சினி நிகழ்வுகள்திரை விமர்சனம்

‘நித்தம் ஒரு வானம் ‘ விமர்சனம்

அசோக் செல்வன், ரித்து வர்மா, அபர்ணா பால முரளி, ஷிவாத்மிகா ராஜசேகர்,அழகம்பெருமாள் காளி வெங்கட், அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ரா. கார்த்திக் எழுதி இயக்கி உள்ளார். இசை- கோபி சுந்தர்.
ஒளிப்பதிவு விது அய்யன்னா.

அசோக் செல்வன் நேர்க்கோடு தாண்டாதவர், நெறியில் வாழ்பவர். ஐடியில் பணி புரிகிறார்.சின்சியர் சிகாமணியாக இருப்பவர். வேலையில் தத்துப்பித்துத் தனங்கள், சலசலப்புகள் அவருக்குப் பிடிக்காது அந்த அளவிற்கு வேலை சுத்தம்.

அப்படிப்பட்டவருக்கு நிச்சயமான திருமணம் தடைப்படுகிறது.அதனால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.

இந்த சமூகமே அவரைக் கேலி செய்வதாக மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார்.அந்தத் தாழ்வு உணர்ச்சியே அவரைப் பாபாய்ப் படுத்துகிறது. எல்லாரையும் வெறுக்கிறார். மீள முடியாமல் தவிக்கிறார்.
அவரைச் சரி செய்யும் நோக்கத்தில் அவரது குடும்ப டாக்டர் இரண்டு டைரிகள் கொடுத்துப் படிக்கச் சொல்கிறார் .வேண்டா வெறுப்பாக படிக்க ஆரம்பிக்கிறார்.அது கதை போல் தோன்றினால் பிறகுதான் நிஜம் என்பது புரிகிறது.ஆனால் முடிவு தெரியவில்லை.பரபரப்பாகத் தேடினால்,கடைசிப் பக்கங்களை வேண்டுமென்றே டாக்டர் கிழித்து வைத்திருந்தார்.முடிவு தெரிய வேண்டும் என்றால் அந்த இரண்டு பேரின் வாழ்க்கையை அறிய அவர்களை நேரில் பார்த்தால் தான் தெரியும் என்றுகூறுகிறார் டாக்டர்.தன் மனதிற்கும் ஒரு மாற்றமாக இருக்கும் என்று அவர்களைத் தேடி ஒரு பயணத்துக்குத் தயாராகிறார் அசோக் செல்வன்.அப்படிப் பயணத்தில் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் செல்கிறார். பயண வழியில் சந்திக்கிற ரித்து வர்மாவும் அசோக் உடன் இணைந்து கொள்கிறார்.

டைரியில் படித்ததெல்லாம் அவர் மனதிற்குள் ஒரு கதையாக ஓடுகிறது. அதில் வரும் பாத்திரங்களுக்கு தன்னைப் பொருத்திப் பார்க்கிறார்.நேரில் சென்று பார்க்கும் போது அந்த பாத்திரங்களும் முடிவும் எப்படி உள்ளன என்கிற பயணம் தான் நித்தம் ஒரு வானம் படம்.

இப்படத்தில் அசோக் செல்வன் ,தான்,படிக்கிற கதைகளிலும் பாத்திரமாக வருகிறார். இப்படி மூன்று மூன்று விதமான குணசித்திரங்களில் தனது சர்ப்ரைஸ் நடிப்பை வெளிக்காட்டி அசத்துகிறார்.

ரித்து வர்மா, அபர்ணா பால முரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என
மூன்று கதாநாயகிகள். அவர்களும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளார்கள்.
மூன்று விதமான குணச்சித்திரங்கள் காட்டுகிறார்கள்.அவர்கள் ஒவ்வொருவருக்கும் பின்புலக் கதைகளை அழகாக அமைத்துள்ளார் இயக்குநர் ரா. கார்த்திக்.

கதை மாந்தர்கள் மட்டுமல்லாமல் அசோக் செல்வன் பயணம் செய்யும் இடங்களும் நம் மனதில் ஆழமாகப் பதிகின்றன. தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேஷ், மேற்கு வங்காளம் என்று பல இடங்களில் கதை நகர்வதால் அங்கெல்லாம் சென்று படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.

கொச்சி, சண்டிகர், குலுமனாலி என்று இயற்கை எழில் கொஞ்சம் அழகைக் காட்சிகள் ஆக்கியுள்ளார்கள்.குறிப்பாக அந்த ரோட்டன் பாஸ் பனிப்பொழிவு கண்கொள்ளாக் காட்சி.

படமே ஒரு பயணமாக இருப்பதால் ஏதோ நாமும் ஒரு ஜாலி டூர் செல்வது போல் உள்ளது. அத்துடன் படத்தில் சொல்லப்படுகிற கதை நமக்கு ஒரு போனஸ் மகிழ்ச்சி.

இயற்கை எழிலை கேமராவிற்குள் சிறைப்பிடித்து தந்துள்ள ஒளிப்பதிவாளர் விது அய்யன்னாவின் அழகான ஒளிப்பதிவும்,கதையின் ஓட்டத்திற்கும் பாத்திரங்களின் மன எண்ணங்களுக்குமேற்ப ஒலிக்கும் கோபி சுந்தரின் புதுமையான இசையும்
படத்திற்கு புது மலர்ச்சியைத் தருகின்றன.

ஒரு அழகான காதல் கதையில் வன்முறை இல்லாமல், புகை, குடி காட்சிகள் இல்லாமல் நம்பிக்கை எண்ணங்களை விதைத்துள்ளார் இயக்குநர் ரா. கார்த்திக்.

மொத்தத்தில் நித்தம் ஒரு வானம் ஒரு புதிய விடியலைப் பார்த்த உணர்வு.