திரை விமர்சனம்

கார்கி திரை விமர்சனம்

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 9 வயது சிறுமி ஒருவர் 4 வட மாநில இளைஞர்களால் வன்புணர்வுக்கு உள்ளாகிறார். காவல்துறையின் தீவிர விசாரணையில் இந்த வழக்கில் ஐந்தாவது நபராக அந்த குடியிருப்பில் வாட்ச்மேனாக இருந்த சாய்பல்லவியின் தந்தையும் கைதாகிறார்.

தன் தந்தை நிரபராதி என நம்பும் சாய்பல்லவி, சட்டரீதியாக தந்தையை காப்பாற்ற போராடுகிறார். அவரது சட்டப் போராட்டம் வென்றதா? என்பதை நெஞ்சம் நெகிழ காட்சிப்படுத்தியிருக்கும் திரைக்கதை படத்தின் முழு பலம்.

நடுத்தர குடும்பத்தை சார்ந்த நாயகி கார்கி கேரக்டரில் அச்சாக பொருந்துகிறார், சாய்பல்லவி. அப்பா பாலியல் வழக்கில் மாட்டிக் கொண்டார் என தெரிந்ததும் ஏற்படும் அதிர்ச்சி, அப்பாவை காப்பாற்ற சந்திக்கும் நபர்கள் உதவ மறுக்கும் போது ஏற்படும் இயலாமை என கார்கியாகவே வாழ்ந்துள்ளார் சாய் பல்லவி. பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கே போய் அவமானப்பட்டு திரும்பும் இடத்தில் ‘நடிப்பே தெரியாத அப்படியோர் நடிப்பு’ விருதுக்கானது. எப்படியாவது பேச வைத்து விட வேண்டும் என்று முயன்றும் அந்த சிறுமி எட்டிக்கூட பார்க்காத சோகத்தில் பொங்கிப் பொங்கி அழுகிற இடம் இ்ன்னொரு விருதுக்கானது.
சாய்பல்லவியுடன் இணைந்து சட்டப்போராட்டம் நடத்தும் வழக்கறிஞராக காளி வெங்கட். இவரது காமெடி முகத்தையே அதிகம் பார்த்த நமக்கு இந்த ‘நடிப்பு முகம்’ நிச்சயம் புதுசு.

பாதிக்கப்பட்ட சிறுமியின் அப்பா கேரக்டரில் சரவணன். ‘இப்பல்லாம் என்னை அப்பாவா பார்க்காம ஆம்பிளையா பார்த்து பயப்படறா. அவ இப்படி இருக்கிறதுக்கு பேசாம செத்திருக்கலாம்’ என்று அவர் சொல்லும் இடம் இம்மாதிரி பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் அப்பாக்களின் ஒட்டு மொத்தக் குரல்.

சாய்பல்லவியின் அப்பாவாக ஆர்.எஸ்.சிவாஜி, அவரது இன்னொரு வாட்ச்மேன் நண்பராக லிவிங்ஸ்டன், கேரக்டர்களில் வாழ்ந்த மற்ற இருவர்.

கதையின் கனமான பகுதிகளில் எல்லாம் கோவிந்தாவின் இசை ‘திக்… திக்…’ தருகிறது.
திருநங்கைகள் நீதிபதியாக வந்தாலும் அவர்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது? ஒருவர் ஒரு பெரிய வழக்கில் கைதாகும்போது அவரும் அவரது குடும்பத்தினரும் எம்மாதிரியான அவமானங்களை சந்திக்கிறார்கள்? அவர்கள் விஷயத்தில் அவசரப்படும் மீடியாக்களால் நடைப்பிணமாகும் அந்த குடும்பம்…இப்படி கதையோடு இயல்பாக பயணிக்க வைத்ததற்காகவே இயக்கிய கவுதம் ராமச்சந்திரனுக்கு காத்திருக்கிறது, விருதுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *