ராமநாதபுரம் மாவட்டத்தின் அடையாளமாக திகழும் பி.ஆர்.வி. குடும்பத்தின் கடைக்குட்டி வாரிசான அருண் விஜய் தான் இந்த யானை. இது பாச யானை. கோபம் வந்தால் ஆவேச யானை. இவர் தனது குடும்பம் மீதும் அண்ணன்கள் மீதும் அளவு கடந்த பாசத்துடன் இருந்தாலும், அவரது அண்ணன்கள் மட்டும் அவரை தனது தந்தையின் இரண்டாம் தாரத்து பிள்ளையாகவே பார்க்கிறார்கள்.

இந்நிலையில் சிறையில் இருந்து விடுதலையாகும் அருண் விஜய்யின் குடும்ப எதிரியான ராமச்சந்திர ராஜு, அருண் விஜய்யின் குடும்பத்தாரை கொலை செய்யத் துடிக்க, அவரிடம் இருந்து தனது அண்ணன்களை காப்பாற்றுவதில் அருண் விஜய் கவனம் செலுத்துகிறார்.
இதற்கிடையே கல்லூரியில் படிக்கும் பெரியண்ணனின் மகள் உடன் படிக்கும் காதலனுடன் ஓட்டம் பிடிக்க…இந்த காதல் விவகாரம் முன்பே தெரிந்தும் மறைத்து விட்டதாக குற்றம் சாட்டி அருண் விஜய்யை வீட்டை விட்டே துரத்துகிறார்கள், அண்ணன்கள். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வில்லன் ராமச்சந்திர ராஜு, அருண் விஜய்யின் அண்ணன்களை அழிக்க முடிவு செய்ய, அண்ணன்களை அருண் விஜய் காப்பாற்றினாரா?, பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா? ஓடிப்போன அண்ணன் மகள் என்னவானாள்? கேள்விகளுக்கு அதிரடி பிளஸ் விறுவிறு கிளைமாக்ஸ்.
பாசமுள்ள அந்த தம்பி கேரக்டரில் பிரகாசிக்கிறார், அருண்விஜய். தனது குடும்பத்திற்கு ஆபத்து என்று தெரிந்ததும் பதறுவதும், பகைவர்களை பந்தாடும் காட்சிகளில் ஆவேச யானையாக மாறி தூக்கிப் போட்டு மிதிப்பதுமாக ‘ஆக்–ஷன் மேளா’வே நடத்தியிருக்கிறார். காதல் காட்சிகளில் காட்டும் பவ்யமும், கன்னத்தில் அறைபட்ட காதலியிடம் நெகிழ்ந்து நெக்குருகி மன்னிப்பு கேட்பதுமாக இ்ன்னொரு நடிப்பு முத்திரையும் பதிக்கிறார். நெல் மண்டிக்குள் ஓ.ஏ.கே.சுந்தரின் ஆட்களை அடித்து துவைக்கும் இடத்தில் அந்த ஆவேச ஆக்–ஷனில் வெண்கலக் கடையில் புகுந்த யானை.
நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், காதலருக்கு பிரியாணி கொண்டுபோய் கொடுக்கும் இடத்தில் இருந்து அறை வாங்கிய கையோடு ‘ஐ லவ்யூ’ சொல்லும் இடம் வரை நடிப்பால் வசீகரிக்கிறார்.

அருண் விஜயின் அண்ணன்களாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், சஞ்சீவ் பொருத்தமான பாத்திரத்தேர்வு. தம்பியையே கொல்லச் சொல்லும் இடத்தில் அந்த உக்கிர சமுத்திரக்கனி பயமுறுத்துகிறார்.

’கே.ஜி.எப்’ புகழ் ராமச்சந்திர ராஜு வில்லனாக நடித்திருக்கிறார். கே.ஜி.எப்.போடு ஒப்பிட்டால் இந்த படத்தில் இவரது வில்ல நடிப்பு, யானைப்பசிக்கு சோளப்பொறி.
யோகி பாபு-இமான் அண்ணாச்சி சிரிக்க வைக்கிறார்கள்.
அருண் விஜய்யின் அப்பாவாக ராஜேஷ், அம்மாவாக ராதிகா, நாயகியின் தந்தையாக தலைவாசல் விஜய் கிடைக்கும் சிறு சிறு வாய்ப்புகளிலும் சிக்சர் அடிக்கிறார்கள்.
ஆக்‌ஷன் காட்சிகளை வித்தியாசமான முறையில் ஒளிப்பதிவாளர் கோபிநாத் படமாக்கி காட்சிகளை இதயத்துக்கு நெருக்கமாக்கியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அதிரடி பட கதையை எடுத்துக் கொண்டு பாசப்போராட்ட பின்னணியில் சொன்ன ஹரி, இம்முறையும் இயக்குனராக ஜெயித்திருக்கிறார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/07/3cff5ff9-7a26-4ccb-bd8b-36b4a373b979.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/07/3cff5ff9-7a26-4ccb-bd8b-36b4a373b979-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்ராமநாதபுரம் மாவட்டத்தின் அடையாளமாக திகழும் பி.ஆர்.வி. குடும்பத்தின் கடைக்குட்டி வாரிசான அருண் விஜய் தான் இந்த யானை. இது பாச யானை. கோபம் வந்தால் ஆவேச யானை. இவர் தனது குடும்பம் மீதும் அண்ணன்கள் மீதும் அளவு கடந்த பாசத்துடன் இருந்தாலும், அவரது அண்ணன்கள் மட்டும் அவரை தனது தந்தையின் இரண்டாம் தாரத்து பிள்ளையாகவே பார்க்கிறார்கள். இந்நிலையில் சிறையில் இருந்து விடுதலையாகும் அருண் விஜய்யின் குடும்ப எதிரியான ராமச்சந்திர...