கார்பன் பட விமர்சனம்

விஜய் ஆண்டனி நடிப்பில் ‘அண்ணாதுரை’ படத்தை இயக்கிய சீனிவாசனின் அடுத்த படம். நாயகன் விதார்த்தின் 25வது படம்.
கார்பன் என்பது நாம் எழுதியவற்றின் நகல் ஆகும். இதில் நாயகன் காண்கின்ற கனவுகள் அப்படியே நிஜமாக நடக்கிறது.
அதெப்படி என்பது திருப்பங்களுடன் கூடிய திரைக்கதை.
அம்மாவை இழந்த இளைஞர் விதார்த், ஒரு பிரச்சினையில் அப்பா மாரிமுத்துவுடன் முரண்படுகிறார். அதன்பிறகு அப்பா மகன் இருவரும் பேசிக் கொள்வதில்லை. இந்நிலையில் ஒரு நாள் விதாரத்துக்கு தன் அப்பா காரில் அடிபடுவதாக ஒரு கனவு வருகிறது.
அந்த விபத்தை தடுக்க நினைப்பதற்குள் அது நடந்து முடிந்து விடுகிறது. கனவில் கண்ட அதே இடம். அதே கார். தந்தை மீது காரை மோதியவர் யார் என்பது மட்டும் தெரியாமல் தடுமாற…
இதற்குள் தந்தை கோமா நிலைக்கு போய் விடுகிறார். தந்தையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர ரூ. 10 லட்சம் தேவைப்படுகிறது. பணம் கிடைத்ததா? தந்தை காப்பாற்றப்பட்டாரா? விபத்தை ஏற்படுத்தியவர் யார்? ஆது என் கனவில் முன்னதாகவே தெரிய வேண்டும்? அத்தனை கேள்விகளுக்கும் சரியான விடை வைத்திருக்கிற திரைக்கதை படத்தின் முதல் பலம்.
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் விதார்த்தை பாராட்டியே ஆக வேண்டும். கதை சஸ்பென்சுக்குள் வந்த நிலையில் இவரது நடிப்பும் துடிப்பும் வேறு லெவல்.
இடைவேளையில் தான் அறிமுகமாகிறார், நாயகி தான்யா. கிளைமாக்ஸ் வரை கனிவும் மிரட்டலுமாய் ‘இது தான்யா நடிப்பு’ என சொல்ல வைக்கிறார். நேர்மையான அப்பாவாக மிரட்டியிருக்கிறார், மாரிமுத்து.
இரண்டு வில்லன்கள் இருந்தாலும் அவர்களால் பெரிய அளவில் பாதிப்பில்லை.
போலீசாக வரும் மூணார் ரமேஷ் இடம் மாறும் காட்சிகள் ட்விஸ்ட்டான திருப்புமுனை. ஹைலைட் ட்விஸ்ட். வார்டு பாய் வினோத் சாகரும் சிறப்பு.
நித்தீஷ் வீரா, வெங்கட், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி கேரக்டர் சிறப்பில் அசத்திப் போகிறார்கள்.
சாம் சி.எஸ். இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பு. விவேக் ஆனந்த்தின் ஒளிப்பதிவு கச்சிதம்.
கனவு… அதைத் ெதாடர்ந்து திரும்பத் திரும்ப வரும் காட்சிகள் ‘மாநாடு’ படத்தை நினைவு படுத்துகிறது.
எதிர்பாராத அந்த அதிரடி கிளைமாக்சுக்காகவே இயக்குனர் சீனிவாசனை கொண்டாடலாம்.
