டைரி விமர்சனம்
தயாரிப்பு : பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்
இயக்கம் : இன்னாசி பாண்டியன்
நடிகர்கள் : அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து, (அறிமுகம்) ஜெயபிரகாஷ், சாம்ஸ், ஷா ரா, நக்கலைட்ஸ் தனம் மற்றும் பலர்.
மதிப்பெண் 3/5
மூலக்கதை
சீனாவில் 1995 ஆம் ஆண்டில் மாயமாய் மறைந்த 375 என்ற பேருந்தை மையமாக வைத்து ஏராளமான கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த உண்மை சம்பவத்தை தழுவி ‘டைரி’ படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது.
கதை
காவலர் பயிற்சி கல்லூரியில் உதவி ஆய்வாளருக்கான பயிற்சியை முடித்திருக்கும் வரதன் (அருள்நிதி), பணி நியமனத்திற்கு முன், பயிற்சியின் இறுதி காலகட்டத்தில் விசாரணை ஒத்திகைக்காக பல ஆண்டுகளாக தீர்வு காணப்படாத வழக்கினை எடுத்து விசாரிக்க வேண்டும் என்பது நடைமுறை. இதற்காக பதினாறு ஆண்டுகளுக்கு முன் கோயம்புத்தூர் மலைப்பாதை ஒன்றில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கினை விசாரணைக்காக தேர்வு செய்கிறார். இவரது விசாரணை எப்படி நடைபெற்றது? விசாரணையில் உண்மையான குற்றவாளியை கண்டறிந்தாரா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை.
திரைக்கதை
கதையாக கேட்பதற்கு சுவாரசியமாக இருந்தாலும், இதனை இரண்டு மணி நேர நீளமுள்ள திரைக்கதையாக மாற்றி, ரசிகர்களுக்கு சுவராசியமாக தருவதில் அறிமுக இயக்குநர் தடுமாறி இருக்கிறார். குறிப்பாக ஊட்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் உதவி ஆய்வாளரான நாயகி பவித்ரா மாரிமுத்துவை ஆக்சன் நாயகியாக அறிமுகப்படுத்திய பிறகு, அவரை நாயகனான அருள் நிதியை காதலிக்கும் சாதாரண பெண்மணியாக காட்சிப்படுத்தியிருப்பது.. நகைச்சுவை காட்சிகள் என்ற பெயரில் நடிகர் ஷா ராவை வலிந்து திணித்திருப்பது..
உதவி ஆய்வாளரை அவரது கீழ் பணியாற்றும் சாம்ஸ் கிண்டலடிக்கும் காட்சிகள்.. என பலவற்றை குறிப்பிடலாம்.
ஊட்டியிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் பேருந்தில் கதை பயணிக்கும் போதும்… அதில் அருள்நிதி வெவ்வேறு காலகட்டத்தில் பயணிக்கும் போதும் இயக்குநரின் புத்திசாலித்தனம் பளிச்.
பேருந்தில் பயணிகளாக பயணிக்கும் கதாபாத்திரங்களின் தேர்வும் கச்சிதம். அதிலும் குறிப்பாக நக்கலைட்ஸ் தனத்தின் சாமியாரினி கதாபாத்திரம் சூப்பர்.
தங்க நகையை கொள்ளை அடித்து செல்லும் கொள்ளையர்கள் கதாபாத்திரத்தை இன்னும் சற்று விரிவாக விவரித்திருக்கலாம்.
முதல் பாதியில் ரசிகர்களை சோர்வடைய வைத்தாலும் இடைவேளை மற்றும் இரண்டாம் பாதியில், தான் நினைத்ததை திரையில் வரவழைத்து மாயாஜாலத்தை நிகழ்த்தி பார்வையாளர்களை இருக்கைகளில் கட்டி போடுகிறார் இயக்குநர். யூகிக்க முடியாத திருப்பங்கள்… சுவராசியமான முடிச்சுகள்… என இயக்குநர் த்ரில்லர் ஜானருக்கான அம்சங்களை இடம் பெற வைத்து மிரட்டி இருக்கிறார். உச்சகட்ட காட்சியில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் திருப்புமுனையை வைத்து ரசிகர்களை உற்சாகமடைய வைத்திருப்பதற்காக இயக்குநரை கை வலிக்க கரம் குலுக்கி பாராட்டலாம்.
அருள்நிதி
‘டி பிளாக்’, ‘தேஜாவு’ என அடுத்தடுத்து திரில்லர் ஜானரிலான படங்களை அளித்து, தான் ஒரு ‘திரில்லர் நாயகன்’ என்பதை மீண்டும் ‘டைரி’ படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். தொடர்ந்து திரில்லர் பாணியிலான திரை கதைகளை தேர்ந்தெடுத்து, அதனை ரசிகர்களுக்கு வழங்கி வருவதற்காக அருள்நிதிக்கு பாராட்டு தெரிவிக்கலாம். அதிலும் போலீஸ் கதாபாத்திரத்தில் கம்பீரமான தோற்றத்துடனும், ஃபிட்டான உடல் மொழியுடனும் அவர் தோன்றுவது ரசனை.
தொழில்நுட்பம்
கதை பேருந்தில் பயணித்தாலும் அதனை விதவிதமான கோணங்களில் படமாக்கி பார்வையாளர்களை வியப்படையச் செய்ததில் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் பாராட்டை பெறுகிறார்.
ஒளிப்பதிவிற்கு நிகராக திரில்லர்.. மிஸ்டரி.. ஹாரர்.. என கலந்துகட்டி உருவான திரைக்கதைக்கு அதற்கேற்ற வகையில் பின்னணி இசையமைத்து, ரசிகர்களை உறையச் செய்வதில் இசை அமைப்பாளர் ரதன் ஈதன் யோஹனை தாராளமாக பாராட்டலாம்.
கலைஞர்கள்
புதுமுக நடிகை பவித்ரா மாரிமுத்து அறிமுகம் ஆக்சனுடன் இருந்தாலும், காட்சிகள் நகர நகர ரசிகர்களை தன் இளமையான குறும்பான பார்வையாலும், அழகான பொலிவாலும் வசீகரிக்கிறார். ஜெயப்பிரகாஷ், சாம்ஸ், ஷா ரா ஆகியோர் சில இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்கள். பேருந்தில் இளம் காதலர்களாக பயணிக்கும் இளம் நடிகைகளும், நடிகர் தணிகையும் கவனம் பெறுகிறார்கள்.
மொத்தத்தில் ‘டைரி’ பார்க்க வேண்டிய படைப்பு.