பொய்க்கால் குதிரை திரை விமர்சனம்

மாற்றுத்திறனாளியான பிரபுதேவா, தன் ஒரே மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் சமயத்தில் மகளுக்கு வந்த இதயநோய் அதிர்ச்சியடைய வைக்கிறது. அதை சரி செய்ய மருத்துவம் 70 லட்சம் பட்ஜெட் போடுகிறது. பணத்துக்காக விபரீத முடிவெடுக்கும் பிரபுதேவா, தொழிலதிபரான வரலட்சுமியின் மகளை கடத்த திட்டமிடுகிறார். ஆனால் அவர் கடத்துவதற்கு முன் வேறு யாரோ கடத்தி விட, பழி பிரபுதேவா மேல் விழுகிறது.தன் மேல் விழுந்த பழியை எப்படி பிரபுதேவா சரி செய்தாரா? மகள் ஆபரேஷனுக்கான பணத்தை தயார் செய்தாரா? கடத்தப்பட்ட வரலட்சுமியின் குழந்தையின் கதி என்ன? என்பதே பொய்க்கால் குதிரை படத்தின் மீதிக் கதை.
ஒற்றைக் காலுடன் பாசமிகு தந்தையாக வரும் பிரபுதேவா நடிப்பில் பல படி மேலோங்கி தெரிகிறார். அலட்டலான தொழிலதிபராகவும் அன்பான தாயாகவும் நடிப்பில் பிரபுதேவாவுக்கு போட்டியாகி இருக்கிறார் வரலட்சுமி. ‘சார்பட்டா புகழ்’ ஜான் கொக்கைன் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். பிரபுதேவாவின் நண்பனாக ஜெகன் நடிப்பு இன்னொரு ஆச்சரியம்.
சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதியும்படி வந்து செல்கிறார் பிரகாஷ்ராஜ். ஒரு காட்சியில் வந்து அட்டண்டண்ட்ஸ் போட்டு போகிறார் ரைசா வில்சன்.
பல்லு ஒளிப்பதிவும் இமான் இசையும் இயக்குனரின் பக்க பலம். ‘ஏ’ படத்தில் இருந்து ‘ஏ ஒன்’ படத்துக்கு இடம் மாறியிருக்கும் இயக்குனரை பாராட்டலாம்.
