திரை விமர்சனம்

சீதா ராமம் பட விமர்சனம்

காதலின் தீவிரத்துக்கு முன் மதம், அரசியல், ஏற்றத்தாழ்வு என எதுவுமே தடையாக முடியாது என்பதே இந்த சீதா ராமம்.

பாகிஸ்தானில் தனது தாத்தா கொடுத்த கடிதம் ஒன்றை இந்தியாவில் இருக்கும் சீதா மகாலட்சுமியிடம் கொடுக்க நாடு தாண்டி வருகிறார், இளம்பெண் அப்ரின். அவரைத் தேடி அலைபவருக்கு சீதா – ராம் காதல் கதை தெரிய வருகிறது. யார் இந்த காதல் ஜோடி? அந்தக் கடிதத்தில் என்ன இருக்கிறது? அந்தக் கடிதம் சீதாவிடம் போய்ச் சேர்ந்ததா? என்பதை காதலும் நேமுமாய் நெஞ்சுக்குள் கொண்டு சேர்க்கும் படம்.
புத்திசாலி ராணுவ வீரராகவும், தீவிர காதல் நாயகனாகவும் நடிப்பில் இருவேறு பரிமாணம் காட்டி ஆச்சரியப்படுத்துகிறார், துல்கர் சல்மான். முகவரி இல்லாத அந்த சீதா மகாலட்சுமியின் காதல் கடிதம் வரத் தொடங்கியதில் இருந்தே துல்கரின் நடிப்பும் துடிப்பும் காதலின் புது இலக்கணம்.
ராமனுக்கு காத்திருக்கும் சீதையாக, எதற்காகவும் காதலை விட்டுக் கொடுக்க முடியாத காதலியாக, தொடக்கம் முதலே வசீகரிக்கத் தொடங்கி விடுகிறார், மிருணாள் தாக்கூர். தான் யார் என்பதை காதலனிடம் சொல்ல முடியாத காட்சிகளில் அந்த தவிப்பை நமக்கும் கடத்தி விடுகிற நடிப்புச் சிறப்பிலும் ஜொலிக்கிறார்.
அப்ரினாக வரும் ராஷ்மிகா தேர்ந்த நடிப்பைத் தருகிறார். உயர் ராணுவ அதிகாரிகளாக பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், நாயகனின் நண்பனாக சுமந்த் தேர்ந்த நடிப்பில் சிக்சர் அடிக்கிறார்கள். நாயகனின் அந்த தங்கை கேரக்டரும் அவள் மீட்பு படலமும் கதைக்குள் இன்னொரு சுகமான வலி.
காஷ்மீரின் குளிரை நமக்குள் கடத்தி விடுகிறது, பி.எஸ்.வினோத்-ஸ்ரேயாஸ் கிருஷ்ணா கேமரா. ஸ்ரீநகர், இந்திய – பாகிஸ்தான் எல்லை, ஹைதராபாத் பேலஸ் என பல இடங்களுக்கும் கைபிடித்து அழைத்த செல்கிற கேமராவுக்கு ராயல் சல்யூட். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது.
காதலுக்கு இ்ன்னொரு இலக்கணம் எழுதியிருக்கிறார், இயக்கிய ஹனு ராகவபுடி. அந்த கிளைமாக்ஸ் உருக்கத்தையும் தாண்டி கம்பீரம்.