ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரியூர், சிவனெந்தல் ஆகிய இரண்டு கிராமங்களுக்கும் பொதுவான கோயில் யாருக்கு என்பதில் இரண்டு ஊருக்கும் போட்டா போட்டி. இதற்காக நடந்த பஞ்சாயத்தில், வரவிருக்கும் கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு நடத்தி, ஒரு கிராமத்து சார்பில் காளைகளையும், இன்னொரு கிராமத்து சார்பில் காளையர்களையும் களத்தில் இறக்கி யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த ஊருக்கு தான் கோயில் என முடிவாகிறது. போட்டி நாள் நெருங்கி வரும் வேளையில் மாட்டை அடக்க காரியூருக்கு ஒரு வீரனும், சிவனெந்தலுக்கு ஒரு காளையும் தேவைப்பட…

சென்னையில் பந்தயக்குதிரை ஜாக்கியாக இருக்கும் சசிகுமாரை மாடுபிடி வீரராக அழைத்து வருகிறது காரியூர். அதேபோல் எந்த போட்டியிலும் பிடிபடாத கதாநாயகி பார்வதி அருணின் காரி காளை சிவனெந்தல் கிராமத்திற்கு கிடைக்கிறது. சசிகுமாருக்கு காரி காளை அடங்குகிறதா? காரியூர் கெளரவத்தை நாயகன் காப்பாற்றுகிறாரா? என்பது கிளைமாக்ஸ்.
ஜல்லிக்கட்டு போட்டியின் மூலம் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி பல அமைப்புகள் அப்போட்டிக்கு தடை கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியால் ஊருக்கும், காளைகளுக்கும் கிடைக்கக் கூடிய நன்மைகளை மிக விளக்கமாக சொல்லியிருக்கும் இப்படம் சரியான நேரத்தில் வந்திருப்பது, முதல் பிளஸ். அதை படமாக்கிய விதத்தில் ஜல்லிக்கட்டு போட்டியையும், அதை நேசிக்கும் மக்களின் நம்பிக்கையையும் சிகரம் ஏற்றி வைக்கிறது படம்.

நாயகனாக சசிகுமார், இம்மாதிரியான கேரக்டருக்குத் தான் காத்திருந்தாரோ என்று நினைக்க வைக்கிற அளவுக்கு அந்த கேரக்டரோடு இணைந்து வெளிப்படுத்தியிருப்பது ‘நடிப்பு கம்பீரம்.’ முதல் பாதியில் சென்னை தமிழ் பேசும் சென்னை வாசியாக வலம் வருபவர், கிராமத்துக்கு வந்த பிறகு நடிப்பில் இ்ன்னொரு பரிமாணம். ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளையின் கொம்பு அவரது கண்ணருகே உரசிப்போகும் காட்சியில் துணிந்த அந்த நடிப்புக்கு சபாஷ் சொல்லியாக வேண்டும்.

நாயகியாக நடித்திருக்கும் பார்வதி அருண், கிராமத்துப் பெண் கேரக்டரில் தன்னை அற்புதமாக பொருத்திக் கொண்டிருக்கிறார். தனது காளை அடிமாட்டுக்கு விற்கப்பட்டது தெரிய வந்ததும் அவர் மண்ணில் புரண்டு அழும் அந்த ஒரு காட்சி போதும், இவர் பேர் சொல்ல..

வில்லனாக ஜேடி சக்கரவர்த்தி, சசிகுமாரின் அப்பாவாக நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நாகி நீடு, பிரேம், சக்யுக்தா கேரக்டர்களோடு ஐக்கியமாகி கதைக்குள் நம்மையும் கொண்டு போய் விடுகிறார்கள். காமெடிக்கு ரெடின் கிங்ஸ்லி.

ராமநாதபுர மாவட்டத்தின் வறட்சியை கண் முன் கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவின்கேமரா, துள்ளிக்கிட்டு வரும் காளைகளை நம் கண்முன்னே ஓட விடுகிறது. அந்த காரி காளை அழகு. அப்படியொரு கம்பீரம். அதன் பார்வையே கதை சொல்கிறது.
கதை எழுதி இயக்கியிருக்கும் ஹெமந்த், மாடுகளை மக்கள் கடவுளாக தான் வணங்குகிறார்களே தவிர, அவற்றை எந்த விதத்திலும் துன்புறுத்துவதில்லை என்பதை அழுத்தமான காட்சிகள் மூலம் சொல்லியிருக்கிறார். ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க போராடுகிறவர்கள், குதிரைப்பந்தயத்திற்கு ஏன் தடை கேட்பதில்லை என்று கேட்டிருப்பது சம்பந்தப்பட்டவர்களுக்கான நெத்தியடி.

தரிசாக கிடக்கும் நிலங்களை குப்பை மேடாக மாற்றும் ஆட்சியாளர்கள், அதனால் அழியும் கால்நடைகள், பறவைகள் என பல விஷயங்களை நடுநடுவே பேசி சமூக அக்கறையையும் விதைத்த விதத்தில் இயக்குனர் ஹேமந்த், தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய நல்வரவு.

காரி, வீரம்.