எதற்கும் துணிந்தவன் பட விமர்சனம்
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களைத் தடுக்க ஒரு வழக்கறிஞர் எந்த எல்லை வரை செல்கிறார் என்பதே இந்த ‘எதற்கும் துணிந்தவன்.’
உறவினர்களாக பெண் கொடுத்து, பெண் எடுத்து வாழ்ந்து வரும் வடநாடு, தென்னாடு என இரண்டு ஊரிலும் இளம்பெண்களின் தற்கொலையும் கொலையும் அதிர்வை எற்படுத்த…அதன் பின்னணி குறித்து கண்டறியும் நாயகன் சூர்யா, அந்த குற்றங்களை செய்தவர்களை அதிரடியாய் களையெடுப்பது தான் படத்தின் கதை. இந்த போராட்டத்தில் சூர்யா குடும்பத்துக்கும் வில்லன் அவமானம் தேடித் தர, அதில் இருந்து தனது குடும்பத்தை மீட்டெடுக்கும் நாயகன் நம் நெஞ்சுக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கிறான்.
வழக்கறிஞர் கண்ணபிரானாக சூர்யா. கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு பெரிய திரையில் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். காதல் காட்சிகளில் மெல்லிய ராகம். ஆவேச காட்சிகளில் ருத்ரதாண்டவம் இரண்டிலும் டிஸ்டிங்ஷன் வாங்குகிறார். காதலி ஊருக்கும் தனது ஊருக்கும் ஆகாத சூழலில் பலத்த பாதுகாப்பையும் மீறி கோவில் திருவிழாவில் காதலிக்கு அவர் தாலி கட்டுவது தனி அழகு.
பெண்களுக்கான காவல்துறையின் ‘காவலன் செயலி’யை பற்றி சூர்யா எடுத்து கூறும் காட்சி, தன் குடும்பம் பாதிக்கப்பட்ட பின் மனைவிக்கு சூர்யா தைரியம் கூறும் காட்சியி என படம் நெடுக நடிப்பில் மனம் நிறைந்து நிற்கிறார், சூர்யா. கிளைமாக்சில் ‘புள்ள பெக்குறவன்லாம் அப்பா இல்ல, புள்ளைய சரியா வளக்கிறவன் தான் அப்பா’ என்று வசனச் சாட்டையை சுழற்றும் இடத்தில் சூர்யா, ‘நடிப்புச் சுடர்யா.’
நாயகியாக பிரியங்கா மோகன். இவர் சூர்யாவுடன் காதலாகிற அந்த ஸ்கூட்டர் தொடர்பான முதல் காட்சியே காதல் ரசனையின் அடையாளம். கல்யாண விஷயத்தில் அப்பாவுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு அப்பாவியாய் காட்சி தரும் இடத்தில் நடிப்பிலும் பொண்ணு ‘சூப்பர்’பா. இதே பிரியங்கா தனக்கு நேர்ந்த அவமானத்தை வீடியோவில் பேசும் இடத்தில் நம் கண்களின் ஒரம், ஈரம்.
சூர்யாவின் பெற்றோராக சத்யராஜ்-சரண்யா, பிரியங்காவின் பெற்றோராக இளவரசு-தேவதர்ஷினி பல இடங்களில் சிரிக்க வும் ரசிக்கவும் வைக்கிறார்கள். பிரியங்காவை சூர்யாவுக்கு பெண் கேட்க வரும் இடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் தன் இருப்பை நிரூபிக்கிறார். சூரி, புகழ், தங்கதுரை சிரிப்ஸ் கூட்டணி.
வில்லனாக வரும் வினய். சூர்யாவுடன் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தில் கவர்கிறார்.
இமானின் இசையில் ‘சும்மா சுர்ருங்குது’ பாட்டுல காது மடல் ஜிவ்வுங்குது. ரத்னவேலுவின் கேமரா கோவில் திருவிழா தொடர்பான காட்சிகளில் நம்மையும் அந்த கிராமத்துக்குள் கொண்டு போய் விடுகிறது.
சமூக அக்கறையுடன் கூடிய ஒரு விழிப்புணர்வுக் கதையை அதிரடி மசாலா கலந்து திரைப்படுத்திய பாண்டிராஜூக்கு ஹாட்ஸ் ஆப். குறிப்பாக பெற்றோருக்கு பாடம் நடத்தும் அந்த கிளைமாக்சுக்கு கங்கிராட்ஸ்.