மாறன் பட விமர்சனம்

அநீதியை அடையாளம் காட்டிய நேர்மையான பத்திரிகையாளர் கொல்லப்பட… அவரது மகன் மாறன் அதே துறையில் அப்பாவை போலவே நேர்மையாய் செயல்பட…
எதிர்ப்பும் கொலை மிரட்டலும் தொடர்கிறது. இந்நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ஒருவரின் அரசியல் ரீதியான தகிடுதத்தத்தை மாறன் அம்பலப்படுத்த, மாறனின் உயிரான தங்கை காணாமல் போகிறாள். அவள் கடத்தி வைத்த இடத்தை தேடிக் கண்டு பிடித்தபோது அவள் எரியும் நெருப்பில் கருகிப்போன நிலையில்.
மனம் உடைந்து போகும் மாறன் தனது சக பத்திரிகை தோழியுடன் எதிரிககளை கண்டுபிடித்து களையெடுத்தானா என்பது கிளைமாக்ஸ்.
துடிப்பான பத்திரிகையாளர் மாறனாக தனுஷ். உண்மையாக செய்தியை கொடுத்ததற்காக எதிரிகளுடன் மோதுவதிலேயே வெகுநேரம் போய் விடுகிறது. தங்கையுடனான அவரது பாசம் அத்தனை அன்யோன்யம்.
நாயகனின் சக ஊழியராக மாளவிகா மோகனன். தனுஷின் இக்கட்டான சூழலில் உடனிருக்கையில் நல்ல தோழியாக நல்ல காதலியாக மனதில் பதிகிறார். படத்தின் ஜீவனான அந்த தங்கை கேரக்டரில் ஸ்மிருதி வெங்கட் அசரடிக்கிறார். தாய் மாமா நரேன், போலீஸ் மகேந்திரன்
முன்னாள் மத்திய மந்திரி கேரக்டரில் சமுத்திரக்கனி மீண்டும் வில்லமுகம் காட்டுகிறார். தனுஷை அழைத்து மிரட்டும் இடத்தில் அந்த தெனாவட்டும் அதிகாரத் திமிரும் வேற லெவல்.
எதிர்பாரா திருப்பமாக வந்து தனுஷூடன் மோதும் அமீர் படத்தின் திருப்புமுனைக்கு உதவுகிறார். கிளைமாக்ஸ் முடிச்சு இவரால் அவிழ்க்கப்படும் இடத்தில் இயக்குனர் கார்த்திக் நரேன் ‘உள்ளேன் அய்யா’ சொல்கிறார். தங்கை விஷயத்தில் வைத்த திருப்பம் கிளைமாக்சை புன்னகையுடன் எதிர்கொள்ள வைக்கிறது.
‘‘நீங்க பாட்டுக்கு ஊழலை அம்பலப்படுத்துறேன்னு எதையாவது செய்வீங்க. அதனால நாங்க பாதிக்கப்படுறதா?” என்ற கேள்வியை, மிக நியாயமான கேள்வியைக் கேட்பது போல் கேட்கிறார், அமீர். அப்போது தனுஷைப் போலவே நமக்கும் திகைப்பு ஏற்படுகிறது. (என்ன டைரக்டர் சார்…இது எந்த ஊர் நியாயம்?) படத்தை நகர்த்துவதில் பெரும்பங்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷூக்கு.
ஓடிடியில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் இந்த மாறனை காணலாம்.
