சினி நிகழ்வுகள்திரை விமர்சனம்

இரவின் நிழல் திரை விமர்சனம்

நான்-லீனியராக தன் கதையை விவரிக்கும் ஒரு படத்தை சிங்கிள் ஷாட்டில் உலகிலேயே முதல் முறையாகச் சாத்தியப்படுத்தியிருக்கிறது ‘இரவின் நிழல்.’ ஒரு மனிதன் தன் வாழ்வின் கடைசி அத்தியாயத்தில் இருக்கும் போது அவன் கண் முன் அவனது மொத்த வாழ்க்கையும் முன்பின்னாக வந்து போவதை கடைசிவரை பிரமிப்பு விலகாமல் பார்க்க வைத்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது, படம்.
ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் கொண்ட இந்த ‘சிங்கிள் ஷாட்’ திரைப்படத்தை படக்குழு எப்படி படமாக்கியது என்பதை விவரிக்கும் முதல் 30 நிமிட ‘மேக்கிங்’ காட்சிகளே அநியாயத்துக்கு மிரட்டி விடுகின்றன.
நந்து ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்து கொள்கிறார். அந்த மரணம், ஊடகங்களில் பிரேக்கிங் நியூசாகி விட…
இயக்குநரின் தற்கொலைக்கு தன் கணவர் நந்து தான் காரணம் என நம்பும் அவருடைய மனைவியும் மகளும் அவரை வெறுத்து வீட்டைவிட்டு வெளியேறி காணாமல் போய் விடுகிறார்கள். நந்துவைக் கைது செய்ய போலீஸ் துரத்துகிறது.
தனது கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கிளம்பும் நந்து, ஒரு காலத்தில் பிரபலமாக இருந்து தற்போது புதர்மண்டிக் கிடக்கும் பாழடைந்த ஆசிரமத்துக்குள் போய் ஒளிந்து கொள்கிறார். அங்கிருந்து, ஊடகங்கள் அறிந்திராத, தன் வாழ்க்கைக் கதையை ஆடியோவில் பதிவு செய்கிறார். தன் வரலாற்றுப் பதிவு முடிந்த நேரத்தில் அந்த இடத்தை போலீஸ் சுற்றி வளைக்க, பார்த்திபன் என்ன முடிவெடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ்.

நந்துவாக பார்த்திபன், ஆனந்த் கிருஷ்ணன், சந்துரு, பிரவீன் குமார், ஜோஷுவா நடித்திருக்கிறார்கள். நந்துவின் மனங்கவர் நாயகிகளாக சிநேகா குமாரி, பிரிகிடா சகா, சாய் பிரியங்கா ரூத் என மூவர் நடித்திருக்கிறார்கள். இவர்களோடு வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கரும் இருக்கிறார்கள். இவர்களில் பார்த்திபனின் முதல் மனைவி சிலத்தம்மாவாக வரும் பிரிகிடா சகா நடிப்பில் பிரித்து மேய்ந்திருக்கிறார். கணவரை குளிக்க அனுப்பி பாத்ரூம் வெளிதாழ்ப்பாளை போட்டு விட்டு இவர் எடுக்கும் அந்த விபரீத முடிவில் இதயம் வரை வியர்த்துப் போய் விடுகிறது.

பார்த்திபனின் இரண்டாவது மனைவியாக வரும் பிரியங்கா ரூத், தன் குடும்பம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலையில் கணவனுக்கு அசலாகிறார். கணவனின் மகள் பாசம் புரிந்த ஒரு கட்டத்தில் ‘நீங்க ஒரு நல்ல கணவனோ இல்லையோ, நிச்சயம் நல்ல அப்பா’ என்று சொல்லும் இடத்தில் நடிப்பும் பார்த்திப முத்திரையும் ஒருசேர பரிமளிக்கிறது.

வசனம் பல இடங்களில் சாட்டையடி. ‘சிலர் செய்யற பாவம் கங்கைக்குப் போனா தீரும். சிலர் செய்ற பாவம் கங்கையோட போனாலும் தீராது’. ‘செருப்பால அடிப்பான்னு பார்த்தா சிரிப்பால அடிச்சா’ என பல இடங்களில் பார்த்திப ‘டச்.’

.படத்தின் பெரும்பலம் அதன் டெக்னிக்கல் டீம். அதில் தலையாயது ஆர்தர் வில்சனின் கேமரா. வெவ்வேறு இடங்களுக்குள் புகுந்து வெளியேறி, வெவ்வேறு உலகை அடுத்தடுத்து காட்டி, இப்படியெல்லாம் கூட எடுக்க முடியுமா என ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

படம் முழுக்க ஒருவரின் ஐம்பது வருட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் என்பதால், அத்தனைக்கும் நிறைய செட்கள் போட வேண்டும். ஆனால், படமே சிங்கிள் ஷாட் தான் என்பதால் அந்த செட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் போட வேண்டும். இந்த செட்களின் மூலமே, அந்தந்த கால கட்டங்களையும் காட்டியாக வேண்டும். இந்த இடத்தில் கலை இயக்குனர் விஜய் முருகனின் கொஞ்சமும் அசராத அசுர உழைப்பு தெரிகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘மாயவா’ பாட்டு முதல் வரியிலேயே நெஞ்சுக்குள் கூடு கட்டி விடுகிறது. ‘காயமா’ பாட்டு, இன்னொரு மயக்கும் இசைப்பிரவாகம். ‘பாவம் செய்யாதிரு மனமே’ பாடலோ நெஞ்சுக்குள் அடிக்கும் இசைப்புயல்.

எடுத்துக் கொண்ட கதையை சமரசமின்றி காட்சிப்படுத்தியிருக்கும் பார்த்திபன், கதையினூடே வந்து போகும் பச்சை வசனங்களை மியூட் பண்ணியிருக்கலாம். செத்துப் போன தாயின் பிணத்தின் மீது தவழ்ந்து பால் குடிக்க எத்தனிக்கும் அந்த குழந்தை தான் இன்றைய சமூகத்தின் மொத்த அவலத்தையும் காட்சி வழியே தோலுரிக்கிறது. அப்படியே உலக சினிமா வரிசையிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.

இரவின் நிழல்- வெளிச்சத்துக்கு வந்த இருட்டு மனிதனின் ஆவணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *