மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்தை தமிழில் ‘கூகுள் குட்டப்பா’வாக்கி இருக்கிறார்கள்.

ஜெர்மனியில் ரோபோ தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேரும் தர்ஷன். ஊரில் தனியாக இருக்கும் தனது அப்பா கே.எஸ்.ரவிக்குமாரை பார்த்துக்கொள்ள தனது நிறுவனம் தயாரித்த ரோபோவை கொடுக்கிறார். ஆரம்பத்தில் அந்த ரோபோவை ஒதுக்கி வைக்கும் ரவிக்குமார் அதன் நடவடிக்கைகளால் போகப்போக அதன்மீது பிரியமாகிறார். ஒரு கட்டத்தில் குட்டப்பா என்று பெயர் சூட்டி தனது இன்னொரு மகனாகவே அதை கொண்டாடுகிறார்.

இதேநேரம், இத்தகைய ரோபோக்களில், அதனை பயன்படுத்தும் உரிமையாளர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் தொழில் நுட்ப கோளாறு ஒன்று இருப்பது மகனுக்கு தெரிய வர, அந்த ரோபோவிடம் இருந்து தனது அப்பாவை காப்பாற்ற ஊருக்கு வருகிறான். அப்பாவோ ‘குட்டப்பா இல்லாமல் நானில்லை’ என்று அடம் பிடிக்க…

முடிவு? பரபர கிளைமாக்ஸ்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கதையின் நாயகனாக நடிப்பில் பல இடங்களில் ஆச்சரியப்படுத்துகிறார். ரோபோவுக்கும் அவருக்குமான அன்யோன்யம் கதையின் பலம் வாய்ந்த இடங்கள். அவரது மகனாக வரும் தர்ஷன் அப்பாவுடனான கிளைமாக்ஸ் உரையாடலில் நடிப்பில் கவனிக்க வைக்கிறார். தர்ஷனின் ஜோடியாக லாஸ்லயாவுக்கு கதையில் பெரிதான இடம் இல்லையெனினும் வந்த வரை நிறைவு.

குட்டப்பாவாக வரும் ரோபோ படத்தில் பிரதான இடம் பிடிக்கிறது. மனதிலும்.

காமெடிக்கு யோகிபாபு, பூவையார், ராகுல், பிளாக் பாண்டி கூட்டணி போட்டு சிரிக்க வைக்கும் பணியை செவ்வனே செய்கிறார்கள். ஜிப்ரானின் இசையும், ஆர்வியின் ஒளிப்பதிவும் இயக்கிய சபரி-சரவணன் உபயத்தில் குட்டப்பாவை நெஞ்சுக்கு நெருக்கமாக்கி விடுகிறது.

பிள்ளைகளின் அரவணைப்புக்காக ஏங்கும் வயதான பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பாசப்பின்னணியில் சொல்லும் படம், அப்படியே தொழில் நுட்ப வளர்ச்சியை குறை சொல்பவர்களின் தலையில் நறுக்கென குட்டும் வைத்ததில் ‘டூ இன் ஒன்’ சந்தோஷம் தருகிறான், இந்த குட்டப்பா.