சினிமா செய்திகள்

விக்ரம்-துருவ் விக்ரம் நடிப்பில் உருவான ஆக்–ஷன் அதிரடி படம் ‘மகான்’ அடுத்த மாதம் 10-ந்தேதி அமேசான் தளத்தில் வெளியாகிறது

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘மகான்’ படத்தில் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். இன்னொரு நாயகனாக விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடித்துள்ளார். பாபி சிம்ஹா, சிம்ரன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிப்ரவரி-10 முதல் Prime உறுப்பினர்கள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தைக் காணலாம்.
ஒரு சாதாரண மனிதனின் முழுமையான வாழ்க்கையையும், அவர் தன்னைச் சுற்றியுள்ள மக்களையும் மாற்றியமைக்கும் தொடர் நிகழ்வுகளையும் கதைக்களமாக்கியிருக்கும் இந்த படத்தில் பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், நிஜ வாழ்க்கையில் தந்தை-மகனான விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
தனிமனித சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளித்து, சித்தாந்த வாழ்க்கையின் பாதையில் இருந்து விலகிச் சென்றதால் குடும்பத்தாரால் விலக்கி வைக்கப்பட்ட ஒருவரின் கதையே மகான். அவர் தனது லட்சியங்களை எட்டினாலும் தனது மகன் அருகாமையில் இல்லாதது அவரை வாட்டுகிறது. கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற தனது கனவு நனவானாலும், ஒரு தந்தையாக வாழ அந்த வாழ்க்கை அவரை அனுமதித்ததா? இந்தப் பரபரப்பான, அதிரடியான பயணத்தில் அவரது வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதே இந்தப் படத்தின் கதைக்களம்.
பட வெளியீடு குறித்து படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் கூறுகையில், “மகான் திரைப்படத்தை Prime Video-இல் வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். முழுக்க முழுக்க ஆக்‌ஷன், நாடகம் மற்றும் உணர்ச்சிகளின் கச்சிதமான கலவையை உருவாக்குவதில் கார்த்திக் சுப்பராஜ் ஓர் அற்புதமான பணியைச் செய்துள்ளார். இந்தப் படத்தில் பல திறமையான மற்றும் அற்புதமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் அமேசான் ஓடிடி தளத்தில் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள ரசிகர்களைச் சென்றடைய நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்”என்கிறார்.