சேத்துமான் பட விமர்சனம்
பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’ சிறுகதை தான் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ‘சேத்துமான்’ ஆகியிருக்கிறது. பல்வேறு திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்று, இன்று சோனி லைவ் ஓடிடி தளத்தில் இதோ சேத்துமான்.
நாமக்கல் அருகே உள்ள கிராமத்தில் ஊருக்கு வெளியே தனது பேரன் குமரேசனுடன் வாழ்ந்து வருகிறார் தாத்தா பூச்சியப்பன். மாட்டுக்கறியை சாப்பிட்டதால் ஆதிக்க சாதிவெறியர்களால் தாய், தந்தை கொல்லப்பட…இப்போது குமரேசனுக்கு தாத்தா தான் எல்லாமுமே. எப்படியாவது பேரனை படிக்க வைத்து வாழ்க்கையில் உயர்நிலையை எட்ட வைக்கவேண்டும் என்பது தாத்தாவின் கனவு. அதற்காக கூடை பின்னி சந்தையில் விற்று பணம் சம்பாதிக்கும் அவர், அந்த ஊர் பண்ணையார் வெள்ளையனுக்கு உதவியாகவும் இருந்து வருகிறார்.
வெள்ளையனும் அவரது குழுவும் இணைந்து சேத்துமான் கறி (பன்றிக்கறி) சாப்பிட ஆசைப்பட… அதை சமைத்துக் கொடுக்கும் பொறுப்பு தாத்தாவை வந்து சேர, தாத்தாவுடன் பேரனும் போகிறான். கறி தயாரான நேரத்தில் கறிக்காக பங்காளிகள் அடித்துக் கொள்ள…அடுத்து நடப்பது எதிர்பாராத விபரீதம். இந்த அடிதடியில் தாத்தா-பேரன் என்னவானார்கள் என்பது நெஞ்சை நெகிழ்த்தும் கிளைமாக்ஸ்.
படத்தில் அத்தனைபேரும் அறிமுகங்கள். ஆனால் யாரும் நடித்ததாகவே தெரியவில்லை. கேரக்டர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். தாத்தா மாணிக்கம், பேரன் அஸ்வின் தொடங்கி, பண்ணாடியாக வரும் பிரசன்னா, எதிர் பங்காளியாக வரும் சுருளி, பிரசன்னாவின் மனைவியாக வரும் சாவித்ரி, பன்றிப்பண்ணை முதலாளி குமார், பள்ளி ஆசிரியர் வரை பங்கேற்ற அத்தனை பேரும் கொண்டாடத்தக்கவர்கள்.
பிந்து மாலினியின் இசையும், ப்ரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவும் இந்த சேத்துமானை நெஞ்சோடு நெருக்கமாக்குகின்றன. இயக்கிய தமிழ் அறிமுகம் என்பதை நம்ப முடியவில்லை. காட்சிகளில் அத்தனை வீரியம்.
டீக்கடையில் க்ளாஸில் கொடுக்காமல் ‘கப்’பில் டீ கொடுக்கும்போது, பூச்சியப்பனுடன் வரும் ரங்கா, நியாயமான கோபத்துடன் ’கப்புல கொடு’ என்கிறார். அப்போது, பூச்சியப்பன் பேசும் ‘அவங்க குடிச்ச க்ளாஸ்ல நான் எப்படிக் குடிக்கிறதுன்னு யோசிக்கிறேன்’ என்பார். படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தால் அந்தக் காட்சிக்கு அரங்கங்கள் கைத்தட்டல்களால் அதிர்ந்து போயிருக்கும்.
”விட்டா நீயெல்லாம் வந்து எப்படி பாடம் நடத்தணும்னு சொல்வ போலிருக்கு” என்று சொல்லும் ஆசிரியரிடம், ’கடவுள்கிட்ட வரம் கேக்குற மாதிரி கேட்டேன்’ என்று பூச்சியப்பன் கைகூப்பி சொல்லும்போது, ”என்ன கடவுள் அது இதுன்னு சொல்லிக்கிட்டு… அவருக்கே பகுதி நேர ஆசிரியர். வேலை நிரந்தமா”ன்னு தெரியல’’ என்று கெத்தாக பேசுவதாக இருக்கட்டும், பன்றி கேட்க வரும் பண்ணையாரிடம் நெஞ்சை நிமிர்த்தி பேசும் கெத்தாக இருக்கட்டும், ரங்கா கேரக்டர் தான் படம் சொல்ல வரும் செய்திக்கெல்லாம் அடிநாதம்.
மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த அருகாமைப் பள்ளிகளை மூடிவிட்டு ஒருங்கிணைந்த பள்ளிகளைக் கொண்டுவரும் மத்திய அரசின் திட்டத்தையும் விமர்சித்திருக்கிறது திரைக்கதை. பள்ளிகளை மூடி தூரத்தில் கொண்டுபோனால் பூச்சியப்பனைப் போன்றவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியும் நெஞ்சில் அறைந்து போகிறது.