சினிமா செய்திகள்திரை விமர்சனம்

கிளாப் பட விமர்சனம்

ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வெல்லும் லட்சியத்தோடு பயணிக்கும் நாயகன் எதிர்பாராத விபத்து ஒன்றில் ஒரு காலை இழக்கிறான். எதிர்காலம் கனவாய்ப் போன நிலையிலும், திறமையை மட்டுமே வைத்துக்கொண்டு போராடும் ஒரு தடகள வீராங்கனைக்கு பயிற்சி கொடுத்து களத்தில் இறக்குகிறார். நாயகனின் இந்த முயற்சிக்கு விளையாட்டுத் துறையில் இருக்கும் அரசியல் தடை எற்படுத்த முயல, அதைத் தாண்டி அந்த பெண்ணை சாதிக்க வைத்தானா என்பது பரபர விறுவிறு திரைக்கதை.

தடகள வீரர் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப கச்சிதமான உடற்கட்டோடு ஆதி. ஒரு காலை இழந்து மாற்றுத்திறனாளியாக வாழும் காட்சிகளில் அந்த வலியை நடிப்பால் நமக்குள்ளும் கடத்தி விடுகிறார்.

ஆதியின் மனைவியாக நடித்திருக்கும் ஆகான்ஷா சிங், கிளைமாக்ஸ் காட்சியின் போது, கணவர் தன் பெயரை சொல்லி அழைத்தவுடன் வெளிப்படுத்தும் எக்ஸ்பிரஷன்கள் நடிப்பின் உச்சம்.

தடகள வீராங்கனையாக க்ரிஷா குருப், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு.

ஒரு சில காட்சிகளே வந்தாலும் ஆதியன் அப்பா பிரகாஷ்ராஜ் ‘சூப்பரப்பா.’ தடகள சம்மேளனத்தின் தலைவராக வரும் நாசர், அந்த கேரக்டராகவே மாறி அதிரடிக்கிறார்.

முனிஷ்காந்த், மைம் கோபி, பிரம்மாஜி, ஐ.பி.கார்த்திகேயன் பொருத்தமான பாத்திரத் தேர்வில் பளபளக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரவின் குமாரின் கேமரா தடகள அரங்கில் சீறிப்பாய்ந்து பிரமிப்பு தருகிறது.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் ரசனை. பின்னணி இசை ரகளை.
விளையாட்டை மையப்படுத்திய கதையை திருப்புமுனை காட்சிகளோடு சுவாரஸ்யமாக கொண்டு சென்ற இயக்குநர் பிரித்திவி ஆதித்யா, உறவுகளின் உணர்வையும் ஆழமாக பதிவு செய்த விதத்தில் தமிழ்சினிமாவின் இனிய நம்பிக்கை வரவாகி இருக்கிறார். அதற்காகவே சந்தோஷமா ‘கிளாப்’ தட்டுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *