரில் கைதாகி லாக்-அப்புக்குள் இருக்கும்போது, அங்கிருந்த பெரியவர் முனீஸ்காந்த், தன் மகளைக் கண்டுபிடித்துத் தரச் சொல்லிக் கதறி அழ…
சந்தானமும் அவர் மகளை கண்டு பிடித்து தருவதாக உறுதி சொல்லி துப்பு துலக்க களமிறங்குகிறார். இந்நிலையில் ரெயில்வே தண்டவாளங்கள் அருகே கிடக்கும் பிணங்கள், திடீர் திடீரென நிகழும் கொலைகள் அதிர்ச்சியை ஏற்படுத்த, மர்ம முடிச்சுகளை சந்தானம் தன் சாதுர்யத்தால் எப்படி அவிழ்க்கிறார் என்பது கதை.
அம்மா சென்டிமென்ட், மெதுவான திரைக்கதை எனப் படம் முதல் பாதியிலேயே தடுமாறுகிறது. ஏற்கெனவே வெற்றி பெற்ற கதையை அப்படியே எடுத்திருந்தால் கூட படம் தப்பியிருக்கும். குலுகுலு படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் சீரியஸ் கேரக்டரிலேயே வருகிறார், சந்தானம். ஆரம்பத்தில் ‘ஐயாம் ஏஜெண்ட் கண்ணாயிரம்…பீஸ் இரண்டாயிரம்’ என்று சொல்லும் ஒருசில இடங்களில் மட்டும் சிரிக்க வைத்தவர், போகப்போக அவரும் சிரிப்பை மறந்து நம்மையும் கூடவே படத்தையும் சீரியஸ் ஆக்கி விடுகிறார்.
நாயகியாக வரும் ரியா சுமன் படம் முழுவதும் சந்தானத்துக்கு உதவும் பாத்திரத்தில் இயல்பாக வந்து போகிறார். இவர்களுக்குள் காதல் இல்லை என்பது ஆறுதல்.
சந்தானத்தை அடிக்கடி உள்ளே தூக்கிப்போடும் இன்ஸ்பெக்டர் வேடத்தில் மதன் கச்சிதம். மனிதநேய போலீசாக வழக்கம் போல ஈ.ராமதாஸ் கவர்கிறார். காமெடிக்கு புகழ், ரெடின் கிங்ஸ்லி இருந்தும் சிரிப்பு மிஸ்சிங். இயக்கிய மனோஜ் பீதா சிரிப்பு சந்தானத்தை சீரியஸ் சந்தானமாக்கியிருக்க வேண்டாம்.