‘பனாரஸ் ‘ விமர்சனம்

ஜையித்தான் ,சோனல் மோண்டிரோ, அச்யுத்குமார், தேவராஜ்,ஸ்வப்னா ராஜ், சுஜய் சாஸ்திரி நடிப்பில் ஜெயதீர்த்தா இயக்கியுள்ள படம். இசை அஜனீஷ் லோக்நாத் ,ஒளிப்பதிவு அத்வைத குருமூர்த்தி.
இப்படம் கன்னடத்தில் உருவாகி தமிழ் , தெலுங்கு,மலையாளம், ஹிந்தி ஆகிய மொழியில்
மொழிமாற்றுப்படமாக வந்துள்ளது. இது ஒரு பான் இந்தியா படம்.
சரி பனாரஸ் படத்தின் கதை தான் என்ன?
மேல் தட்டு வர்க்கப் பையனான ஜையித் கான் ஒரு கல்லூரி மாணவர்.தாய் இல்லாத பிள்ளை, தந்தை அரவணைப்பில் செல்லமாக,சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது நண்பர்களுடன் ஜாலியாக இருந்து சவால் விட்டு வாழ்பவர். இப்படி ஒரு சவால் விட்டு டிவி ஷோக்களில் பிரபலமான சோனலிடம் நெருக்கமாக இருப்பதை நம்பும்படியாக ஒரு பொய் சொல்கிறார்.அவரிடம் பழகி போட்டோ எடுத்து சமூக ஊடகங்களில் பரவ விடுகிறார். இதற்கு டைம் மெஷின் என்ற விஷயத்தைப் பயன்படுத்தி நண்பர்களுடன் சவால் விட்டு ஜெயிக்கிறார்.
அவர்கள் தனது நண்பன் சோனலைக் காதலிப்பதாக நம்புகிறார்கள். தன் படம் சமூக ஊடகங்களில் பரவியதால் கோபமும் அவமானமும் சோனலுக்கு.பெற்றோர் இல்லாத பெண் அவர்,
காசியில் இருக்கும் தனது சித்தப்பா வீட்டிற்குச் செல்கிறார். அவரைத் தேடி பனாரஸ் சென்று மன்னிப்பு கேட்க அலைகிறார் நாயகன் ஜையித்கான். நாயகனின் மன்னிப்பை நாயகி ஏற்றாரா?நாயகனின் தவிப்பும் அலைச்சலும் மனஉளைச்சலும் நாயகியின் மனதில் அனுதாபத்தை ஏற்படுத்தியதா? அவர்களுக்குள் காதல் முளைத்ததா என்பது தான் படத்தின் கதை.
இடைவேளைக்குப் பிறகு டைம் லூப் என்கிற விஷயம் வருகிறது .அதில் சிக்கிக்கொண்ட ஜையித் கான் எப்படி அதில் மூழ்குகிறார்? அதன் காரணம் என்ன?அதிலிருந்து மீண்டாரா இல்லையா என்பதை இரண்டாம் பாதியில் விரிவாகச் சொல்கிறார்கள். இடையிடையே இருவருக்கும் சுழலும் காதல் காட்சிகள் உண்டு.
ஜையித்கான் ஒரு புதுமுக நடிகர் என்பதை நம்பவே முடியவில்லை. அந்த அளவிற்கு அனுபவப்பட்ட நடிப்பை வழங்கி இருக்கிறார்.ஆரம்பத்தில் ஜாலி மன்னனாக இருக்கும் அவர் ஒரு தவறு செய்து விட்டோம் என்று தவிக்கிற தவிப்பும் அதனால் அவர் படும் மன உளைச்சலும் தன்னையே வெறுத்து வருந்துவதும் என பலவிதமான பாவங்கள் காட்டி நடித்துள்ளார்.இப்படி முதல் படத்திலேயே பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்.அதேபோல கதாநாயகி சோனலும் தனது இளமைத் தோற்றம், அழகு, நடிப்பு என்று எல்லா விதத்திலும் கவர்கிறார்.கதாநாயகனுக்கு ஏற்ற பொருத்தமான ஜோடியாக இருந்து மனதில் பதிகிறார்.
ஜையித் கானை ஆரம்பத்திலிருந்து பிடிக்காமல் மன்னிக்காமல் கோபத்தை காட்டிக் கொண்டே வருகிறார் சோனல். அவரது பாத்திரம் வலுவாக இருந்தது மட்டுமல்ல குடும்பப் பாங்காக அவர் தோற்றம் இருப்பதும் அவர் பாஸ்மார்க் வாங்குவதற்கான ஒரு காரணம்.
தேவராஜ் ,அச்யுத்குமார், , ஸ்வப்னா ராஜ் ஆகியோரும் மனதில் பதியும் பாத்திரங்களில் வருகிறார்கள். கதாநாயகனின் நண்பராக சுஜய் சாஸ்திரி வருகிறார். வழக்கமான கதாநாயகனுக்கு உதவி செய்து காமெடி செய்யும் பாத்திரத்தில் வரும் அவர், சின்ன நகைச்சுவைப் பாத்திரத்தில் அத்தனை முகம் காட்டுகிறார் .
பெரும்பாலான காட்சிகள் காசியில் படமாக்கப்பட்டுள்ளன. காசியின் தெருக்களில் கங்கை நதியில் கங்கைக் கரையில் நாமும் பயணம் செய்தது போன்ற உணர்வை தன் ஒளிப்பதிவு மூலம் ஏற்படுத்தி இருக்கிறார் அத்வைத குருமூர்த்தி.
இந்தப் படத்தில் காசி என்பதே ஒரு பாத்திரம் போல் கண்களுக்குள் விழுந்து நம் மனதைக் கொள்ளை கொள்கிறது.
படத்தை இயல்பாகக் காட்ட வேண்டும் என்று நீட்டி முழக்கி உள்ளார்கள். கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் இன்னும் வேகம் கூடியிருக்கும். டைம் லூப் காட்சிகள் சில இடங்களில் நம்மைச் சோதிக்கின்றன.
ஒரு காதல் கதையில் டைம் லூப் அம்சம் தேவையா என்று நினைக்கத் தோன்றுகிறது.காதல் கதையில் அறிவியலைச் சேர்த்து அவியல் செய்துள்ளனர்.
ஆனால் அதுதான் புதுமை என்று செய்துள்ளார்கள்.
பனாரஸ் அதாவது காசி சம்பந்தப்பட்ட காட்சிகள் கண்ணுக்கும் மனதிற்கும் திருப்தி அளிப்பவை.பாடல்கள் பரவாயில்லை ரகம் .வரிகள் பழனி பாரதி.
மத நம்பிக்கை உள்ளவர்கள் தமது குறைகளைக் கைவிடுவதற்காகச் காசிக்குச் செல்வது வழக்கம். இங்கு கதாநாயகனும் தனது மணமாசைக் கழுவி விடுவதற்காகச் காசிக்குச் செல்கிறான். இப்படி காசி பின்புலத்தில் காட்சிகள் மிக விரிவாக அழகாகக் காட்டப்பட்டுள்ளன.பனாரஸ் இயற்கை அழகு இணைந்த காதல் கதை.
