பயணிகள் கவனிக்கவும் பட விமர்சனம்
உண்மைத்தன்மையை தெரிந்து கொள்ளாமல் செல்போனில் படம் பிடித்து பெயர் வாங்க நினைக்கும் இளைஞனால் ஒரு குடும்பம் எப்படி பாதிப்புக்குள்ளாகிறது என்பதை நெஞ்சம் நெகிழ சொல்லியிருக்கும் படம். கமெண்டுகளும் மீம்ஸ்களும் அந்த குடும்பத்தை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை காட்சிப்படுத்தியிருக்கும் விதத்திலேயே சிறப்புக் கவனம் பெறுகிறார், இயக்குனர்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகளுக்கு துணையாக இரண்டு நாட்கள் அங்கேயே தூங்காமல் கொள்ளாமல் இருக்கும் அப்பா விதார்த், ரெயிலில் வீடு வரும்போது அசந்து தூங்கி விடுகிறார். அதை தனது செல்போனில் படம் பிடிக்கும் ‘துபாய் ரிட்டர்ன்’ கருணாகரன், விதார்த்தை ரெயிலில் தன்னிலை மறந்து தூங்கும் குடிகாரனாக சித்தரித்து ஊரெங்கும் உலவ விட…
இதனால் மாற்றுத்திறனாளியான விதாரத்தின் வேலை போகிறது. கால் பந்தில் சாதிக்கத் துடிக்கும் மகனின் எதிர்காலம் ்வீணாகிறது. குடும்பத்தில் நிம்மதியிழப்பு நிரந்தரமாகிறது. பொது இடங்களில் மற்றவர்களின் கேலிப்பார்வையை சகிக்க முடியாத விதார்த், ஒரு கட்டத்தில் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை காவல் நிலையத்தில் புகாராகத் தர…
இதற்குள் துபாயில் இருந்து ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்த கருணாகரனுக்கு இங்கே காதலியுடன் திருமணம் நடந்து முடிகிறது. இந்நிலையில், தன் மீதான போலீஸ் புகார் விஷயம் தெரிய வர, தண்டனைக்கு பயந்து திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் துபாய் பயணத்துக்கு தயாராகிறார். ஆனால் விமான நிலையத்தில் அவரை கைது செய்கிறது காவல்துறை. முடிவு, முற்றிலும் எதிர்பாராத கிளைமாக்ஸ்.
நடுத்தர வர்க்ககுடும்பத் தலைவனாக நடிகர் விதார்த். ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் அதற்குரிய சிறப்பு நடிப்பை வழங்குபவர், இந்த படத்திலும் காது கேளாத வாய் பேச இயலாத அந்தப் பாத்திரத்தை அற்புதமான தனது நடிப்பில் வார்த்்தெடுத்து இருக்கிறார். தன் குடும்பத்தின் நிம்மதியை குலைத்தவனை சந்திக்கும் அந்த கிளைமாக்சில் நடிப்பில் டிஸ்டிங்ஷன் வாங்கி விடுகிறார். விருது நிச்சயம்.
விதார்த்தின் மனைவியாக வரும் லட்சுமி பிரியா இன்னொரு நடிப்புப் பொக்கிஷம். ‘பேசாமல் பேசும்’ தன் இயல்பான நடிப்பினால் ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக மனம் உடைந்து கண்ணீர் விடும் கணவனைத் தேற்றும் இடத்தில் அடுத்த விருதாளர் ரெடி.
விதார்த்தின் குழந்தைகளாக நடித்திருக்கும் இருவரும் அற்புதமான தேர்வு. ஆரம்பத்தில் அப்பாவைத் தவறாக புரிந்து கொள்ளும் மகன், பின்னர் உண்மை தெரிந்ததும் கதறும் இடத்தில் தனது கேரக்டர் தேர்வை நியாயமாக்குகிறார். விதார்த்தின் அப்பா கேரக்டரில் ‘கவிதாலயா’ கிருஷ்ணன் இன்னொரு நடிப்புக் கவிதை.
விதார்த்துக்கு நிகராக இன்னொரு நாயகனாக வருகிறார் கருணாகரன். தன் சிறு வயது தோழியை பெண் கேட்டு அவள் அப்பாவை சந்திக்கும் இடம் கலகலப்பின் உச்சம். தனது செல்போன் படம் ஏற்படுத்திய விபரீதம் குறித்த உண்மை தெரிந்ததில் இருந்து குற்ற உணர்ச்சியின் தவிப்பை வெளிப்படுத்தும் இடங்களில் அத்தனை அழகு அந்த நடிப்பு.
அவரது காதல் மனைவியாக வரும் மாசம் சங்கர் முதலிரவில் கூட தன்னை தீண்டாமல் தனித்திருக்கும் கணவனை எண்ணி மனதுக்குள் தவிக்கும் இடத்தில் நடிப்பின் எல்லையை தொட்டு விடுகிறார்.
கருணாகரனின் மாமா மூணாறு ரமேஷ், விதார்த்தின் நண்பர் ராம்ஸ், கருணாகரனின் அம்மா என அத்தனை கேரக்டர்களும் இயல்பான நடிப்பில் பளபளக்கிறார்கள்.
வித்தியாசமான தண்டனை கொடுக்கும் இன்ஸ்பெக்டர் பிரேம், பிரேமுக்கு பிரேம் ரசிக்க வைக்கிற இன்னொரு நட்சத்திரம்.
தெளிவான திரைக்கதை மூலம் இன்றைய சமூகத்திற்கு ஒரு செய்தியையும் சொல்லியிருக்கும் இயக்குனர் எஸ்.பி.சக்திவேலை கொண்டாடலாம்.
பாடல்களும் பின்னணி இசையும் கேமராவோடு இணைந்த அழகியல் அம்சங்கள்.
பயணிகள் கவனிக்கவும், ரசிகர்கள் ரசிக்கவும்… –