சில நேரங்களில் சில மனிதர்கள் பட விமர்சனம்

நான்கு தனித்தனி கதைகளை ஒருசேர இணைத்து ஒரே புள்ளியில் இணைத்திருப்பதே ‘சில நேரங்களில் சில மனிதர்கள்.’
*நாசரின் ஒரே மகன் அசோக் செல்வன், ஒரு தனியார் மொபைல் கடையில் பணிபுரிந்து வருகிறார். பிடிவாதம் இவர் கூடவே பிறந்தது. தனது அப்பாவே, தன்னுடைய பேச்சைத் தான் கேட்க வேண்டும் என்பவர். எதற்கெடுத்தாலும் டென்ஷன்…முன் கோபம்…. இன்னும் ஒரு மாதத்தில் தனது காதலி ரியாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.
*பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். இவரது ஒரே மகன் அபிஹாசன். தனது தந்தையின் எந்தவித சிபாரிசும் இல்லாமல், சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். எப்போதும் பணக்காரத் திமிரோடு ‘தான்’ என்ற அகந்தையோடு இருப்பவர். தந்தையிடம் கூட எடுத்தெறிந்து பேசுவது தான் இவரது இயல்பு.
*பல வருடங்களாக தனியார் ஹோட்டல் ஒன்றில் ஹவுஸ் கீப்பிங் சூப்பர்வைசராக இருப்பவர் மணிகண்டன். தன்னிடம் வேலை கற்றுக்கொண்டவர்கள் எல்லோரும் மேனேஜர் ஆகி விட, நாம் மட்டும் இன்னமும் சூப்பர்வைசராகவே இருக்கிறோமே என்கிற மனக்குமுறல் இவருக்கு. எதனால் தனக்கு இந்த வாய்ப்பு நிராகரிக்கப்படுகிறது என்ற யோசனையிலேயே வாழ்ந்து வருபவர்.
*பிரவீன் ராஜா-ரித்விகா இளம் தம்பதிகள். பிரவீன் ராஜாவிற்கு ஆடம்பர வாழ்க்கை மீது மோகம். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொண்டு மற்றவர்களின் முன் அவற்றின் பெருமையை பேசிக் கொண்டிருப்பவர். அவர் மனைவியோ அப்படியெல்லாம் தன்னால் வாழ முடியாது என்ற அடம் பிடிப்பவர்.
-இந்த 4 கதைகளுக்குள் இருக்கும் கதாபாத்திரங்களின் தலையெழுத்தை ஒரு விபத்து மாற்றுகிறது. அது எப்படி நடந்தது? அதற்குப் பிறகு அவர்களின் வாழ்வில் நடக்கும் அதிசய மாற்றங்கள் என்னென்ன என்பது மன உணர்வுகளை தொட்டுச் செல்லும் திரைக்கதை.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அழுத்தமான உணர்பூர்வமான திரைக்கதை, தொடக்கம் முதலே நம் நெஞ்சுக்கு நெருக்கமாகி விடுகிறது. சினிமாவுக்கான எந்த அலங்காரமும் இல்லாமல் அத்தனை நேர்த்தியாக வாழ்க்கைக்குள் புகுந்து நம்மை கட்டிப் போட்டு விடுகிறார்கள்.
எப்போதும் எரிந்து விழும் இளைஞன் கேரக்டரில் அசோக்செல்வன் அசத்தல். மணிகண்டன் பொறுப்பில்லா ஏழை இளைஞன் பாத்திரத்தில் சதமடிக்கிறார். தெருவில் கட்டிப்புரளும் இடத்திலும், குற்றவுணர்வில் தவிக்கும் இடத்திலும் தமிழ் சினிமாவின் வருங்கால பொக்கிஷம் என்பதை நடிப்பால் கோடு காட்டுகிறார்.
இவருக்குள் இத்தனை திறமையா என ஆச்சரியப்பட வைக்கிறார், அபிஹசன். தனது முதல் பட அறிமுக விழாவில் தலைக் கனத்துடன் இவர் பேசும் காட்சி அண்மையில் படவிழா ஒன்றில் அறிமுக நாயகன் பேசியதை நினைவூட்ட, சில்லரையாய் சிரிப்ஸ் அரங்கை கலகலப்பாக்குகிறது.
கே எஸ் ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா, அனுபமா குமார் உள்ளிட்ட அனுபவ நடிகர்களும் கதையோட்டத்தின் பக்கத்தூண்களாகி இருக்கிறார்கள். .
நாசர் நடிப்புக்கல்லூரியாகி ரசிகன் வரை பாடமெடுக்கிறார். இக்கால ஆடம்பர மோக இளைஞனை இம்மி மாறாமல் பிரதிபலித்திருக்கிறார், பிரவீன். ரித்விகாவிடம் அவர் சரண்டராகும் இடத்தில் காட்சியும் நடிப்பும் அழகோ அழகு..
படத்தின் ஆகப் பெரும்பலம் பட்டை தீட்டப்பட்ட கூரான வசனங்கள். ‘குத்தமே செய்யாம அதுக்கான பழிய வாங்குறவனுக்குத் தான் அதோட வலி தெரியும்,. ஒருத்தன் எல்லாருக்கும் நல்லவனா இருக்கவே முடியாது, நீ தப்பு செய்யலன்னா அத எல்லாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்ல..’ இப்படி படத்தின் ஒவ்வொரு வசனத்திலும் அதிரடிக்கிறார் மணிகண்டன்.
ரதனின் இசையும் மெய்யேந்திரனின் ஒளிப்பதிவும் படத்தின் இன்னபிற பலங்கள். விஷால் வெங்கட்டுக்கு இது அறிமுக படம் என்பதை நம்ப முடியவில்லை. கதை மாந்தர்களின் மனமாற்றம் மூலம் படம் பார்க்கும் ரசிகனையே சுய பரிசோதனை செய்ய வைத்து விடுகிற இயக்கத்தில் ஜெயித்திருக்கிறார். படத்தின் வெற்றியும் அது தான்.
