ஜோதி பட விமர்சனம்

நிறைமாத கர்ப்பிணியான ஜோதிக்கு பிரசவம் ஆக நான்கு நாட்கள் இருக்கும் நிலையில், அவருடைய வயிற்றை கிழித்து குழந்தை கடத்தப்படுகிறது. குழந்தையை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? கேள்விகளுக்கு பின்னான அதிர்ச்சி சம்பவங்களே படம்.
குழந்தை கடத்தல் தான் கதைக்களம் என்றாலும் அதை காரண, காரியங்களோடு காட்சிப்படுத்திய விதத்தில் நிமிர்ந்து நிற்கிறது, படம்.
போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வெற்றி கேரக்டரில் கம்பீரம் காட்டுகிறார். வழக்கு விசாரணையின் போது இயல்பான உடல் மொழியே காக்கிச்சட்டையின் விரைப்பை நடிப்பில் கொடுத்து விடுகிறது.
ஜோதி என்ற கதாப்பாத்திரத்தில் ஷீலா ராஜ்குமார். சில காட்சிகளில் வந்தாலும், படத்தின் ஒட்டு மொத்த பலமே இவர் தான். கிளைமாக்ஸ் காட்சியில் கலங்க வைக்கிறார்.
ஜோதியின் கணவர் கதாப்பாத்திரத்தில் ‘ராட்சசன்’ சரவணன், போலீஸ் கான்ஸ்டபிளாக குமரவேல் தங்கள் கேரக்டர்களில் முன்னிற்கிறார்கள்.
முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் தயாரிப்பாளர் ராஜா சேதுபதி, கதாபாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் செசி ஜெயா அனைத்து காட்சிகளையும் லைவ் லொக்கேஷன்களில் படமாக்கி கதையோடு நம்மையும் பயணிக்க வைக்கிறார்.
இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் பின்னணி இசை படத்தின் கனமான காட்சிகளில் தனித்து தெரிகிறது.
குழந்தை கடத்தல் சம்பவங்களின் பின்னணியை இதுவரை யாரும் சொல்லியிராத கோணத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார், ஏ.வி.கிருஷ்ண பரமாத்மா. தொடக்கம் முதல் முடிவு வரை சுவாரஸ்யம் குறையாமல் காட்சிகளை நகர்த்தியிருப்பது பலம். உண்மைக் கதையில் வரும் நாயகியின் தவிப்பை பார்வையாளனுக்கும் கடத்தி விடும் வித்தையிலும் தேர்ந்து தெரிகிறார்.
ஜோதி–பிரகாசம்.
