விஷமக்காரன் பட விமர்சனம்
மனநல மருத்துவர் அக்னி, மனக்கசப்பு ஏற்பட்டு பிரியும் நிலையில் உள்ள தம்பதிகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களை இணைத்து வைக்கிறார். இந்நிலையில் தன் தோழிக்கும் அவள் கணவருக்குமான கருத்து வேறுபாட்டை சரி செய்வது தொடர்பாக அக்னியை சந்திக்கிறாள் இளம்பெண் அனிதா. அந்த சந்திப்பு தோழியின் வாழ்க்கையை மேம்படுத்த, இப்போது அக்னி மீது அனிதாவுக்கு மரியாதை கலந்த ஈர்ப்பு. அடுத்தடுத்த சந்திப்பில் இதுவே இருவரிடமும் காதல் தீயை பற்ற வைத்து விட, உடனே திருமணம்.
இப்போது தன்னை விட்டு பிரிந்து போன முன்னாள் காதலி சைத்ரா பற்றி மனம் திறக்கிறார் அக்னி. அதை இயல்பாக ஏற்றுக் கொள்கிறாள் அனிதா. எதிர்பாராத திருப்பமாய் மறுபடியும் அக்னி வாழ்வில் சைத்ரா குறுக்கிட, அதனால் தன் வாழ்வு கேள்விக்குறியாகி விடுமோ என பயப்படும் அனிதா, இருவரையும் ரகசிய கேமரா மூலம் கண்காணிக்கிறாள். அதேநேரம் முன்னாள் காதலர்களை சந்தேகப்படவில்லை என்பதாக கணவனை நம்ப வைக்கிறாள். இந்நிலையில் தான் அனிதாவே எதிர்பாராத அந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெறுகிறது. அது அவள் வாழ்க்கையை புரட்டிப் போட்டதா என்பது விறுவிறு கிளைமாக்ஸ்.
மனநல ஆலாசகர் அக்னி வேடத்துக்கு பொருத்தமாக இருக்கிறார்,வி. அனிதா, சைத்ரா என இரண்டு பேருடனான காதலிலும் அவர்களை அந்த சிரிக்கும் கண்களாலேயே கவிழ்ப்பது தனி அழகு. நாயகிகள் அனிதா, சைத்ரா இருவருமே கதைக்கேற்ற அழகுத் தேர்வுகள். கணவனை சந்தேகிக்கும் இடத்தில் அனிதாவும், பிரிந்த பிறகு காதலனை இன்னொருத்தியின் கணவனாக சந்திக்கும் இடத்தில் சைத்ராவும் நடிப்பில் தௌசண்ட் வாலா பட்டாசாய் வெடிக்கிறார்கள்.
முதல் பாதிப் படத்தில் காதல் காட்சிகள் சுவாரசியம் கூட்ட, மறுபாதியில் அதுவே சந்தேகப் பின்னணியில் விறுவிறுப்பைக் கூட்ட V என்பதற்கு விக்டரி என்ற அர்த்தத்தை தனதாக்கிக் கொள்கிறார், இயக்குனர். எதிர்பாராத அந்த கிளைமாக்ஸ் காட்சியும் இயக்குனர் ‘வி’க்கு சபாஷ் போட வைக்கிறது. குறைந்த பட்ச கேரக்டர்களை கொண்டு நிறைவான படம் தந்த வகையிலும் தமிழ் சினிமாவின் நல்வரவாகி இருக்கிறார், வி.
விஷமக்காரன், விஷயக்காரன்.