சினிமா செய்திகள்திரை விமர்சனம்

ராக்கெட்ரி பட விமர்சனம்

தன் குடும்பத்தை விட, தனது தாய்நாடு தான் முக்கியம் என வாழ்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், தேசத்துரோக புகார் மூலம் பட்ட கஷ்டங்களும் சந்தித்த அவமானங்களும் உணர்ச்சி பொங்க திரைப்படுத்தப்பட்டுள்ள படமே ‘ராக்கெட்ரி.’

ஓர் ஆராய்ச்சி மாணவராக பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய அவரின் பயணத்தில், விகாஸ் என்ஜின் உருவாக்கம், விக்ரம் சாராபாய், அப்துல்கலாம் தொடங்கி நீல் ஆம்ஸ்ட்ராங்க் உடனான அவரின் நட்பு வரை பேசுகிறது, படம்.

நம்பி நாராயணனை அச்சு அசலாக அப்படியே திரைக்கு கடத்தி வந்திருக்கிறார் மாதவன். இளமைப் பருவத்தில் பழைய மாதவன் தெரிந்தாலும், நடுத்தர வயது, வயதான கெட்டப் போன்றவற்றில் நம்பி நாராயணனே தெரிகிறார். தேசத்துரோக முத்திரை தன் மீது விழுந்த நிலையில், நோயுற்ற மனைவியை மருத்துவமனைக்கு கூட அழைத்து செல்ல முடியாத அந்த மழை நேர சோகம், மாதவனை நம்பி நாராயணனாகவே மாற்றிக் காட்டியிருக்கிற திரை ஆச்சரியம்.

நம்பி நாராயணனின் மனைவியாக வரும் சிம்ரனுக்கு, ஜெயிலில் இருந்து ஜாமீனில் வீடு வந்த கணவரை பார்த்து கத்தி கூச்சல் போடும் அந்த ஒரு இடம் போதும். காவல்துறை அந்த குடும்பத்துக்கு செய்த டார்ச்சரை நடிப்பால் கடத்திய அந்த காட்சி இயக்குனர் மாதவனையும் அற்புத இயக்குனராக அடையாளம் காட்டி விடுகிறது.

நடிகர் சூர்யாவாகவே வரும் சூர்யா அந்த கௌரவ வேடத்திலும் தன்னை பதிவு செய்து விடுகிறார். நம்பி நாராயணனிடம் ஒட்டுமொத்த இந்தியர்கள் சார்பாக மன்னிப்பு கேட்கும்போது நெகிழச் செய்கிறார்.

உடன் பணிபுரியும் விஞ்ஞானிகள் கூட்டத்தில் உன்னியாக வரும் சாம் மோகன் பாத்திரம் சிறப்பு. அந்த கேரக்டர் தண்டனைக் கால நம்பி நாராயணனை சந்திக்க வரும் இடம், மகிழ்வும் நெகிழ்வுமானது.

ஒரு ராக்கெட் ஏவுவது என்ற நிகழ்வுக்குப் பின்னால் எத்தனை கடின உழைப்பு கொட்டிக் கிடக்கிறது…அந்தத் துறையை ஆக்கிரமித்திருக்கும் வல்லரசு நாடுகளுடன் இந்தியா எப்படியெல்லாம் போராடி இந்த இடத்திற்கு வந்தது என்பதை நம்பியின் கடின உழைப்பு பின்னணியில் சொல்லும் இடங்கள் இயக்குனர் மாதவனுக்கு மகுடம் சூட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *