பாரின் சரக்கு பட விமர்சனம்

அறிமுக இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ஃபாரின் சரக்கு’. அறிமுக நடிகர்கள் கோபிநாத், சுந்தர், உசேன், சுரேந்தர் சுந்தரபாண்டியன், அஃப்ரினா, ஹரினி, இலக்கியா நடிப்பில் நெப்டியூன் செய்லர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் கோபிநாத் தயாரித்துள்ளார்.
கதை என்னவோ குட்டியூண்டு தான். ஆனால் திரையாக்கத்தில் அதை சொன்னவிதத்தில் ஜெயித்திருக்கிறார்கள். குஜராத்தில் மந்திரி ஒருவருக்கு முதல்-அமைச்சர் பதவி மீது ஒரு கண். அதற்காக சைலண்டாக காய் நகர்த்தி வரும்வேளையில், பெண் பித்தனான அவர் மகனால் இப்போது இருக்கும் பதவிக்கும் பிரச்சினை வந்து சேர்கிறது.. பெண்கள் விஷயத்தில் பலவீனமானஅந்த மந்திரி மகன் ஒருகட்டத்தில் குஜராத் ஐ.ஜி. பெண்ணையும் தனது காதல் வேட்டையில் பலியாக்கி விட…
இப்போது மகன் சிக்கினால் இருக்கும் பதவியையும் ராஜினாமா செய்தாக வேண்டும். அதோடு முதல்அமைச்சர் பதவி என்பது கனவாகவே போய் விடும். இன்னும் 10 நாட்கள் மகனை தலைமறைவாக வைத்திருந்தால் அதற்குள் தனது முதல்அமைச்சர் கனவு நிறைவேறி விடும் என்பதை உணர்ந்தவர், மகனை தலைமறைவாக வைக்க தமிழக மந்திரி ஒருவரை தொடர்பு கொள்கிறார். அவரும் சம்மதிக்க, தமிழகம் வரும் குஜராத் மந்திரியின் மகனை 10 நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு உசேன் தலைமையிலான ரவுடி கும்பலிடம் தமிழக மந்திரிஅண்ட் கோவால். ஒப்படைக்கப்படுகிறது.
அதே சமயம், குஜராத் அமைச்சரின் மகனை கண்டுபிடிப்பதில் சில குழுக்கள் ஈடுபடுகிறார்கள். இறுதியில் அவரை கண்டு பிடித்தார்களா? இல்லையா?, அவர்கள் யார்? குஜராத் அமைச்சரின் மகன் எதற்காக தமிழகத்தில் ரகசியமாக தங்க வைக்கப்படுகிறார்? கேள்விகளுக்கான பதில் கொஞ்சமும் ஊகிக்க முடியாத கிளைமாக்ஸ்.
படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கோபிநாத், சுந்தர் ஆகியோருக்கு முதல் படம் என்றாலும், தடுமாற்றமில்லாத நடிப்பில் தப்பி விடுகிறார்கள்.
வில்லன் மகாலிங்கமாக நடித்திருக்கும் உசேன், பார்வையிலேயே பயமுறுத்துகிறார்.
அஃப்ரினா, ஹரினி, இலக்கியா கதையின் நாயகிகளாக இயல்பாக நடித்திருப்பதோடு, ஆக்ஷன் காட்சிகளிலும் அதிரடி காட்டுகிறார்கள்.
பிரவீன் ராஜ் இசையில் பாடல்கள் ஓ.கே. பின்னணி இசை மட்டும் சில இடங்களில் படுத்துகிறது.
சிவநாத் ராஜனின் கேமரா இரவுக் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறது.
‘ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்பை வைத்து விட்டு படத்தில் ஒரு இடத்தில் கூட மது அருந்துவது அல்லது புகை பிடிப்பது போன்ற காட்சிகளை வைக்காமல், ஆச்சரியப்படுத்தியிருக்கிறார், இயக்கிய விக்னேஷ்வரன் கருப்புச்சாமி. கிளைமாக்ஸ் ட்விஸ்ட் கொஞ்சமும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.
